கிச்சன் டிப்ஸ்...



பெரிய குண்டு கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி மைதா மாவில் தோய்த்து பொரித்தெடுத்து சென்னா கிரேவி செய்து இறக்கும்போது கத்திரிக்காயை அதில் சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் அருமையான கத்திரிக்காய் கோப்தா தயார். நாவல் பழத்தை மஞ்சள் தூள் கலந்த நீரில் கழுவி உப்பு தூளை தூவி சிறிது நேரம் கழித்து சாப்பிட்டால் தொண்டைக்கட்டோ, நாவில் நீல நிறமோ படியாது.
- நா.செண்பகா நாராயணன், பாளையங்கோட்டை.

மோர், தயிரில் ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு போட்டு வைத்தால் விரைவில் புளிக்காமலும், வாடை வராமலும் இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

தூதுவளையின் தண்டுப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக செய்து உலர்த்தி வைக்கவும். இந்த துண்டுகளை ரசம் வைக்கும்போது சேர்த்துக் கொண்டால் சுவையாகவும், உடலுக்கும் நல்லது.
- வே.யாழினி, பூங்குளம்.

வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டுப் பிசைந்து பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.
தோசை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை செய்தால் மணம் ஊரை கூட்டும். மைதா மாவை ஒரு மெல்லிய துணியில் சிறு மூட்டையாக கட்டி ஆவியில் வேகவைத்து ஆறியதும் உதிர்த்து உப்பு, ஓமம் அல்லது சீரகம் சேர்த்து பிசைந்து சீடை செய்தால் வாயில் போட்டதும் கரையும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

முட்டையின் வெள்ளைக்கருவை ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் கேக் செய்ய உபயோகப்படுத்தினால் கேக் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும். வீட்டில் செய்கின்ற நாணுக்கு ஈஸ்ட் அவசியமில்லை. மைதாவுடன் புளிப்பு தயிர், பேக்கிங் பவுடர், உப்பு, உருக்கிய வெண்ணெய், சூடான பால் சேர்த்து அழுத்தித் தேய்த்து பிசைந்தால் மாவு மிருதுவாக இருக்கும். நன்கு உப்பிக் கொண்டு வரும். சுவையாகவும் இருக்கும்.

ஊறுகாய் பாட்டிலில் இருந்து எடுக்கும்போது முள் கரண்டியால் ஊறுகாயை எடுத்தால் அதிலுள்ள எண்ணெய் வடிந்து விடும். ஊறுகாய் மட்டும் வரும். இதனால் ஊறுகாய் எண்ணெயில் ஊறி கெட்டுப் போகாமல் இருக்கும். சாப்பிடுபவர்களுக்கும் எண்ணெய் சேராது.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

பிரெட் துண்டுகள் காய்ந்து விரைத்து விட்டால் தோசை சுடும் போது தோசையை திருப்பிப் போட்டு அதன் மீது ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் புதிதான பிரெட் போல் மிருதுவாக இருக்கும். தேங்காய் சட்னி ருசியாக இருக்க பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்துத் தாளிக்கும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டால் போதும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

வீட்டில் பழக்கூழ் தயாரிக்கும் போது ஒரு தேக்கரண்டி கிளிசரினைச் சேர்க்கலாம். இவ்வாறு செய்தால் 100 கிராம் வரை சர்க்கரை சேர்ப்பதை குறைக்கலாம். ஆப்பிள்கள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து தாளித்து கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
- ஆர்.அஜிதா, கம்பம்.