தொடரும் வேட்டை



காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து குத்துச்சண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் போன்ற வீர விளையாட்டுகளில் ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் எல்லா விளையாட்டுத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. தங்களுக்கென தனி அடையாளத்தையும், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும்  பெண்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்திய அணியின் சார்பில் 60 வீரர்கள் கலந்து கொண்டனர். 63 கிலோ எடை பிரிவில் நியூசிலாந்து வீராங்கனை டைலாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் சாக்கி மாலிக்.  அரியானா மாநிலத்தில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்தே மல்யுத்த போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வந்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மல்யுத்த ஒலிம்பிக் போட்டியில் 58 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தார்.  காமன்வெல்த் வெற்றிக்குப்பின் பேசிய சாக்சி மாலிக்...
 
“கடுமையான போட்டிகளுக்கு நடுவே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற போட்டிகளின் வெற்றி என்னை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு” என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

- ஜெ.சதீஷ்