ரேடியோ ஜாக்கியானார் காஜல்



கர்நாடக மாநிலத்தில் முதல் முறையாக திருநங்கை சமூகத்தை சேர்ந்த காஜல் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பணியை துவங்கியிருக்கிறார். மங்களூரின் சமூக வானொலியான பண்பலை 107.8, கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த வானொலி மையம் முதல் முறையாக திருநங்கை ஒருவரை ரேடியோ  ஜாக்கியாக பணியமர்த்தியிருக்கிறது. தற்போது ஒவ்வொரு செவ்வாய் அன்றும் மாலை 5 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘சுபமங்களா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் காஜல்.

பெரும்பாலான திருநங்கைகளுக்கு திறமை இருந்தும் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் அப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட திருநங்கைகளின் போராட்டங்களின் வெற்றிதான்  இன்று காவல் துறை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் திருநங்கைகள் கால் பதித்தனர். இந்த சமுதாயம்  அவர்களுக்குக் கொடுக்கும் வலியை ஒரு சொல்லில் அடக்கிவிட முடியாது. அத்தனை வலிகளோடு தனது விடா முயற்சியில் இன்று ரேடியோ ஜாக்கியாக பணியாற்றுகிறார் காஜல்.

தன்னுடைய 14 வயதில் தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கத் துவங்கினார். மனதளவில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து 12ஆம் வகுப்பு தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றார். பல திறமைகள் கொண்ட காஜல் ஒரு நடனக்கலைஞர். பள்ளிப் படிப்பை முடித்தவர். மும்பை சென்று பார் டான்ஸராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சி மற்றும் தியேட்டர் தயாரிப்புகளுடன் இணைந்துள்ளார். ரங்கபூமி தியேட்டர் மூலமாகவே அவருக்கு ரேடியோ ஜாக்கி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது காஜல் பிராமவர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்.

அஞ்சல் வழியில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளார். வருங்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதே அவரது லட்சியம். ‘‘திருநங்கைக்கு வேலை கிடைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே எங்களால் எங்களது திறமைகளை நிரூபித்துக் காட்ட முடியும். என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதுதான் என் கனவு” என்கிறார் காஜல்.

- ஜெ.சதீஷ்