விருப்பம் போல் முடியினை நீளமாக்கலாம்... அடர்த்தியாக்கலாம்!
முடி உதிர்தல், வழுக்கை தலை, அடர்த்தியாக முடி இல்லை என பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு ஹேர் எக்ஸ்டென்ஷன். இது புதிய முடிகளை அறுவை சிகிச்சை மூலம் தலையில் பொருத்துவதில்லை. மாறாக நம் தலையில் இருக்கும் முடியுடன் புதிய முடியை ஒட்டி விடுகிறார்கள். ரொம்ப எளிதான ஒன்றாக இருப்பதால் பல நாடுகளில் இருக்கும் மக்களும் இந்த வகை ஹேர் எக்ஸ்டென்ஷன்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் பொறுத்தவரை சினிமா நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் மணப்பெண் அலங்காரத்திற்கு இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த எக்ஸ்டெண்ஷன் முடிகளை சென்னையை சேர்ந்த சதீஷ் காந்தி என்பவர் திருவொற்றியூரில் ‘அல்லூரி ஹேர் புராடெக்ட்ஸ்’ என்ற பெயரில் முடிகளை தயாரித்து இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். ஹேர் எக்ஸ்டெண்ஷர்கள் உருவாக்கம் குறித்து விளக்கம் அளித்தார். ‘‘நான் சென்னைவாசிதான். எம்.பி.ஏ படிச்சிட்டு ஆடைகளை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தேன். என்னிடம் ஆடைகளை வாங்கிக் கொண்டிருந்த ஒருவர் முடி சம்பந்தமான வேலை ஒன்று உள்ளது என்றும் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார். அது குறித்து விசாரித்த போதுதான், பலருக்கு முடியின் தேவை அதிமாக இருப்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அந்த தொழில் இன்ட்ரஸ்டிங்காகவும் இருப்பதால், அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விரும்பினேன்.
வெளிநாடுகளில் வாழும் பெண்கள், தங்களுடைய முடியினை பெரிதாக்க நீட்டிப்பு என்று சொல்லக்கூடிய ஹேர் எக்ஸ்டென்ஷர்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். நம்மூரில் சவுரி முடியை எப்படி பெண்கள் தங்களுடைய கூந்தலில் பின்னுகிறார்களோ அதே போல சில மெஷின்களை வைத்து பழைய முடியுடன் புதிய முடிகளை ஒட்ட வைத்து பல மாதங்கள் வரை பராமரிக்கலாம் என தெரிந்து கொண்டேன். இந்தியாவில் இது குறித்து அதிகம் விழிப்புணர்வு இல்லாததால் இந்த முடி நீட்டிப்பு முறையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இந்த முறையை அதிகம் விரும்புகின்றனர்.
இங்கு விழிப்புணர்வு இல்லையென்றாலும் இந்தியாவில் இருந்துதான் அதிகமான முடி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நாமே செய்யலாம் என தோன்றியது. இதற்கான தனிப்பட்ட படிப்பு கிடையாது, ஆனால் வெளிநாட்டில் இதற்கான பயிற்சி இருப்பதாகவும் அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம் என சொன்னார்கள்.
முடி நீட்டித்தல் முறையை பற்றி அறிந்து கொள்ள சீனாவிற்கு பயணித்து, முழுமையாக கற்றுக் கொண்டேன். அங்கு ஒரு வகையான திரவங்கள் கொண்டுதான் பலவிதமான முடிகளை ஒன்று சேர்த்து புதிய வகை முடிகளை உருவாக்கி வந்தனர். இந்த மாதிரி செய்யாமல் முழுக்க முழுக்க கைகளால் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.
இந்த வேலை அதிகம் நேரம் பிடிக்கக் கூடியது. 99% பெண்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலையாகவும் இது இருந்தது. மேலும் பெண்கள் தங்களுடைய முடிகளை நன்கு பராமரிக்கக்கூடியவர்கள். அதனால் இந்த வேலையை செய்ய அவர்களுக்கு சுலபமாகவும் இருக்கும் என்று முடிவு செய்தேன். திருவொற்றியூரில் உள்ள என் இடத்தில் கடை மற்றும் கம்பெனி ஒன்றையும் தொடங்கினேன்.
அது மீனவர்கள் வசிக்கும் பகுதி என்பதால், அங்குள்ள பெண்கள் பலர் என் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தனர். மீனவ கிராமத்தில் உள்ள ஆண்கள் காலையில் கடலுக்கு சென்றால் மாலை தான் கரைக்கு திரும்புவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் என்னுடைய நிறுவனத்திற்கு வேலை செய்வதற்கு வந்தனர்’’ என்றவர் எப்படி முடிகளை தயார்படுத்துகிறார் என சொல்லத் தொடங்கினார்.
‘‘முதலில் முடி வெட்டும் இடத்தில் இருந்து முடியை எடுத்து வருவோம். முடியில் எது தலை, எது கால் என தெரிய வேண்டும் அப்போது தான் முடியை தயார்படுத்த முடியும். அதன் பிறகு ஒவ்வொரு முடியையும் தரம் பிரிப்போம்.
அதில் முடிக்கு டை போன்ற நிறமிகள் பயன்படுத்திய முடிகளை ஒதுக்கி விடுவோம். அதே போல வெள்ளை முடி மற்றும் ஈறு, பேன்கள் இருந்தாலும் ஒதுக்கி வைத்து விடுவோம். நல்ல முடிகளை கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்து விடுவோம். அடுத்து ஈறு, பேன்கள் இருக்கும் முடியை எடுத்து அதை கைகளால் சுத்தம் செய்வோம். இப்படி ஒவ்வொன்றாக தரம் பிரித்து முடியை வரிசைப்படுத்துவோம். முடியில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டையடிக்கும் போது எடுக்கப்படும் முடி. இந்த முடியை முதல் தரம் என்று சொல்வார்கள். அடுத்து பெண்கள் தலை சீவும் போதே எடுக்கப்படும் முடி. இது இரண்டாம் ரகம். இந்த இரண்டாம் வகை முடியை நாங்கள் பயன்படுத்துவதில்லை. முடிகளை நன்கு தரம் பிரித்தவுடன் அதை நன்றாக சுத்தம் செய்து வாடிக்கையாளர்கள் கேட்கிற மாதிரி வகைகளில் ஒவ்வொரு முடியாக ஒட்டி புதிய முடியை உருவாக்குவோம்.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்த பின்னர்தான் அவர்களுடைய முடியின் நிறம் மற்றும் தலையின் அளவு எந்த மாதிரியான முடி வகையினை கேட்கிறார்கள் என கேட்டு அதன் பின்னர் முடியை தயாரிக்க தொடங்குவோம். கிட்டதட்ட ஒரு நீளமான தலை முடியை உருவாக்க ஒரு மாதம் பிடிக்கும். பல வகைகளில் முடியை பொருத்தினாலும் இரண்டு வகைகளில் இந்தியாவில் அதிகம் பேர் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்கிறார்கள்.
அதில் முதலாவது தலையில் க்ளோ என சொல்லக்கூடிய ஒருவிதமான கிளிப்புகளை வாடிக்கையாளர்களின் தலைமுடியுடன் இணைத்து புதிய முடியையும் சேர்த்து ஒட்டி விடுவோம். இதில் இரண்டாவது புதிதாக தயாரித்திருக்கும் முடியில் கிளிப்புகள் இருக்கும். அதை நம்முடைய தலைமுடியுடன் மாட்டிக் கொண்டால் போதும்.
இதை கழட்டியும் வைத்து விடலாம். புதிதாக தயாரிக்கும் முடியை நன்றாக பராமரிக்கும் பட்சத்தில் 6 மாதங்கள் அப்படியே இருக்கும். புதிய முடியை தலையில் பொருத்தியவுடன் எப்போதும் போல் நாம் பயன்படுத்தும் ஷாம்புகளையே பயன்படுத்தலாம். பல நிறங்கள் மற்றும் பல வகை முடிகளால் செய்யப்பட்ட எக்ஸ்டென்ஷன்கள் எங்களிடம் உள்ளது. இதன் மூலம் ஒரே ஹேர் ஸ்டைலை பயன்படுத்தாமல் பல வகையான ஹேர் ஸ்டைல்களையும் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்’’ என்கிறார் சதீஷ் காந்தி.
மா.வினோத்குமார்
|