நீரோடு செல்கின்ற ஓடம்முத்துலட்சுமி ராகவன்

இலக்கிய உலகத்திற்குள் எட்டிப் பார்க்காத குடும்பத் தலைவிகள் பெரும்பாலும் விரும்புவது குடும்ப நாவல்கள், பாக்கெட் நாவல்கள்தான். வீட்டு வேலைகள் போக, பொழுதுபோக்கிற்காக குடும்பத் தலைவிகள் படிக்கும் பாக்கெட் நாவல் உலகில் கொடிகட்டி பறக்கும் ராணிகளுள் ஒருவர் முத்துலட்சுமி ராகவன். 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். தன் வாழ்வின் வலிகள், அதை தாண்டிய தனது எழுத்து, அதன் வெற்றி என்று தன் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முத்துலட்சுமி ராகவன்.

“பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை. அப்பா கவர்மென்ட் ஸ்கூல் ஹெட் மாஸ்டர். அம்மா இல்லத்தரசி, ஆனால் நன்கு படித்தவர். அப்பா, அம்மா இருவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருந்தது. அப்பா ஜனரஞ்சகமான கதைகளை படிப்பார். அம்மா இலக்கியத் தரமுள்ள கதைகளை வாசிப்பார். அதனால்தானோ என்னவோ எனக்கும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அம்புலி மாமாவில் தொடங்கிய என் வாசிப்பு கல்கி, தி.ஜா என தீவிர வாசிப்பாக மாறியது. சில வரிகளை படித்தாலே அது இன்னார் எழுதியது என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு நிறைய படித்தேன்.

ஒரு குறிப்பிட்ட வயதில் செலக்டிவ்வாக படிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பே பத்து வயதில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு அசம்பாவிதத்திற்குப் பிறகு நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படியே என் வாசிப்பும் எழுத்தும் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்துக்கொண்டிருக்கும்போதே இருபது வயதில் திருமணம். திருமணத்திற்கு பின் படிப்பைத் தொடர்ந்தேன். எம்.ஏ. படித்தேன். படிப்பு முடிந்ததும் தபால் துறையில் பணிக்குச் சேர்ந்தேன். 24 வயதில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் விடுமுறையில் இருந்தேன். நான் கவிதைகள் எழுதுவேன் என என் கணவருக்குத் தெரியும்.

‘உன் கவிதைக்குள்ளே கதை இருக்கு. நீ கவிதைக்குப் பதில் கதை எழுது’ என்று அந்த சந்தர்ப்பத்தில் என்னிடம் சொன்னார். அதனால் முதன் முதலில் ‘நிலா வெளியில்’ என்றொரு நாவல் எழுதினேன். பிறகு மேலும் சில நாவல்களை எழுதினேன். அப்போது அதில் ஒன்றை பிரபல பதிப்பகம் ஒன்றிற்கு அனுப்பி வைத்தேன். அது பிரசுரிக்க தகுதி அற்றது என அவர்கள் அதை குப்பையில் தூக்கி எறிந்து விட்டார்கள். அதனால் மனமுடைந்து அதன் பிறகு எழுதிய அனைத்தையும் என்னிடமே வைத்துக்கொண்டேன்.

கிட்டதட்ட 16 வருடங்கள் நாவல்கள் எழுதுவது, அதைப் பத்திரப்படுத்துவது என்று செய்து கொண்டிருந்தேன். இதற்கிடையில் என் உடல் வேறு என்னை மிகவும் படுத்திக்கொண்டிருந்தது. கண் பார்வை மங்கும், போய் சோதித்துப் பார்த்தால் கண்ணில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்பார்கள். காலில் பிரச்சனை வரும், ஏன் என்று கண்டுபிடிக்க முடியாது. இப்படியாக என் 24 வயதில் ஆரம்பித்த பிரச்சனை ஒருநாள் தீவிரமாகியது. ஆம். என் முப்பதாவது வயதில் ஒருநாள் ரத்த வாந்தி எடுத்து கோமாவிற்குச் சென்று விட்டேன்.

அப்போதுதான் எனக்கு மூளையில் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு பல பல சிகிச்சைகள். பல நாள் படுக்கை. சிகிச்சைகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல குணமானேன். ஆனால் அதன் பக்கவிளைவுகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. என் சிகிச்சைக்காக என் கணவர் நிறைய செலவு செய்தார். நம்மால் மற்றவர்களுக்கு சிரமம் என எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அதனால் கட்டாயம் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து மறுபடி வேலைக்குப் போனேன்.

சிகிச்சை முடிந்து அலுவலகம் சென்ற போது உடன் வேலை பார்ப்பவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். அதனால் அந்த காலகட்டத்தை என்னால் கடக்க முடிந்தது. காசநோய் தீவிரமானதற்குப் பிறகு சிகிச்சை எடுத்ததாலும் முதுகுத்தண்டு வழியாக சிகிச்சை அளித்ததாலும் என்னால் இப்போது கூட இயல்பாக நடக்க முடியாது. இப்படி இருந்த போதும் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எழுதிக்கொண்டே இருந்தேன்.

2007 ஆம் ஆண்டு நான் பணிபுரிந்த அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. அங்கிருந்து எனக்குத் தேவையான புத்தகங்களை எனக்கு தெரிந்த ஒரு பையன் கொண்டுவந்து தருவார். அப்போது ஒரு புத்தகத்தில் அருணோதயம் பதிப்பகத்தின் விலாசம் கிடைத்தது. எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் கணவர் அருணன் நடத்தும் பதிப்பகம் அது. அருணன் சாருக்கு நான் ஒரு கடிதம் போட்டேன். ‘பல வருடங்களாக நான் நிறைய நாவல்கள் எழுதி வீட்டில் வைத்திருக்கிறேன். அதனை நீங்கள் பிரசுரிப்பதானால் நான் அவற்றை அனுப்பி வைக்கிறேன்’ என்று விளக்கமாக தொலைபேசி எண்ணுடன் கடிதம் எழுதி இருந்தேன்.

நான் கடிதம் அனுப்பிய மறுநாளே எனக்கு ஒரு போன் வந்தது. ‘நீங்கள் உங்கள் கடிதத்தில் வாசகங்களை பயன்படுத்தி இருந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் நாவல்களில் ஒன்றிரெண்டை அனுப்பி வையுங்கள். நன்றாக இருந்தால் நான் பிரசுரிக்கிறேன்’ என்று சொன்னார். அதன் பிறகு நான் சில நாவல்களை அனுப்பி வைத்தேன். என் முதல் நாவல் ‘நிலா வெளியில்’ மற்றும் அந்த பிரபல பதிப்பகம் ரிஜெக்ட் செய்த நாவல் என இந்த இரண்டு நாவல்களையும் இணைத்து ஒரே புத்தகமாக அருணன் சார் வெளியிட்டார். கிட்டதட்ட 16 வருடங்களுக்குப் பிறகு வீட்டுக்குள் தேங்கி இருந்த கதைகள் முதன் முதலாக புத்தகமாக வெளிவந்தது. அது மக்களிடையே வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து என் புத்தகங்களை அருணன் சார் வெளியிட்டார்.

அதன் பிறகு அவரது மகன் அறிவாலயம் பதிப்பகத்தில் என் கதைகளை வெளியிட்டார். மாதம் இரண்டு நாவல்கள் வந்து விடும். ஒரு சமயம் மாதத்தில் மூன்று நாவல்களும் வெளிவந்தது உண்டு. கிட்டதட்ட 30 நாவல்கள் வெளிவந்த பிறகு ஏதோ ஒரு வேகத்தில் என் கதையை ரிஜெக்ட் செய்த அந்த பிரபல பதிப்பகத்திற்கு கடிதம் எழுதினேன். ‘நீங்கள் என் புத்தகத்தை ரிஜெக்ட் செய்து விட்டீர்கள். ஆனால் இப்போது கிட்டதட்ட நான் எழுதிய 30 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன’ என எழுதி இருந்தேன்.

அதற்கு அவர் ‘பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா இவர்கள் எல்லாம் டைப் செய்து கதையை நீட்டாக அனுப்புவார்கள். நீங்கள் நோட்டில் கையில் எழுதி வைத்திருந்ததை அனுப்பி இருந்தீர்கள். உங்கள் ப்ரசன்டேஷன் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் ரிஜெக்ட் செய்தேன். தற்போது அனுப்பி வையுங்கள். நான் நன்றாக இருந்தால் கண்டிப்பாக பிரசுரிக்கிறேன்’ என்றார்.

அதன் பிறகு நான் ‘மாறியது நெஞ்சம்’ என்ற தலைப்பில் ஒரு நாவலை அனுப்பி இருந்தேன். அவர் நான் அனுப்பிய கதையை பிரசுரித்தார். பிறகு எனது வேறு பல நாவல்களையும் பிரசுரித்தார். அவர் வேறு யாருமல்ல... பாக்கெட் நாவல் அசோகன்தான். என் கேரியர் டேக் ஆஃப் ஆன காலகட்டம் அது. எனக்கு சரியான பிரேக் கிடைத்தது. எனது நாவல்கள் மட்டும் தொடர்ந்து குடும்ப நாவலின் சிறப்பு வெளியீடாக வெளிவந்தது. எனக்கு சமூகத்தில்
நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

என்னால் சரியாக நடக்க இயலாததால் பெரிதாக ஊர்,  உலகம் சுற்றியதில்லை. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில் இருந்து தான் கதைக்கான கருக்களை எடுக்கிறேன்.’ஏழு ஸ்வரங்கள்’ என்ற என் நாவல் ஏழு பாகமாக வெளிவந்தது. அதில் காஞ்சிபுரத்தில் பிறந்த ஒருவனின் ஏழு பிறவிகளின் கதையை எழுதி இருப்பேன். அந்த கதை எழுதி முடித்த பிறகு தான் காஞ்சிபுரத்தையே பார்த்தேன். இதில் ஏழு காலக்கட்டங்களை பதிவு செய்திருக்கிறேன். இதற்காக நிறைய படித்தேன். இந்த நாவலை என்னுடைய மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்.

இதுவரை 143 நாவல்கள் எழுதி இருக்கிறேன். சில சிறுகதைகளும் எழுதி இருக்கிறேன். கல்கி மாதிரி நானும் பாக நாவல் ஸ்பெஷலிஸ்ட். இது வரை எட்டு பாகங்கள் கொண்ட நாவல்களை கூட எழுதி இருக்கிறேன். இத்தனை நாவல்கள் எழுதி இருந்தாலும் ஒரு கதையின் சாயல் மற்றொன்றில் இருக்காது.
 
எனது கதைகள் எல்லாம் சந்தோஷ முடிவையே கொண்டிருக்கும். பெண்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். அதனால் அவர்கள் மன ஆறுதலுக்காக படிக்கும் கதைகளிலும் ஏன் சோகம் இருக்கவேண்டும்? எனவே என் கதைகள் பாஸிட்டிவ் எனர்ஜி கொண்டவையாகவே இருக்கும். மலையில் இருந்து வீழ்ந்த ஒருவன் ஒரு வேரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் போது அந்த வேரும் அறுந்து விழும் நிலைக்குப் போக, அந்த நேரத்தில் மலை உச்சி மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து சொட்டிய ஒரு துளி தேனை அவன் ரசித்துக் குடித்தான் என ஒரு கதை சொல்லுவார்கள்.

அது போல பெண்கள் தங்களுக்கு இருக்கும் பல சுமைகளுக்கு நடுவே என் கதையை தேன் மாதிரி அருந்த வேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால் நானும் சோகம் சொட்ட ‘நீரோடு செல்கின்ற ஓடம்’என்றொரு ஒரு நாவல் எழுதி இருக்கிறேன். நீரோடு செல்கின்ற ஓடம் என்றொரு பழைய பாடல் உண்டு. அந்த பாட்டினுள் இருக்கும் பெரும் சோகம் என்னுள் ஏற்படுத்தி இருந்த தாக்கம், அது ஏற்படுத்தி இருந்த வலி இந்த கதையில் இருக்கும். அது பல நாள் என் மனதில் ஊறி ஊறி இதை எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன். கதைக்கும் அந்த பாடலின் முதல் வரிகளையே தலைப்பாக வைத்தேன்.

அதன் பிறகு சில காலகட்டங்களுக்குப் பிறகு என் கணவர் ராகவன், தான் செய்து கொண்டிருந்த உரம் தயாரிக்கும் தொழிலை விட்டுவிட்டு லட்சுமி பாலாஜி என ஒரு பதிப்பகம் ஆரம்பித்தார். அதில் என் நாவல்களை வெளியிட்டார். வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு விஷ்ணு பப்ளிகேஷன் என ஒரு பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். அதிலும் என் கதைகள் தான் வெளிவருகின்றன.

எத்தனையோ கதைகள் எழுதி இருந்தாலும் ‘என்னவென்று நான் சொல்ல…’ என்பது தான் என் ஸ்டார் கதை என்று சொல்லலாம். சில உணர்வுகளை வார்த்தைகளால் உணர்த்த முடியாது. உணர மட்டுமே முடியும் என்பதற்காக வைக்கப்பட்ட தலைப்பு அது. எத்தனை கதை எழுதி இருந்தாலும் என் வாசகர்கள் அந்த கதைக்கு ஈடில்லை என்று தான் சொல்கிறார்கள். எங்களது ஒரே மகன் பாலச்சந்தர் டாக்டராக இருக்கிறார். வயதான பிறகு ஏற்கனவே இருந்த நோய்கள் போக சர்க்கரை, கர்ப்பப்பை பிரச்னை, கொலஸ்ட்ரால் பிரச்னை என கூடுதலாக பல இன்னல்களும் வந்துவிட்டன. ஆனால் இதையெல்லாம் தாண்டி எனது 200வது நாவலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

எனது பல நாவல்களை திருடி ஓர் இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்கள். அதை நான் கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பிறகு அந்த வேலையை நிறுத்திவிட்டார்கள். ஆனால் பல கமெண்டுகளை வாரி இறைத்தார்கள். ‘பாகம் பாகமாக எழுதுகிறார்களே. 100வது நாவலை ஆறு பாகமா எழுதி இருக்காங்க. அப்ப 200வது நாவலை 20 பாகமா எழுதுவாங்களோ என கிண்டல் அடித்து இருந்தார்கள். அதனை வைராக்யமாக கொண்டு என் 200 வது நாவலை 20 பாகமாக எழுதுவது என்ற கொள்கையோடு இருக்கிறேன். அதனால் தான் ஆறு, ஏழு என ஒன்பது பாகம் வரை போய் இருக்கிறேன். 20 பாகமும் சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

அதற்கான முயற்சியிலும் இருக்கிறேன். பல நோய்களுக்குக்கிடையில் இரவு நேரங்களில் கண்விழித்து நான் கஷ்டப்பட்டு எழுதுவதைத் திருடி அவர்கள் சம்பாதிப்பது என்ன நியாயம்? இது அறிவுத் திருட்டு இல்லையா? இது போன்று என் கதைகளில் வரும் சில பகுதிகளை சில படங்களில் கூட கையாண்டிருக்கிறார்கள். இது போன்ற விஷயங்கள்தான் மிகுந்த மன வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பு என் வேலையில் இருந்து விஆர் எஸ் வாங்கிவிட்டேன். ஆனால் நான் எழுதுவதை நிறுத்தவில்லை. என் 200 வது நாவலை 20 பாகமாக எழுதுவதற்கு என் உடல் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். எத்தனையோ எழுத்தாளர்களின் கதைகளை படித்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் வாஸந்தி தான்.

எழுத வருபவர்கள் யாராக இருந்தாலும் அடுத்தவர் பாணியை காப்பி அடிக்க வேண்டாம். உங்களுக்கென தனி பாணியை உருவாக்குங்கள். என்னையும் சிலர் இவர்களை மாதிரி எழுதுங்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. எனக்கென ஒரு பாணியை உருவாக்கினேன். இது எம்.ஆர். எழுத்து என்று என் வாசகர்களுக்குத் தெரியும். அது போல் உங்கள் கதையையும் நாலுவரி படித்தவுடனே இது உங்கள் கதை என மக்கள் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் எழுதுங்கள். உங்கள் எழுத்தில் காணப்படும் உங்களுக்குச் சொந்தமான கிரியேட்டிவிட்டி என்றும் உங்கள் பேர் சொல்லும்” என்கிறார்.

- ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்