உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்படி?



வாசகர் பகுதி

* கிறிஸ்துமஸ் மரங்களை போல் புத்தாண்டு மரங்களும், பனி தேவதைகளின் பரிசுகளும் ரஷ்ய புத்தாண்டு விழாவின் சிறப்பு.

* பட்டாசுகளை வெடிப்பதால் கெட்ட சக்திகள் உள்ளே நுழையாமல் தடுக்க முடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை. ஆகவே பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாடுவது சீனர்களின் ஸ்டைல்.

* பிரிட்டிஷ், கொலம்பியா, கனடா மக்கள் குளிர்காலத்தில் வாங்கூவரைச் சுற்றியுள்ள பனிக்கட்டி போன்ற குளிர் நீரில் நீராட்ட உடை அணிந்து புத்தாண்டைக் கொண்டாடுவர்.

* அனோநோவா என்ற போர்ச்சுக்கீசிய பெயரால் புத்தாண்டை வரவேற்கும் பிரேசில் மக்கள் அன்று அரிசி, பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் எதிர்காலம் நல்லபடியாய் இருக்கும் என நம்புகிறார்கள்.

* பிரான்சில் டிசம்பர் 31-ம் தேதி தொடங்கும் புத்தாண்டு ஊர்வலம் ஜனவரி 1 அன்று ஈஃபில் டவரருகே முடியும். ஆடல், பாடல்களுடன் அமர்க்களமாய் கொண்டாடப்படும் குதூகல ஊர்வலம் இது.

* பாரம்பரிய உணவு உண்ணல், விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய நடனங்கள், எதிர்காலம் குறித்த ஜோசியங்கள் என பல்கேரிய புத்தாண்டு சிறகடிக்கும்.

* கம்போடியாவில் நம் ஊர் ஹோலி போல வண்ண நீர்கள் தெளிப்பதும், ஈரானில் நம் அம்மன் கோயில் போல் தீமிதித்து பக்தி செய்வதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள். நாம் பாலினைக் கரைப்பது போல் முளையிட்ட கோதுமையை ஈரானியர்கள் நீரில் கரைக்கின்றனர்.

* செல்ட் இன மக்கள் இறந்து போன மூதாதையர் பேய், பிசாசுகளாக வந்து தொல்லை கொடுப்பதாகக் கூறி, அவர்களை விரட்ட புத்தாண்டு விழா எடுக்கின்றனர். இந்த விழா சம்ஹைன் என்ற பெயரில் அக்டோபரில் கொண்டாடப்படும்.

* ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆறு நாட்கள் நீடிக்கும். கடற்கரையில் லட்சக்கணக்கானவர்கள் திரள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தின் உற்சாக மணியோசை முழக்கங்கள் விண்ணை அதிர வைக்கும். சிட்னி நகரின் துறைமுகப் பாலத்திலிருந்து 80,000-க்கும் அதிகமான வண்ண வெடிகள் வெடிக்கப்படும். இந்த வண்ண வேடிக்கைகளை சுற்றியுள்ள சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து காண முடியும்.

* சால்சா நடனம், தீம் பார்ட்டிகள் என இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். இன்று வரை புத்தாண்டில் முதன் முதலாக வீட்டிற்கு வரும் நபர் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்ற பாரம்பரிய நம்பிக்கை உயிர்த்திருக்கிறது. புத்தாண்டு பரேடுகள், இசை, நடன கலைஞர்கள், டிரம்ஸ் வாசிப்பவர்கள் என இவர்களின் புத்தாண்டு ஊர்வலம் ஒரு ஸ்பெஷாலிட்டி.

* ஜெர்மனியில் புனித சில்வஸ்டர் நினைவு நாளாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தேவாலயத்தில் நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும்போது அடுத்தவரை ஆரத் தழுவியும், முத்தமிட்டும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்கின்றனர். அன்று முட்டைக்கோஸ், கேரட், பன்றி இறைச்சி போன்றவை சாப்பிட்டால் நிதிவளம் நிறைந்த ஆண்டாக அவ்வாண்டு இருக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை.

* தமிழ்நாட்டில் நண்பகல், மாலை வேளைகளில் தொலைக்காட்சி பட்டிமன்றம், புத்தம் புது சினிமா பார்ப்பதுமாக புத்தாண்டை வரவேற்பது தெரிந்த சங்கதிதானே!

- மல்லிகா குரு, சென்னை-33.