தமிழகத்தில் முதன் முறையாக ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ
காவலர்களை கத்தியால் தாக்கி தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடியை முதன் முறையாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டுப் பிடித்திருப்பது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தப் பெருமைக்குசொந்தக்காரர் காவல் உதவி ஆய்வாளர் மீனா.
என்ன நடந்தது..?
சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதைத்தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில், தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்ட கெளதம் மற்றும் அஜித் இருவரையும் கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய சூர்யா என்கிற நபரை பிடிப்பதற்கு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்காவின் வீட்டில் சூர்யா பதுங்கி இருப்பதாகத் தெரியவர, அங்கு சென்ற உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான தனிப்படை, சூரியாவைக் கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது தான் சிறுநீர் கழிக்க வேண்டுமென சூர்யா கேட்டதைத் தொடர்ந்து நியூ ஆவடி சாலையில் இருக்கும் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே காவல் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது சூர்யா இளநீர் கடை அருகே பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அமானுதீன் மற்றும் சரவணன் ஆகியோரை தாக்கியுள்ளார். உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியை காட்டி சூர்யாவிடம் எச்சரிக்கை விடுத்தபோதும், தனது கையில் இருந்த கத்தியால் காவலர்களை மீண்டும் தாக்கிவிட்டு, தப்பி செல்ல முயன்ற ரவுடி சூர்யாவின் இடது கால் முட்டியில், உதவி காவல் ஆய்வாளர் மீனா துப்பாக்கியால் சுட்டு சூர்யாவை பிடித்திருக்கிறார்.துரிதமாக செயல்பட்டு ரவுடி சூர்யாவை சுட்டுப் பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மீனாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் இவருக்கு குவிந்து வருகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் உதவி ஆய்வாளர் மீனா கூறியவை...
*குற்றவாளிகளை கைது செய்ய செல்லும்போது அவர்களின் பின்னணி குறித்து அறிந்த பிறகே செல்ல வேண்டும்.
*இரவில் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது ஆயுதங்களை எடுத்து செல்லலாம் என்ற உத்தரவு உள்ளது.
*குற்றவாளியை சுடவில்லை என்றால் காவலர்களை இழந்திருப்பேன்.
யார் இந்த மீனா?!
தமிழகத்தின் பேசு பொருளாக மாறியிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் மீனா, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனக்குப் பிடித்த காவல்துறை பணியில், குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி சேர்ந்துள்ளார். பணியில் இணைந்த பிறகு இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனது குடும்பத்துடன் தற்போது புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்.
2009ல் காவல்துறையில் பணியில் சேர்ந்தவர், முதலில் ஆயுதப்படையில் பணியாற்றியிருக்கிறார். பிறகு 2016ல் எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சிபெற்று, தலைமை செயலக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, உதவி ஆய்வாளர் பயிற்சியின்போது துப்பாக்கிச் சூட்டில் பதக்கம் பெற்றவருக்கு, குற்றப் பிரிவில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில், கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றினார். அதன் பிறகு, உதவி ஆணையரின் தனிப்படை பிரிவில் பணியாற்றி பல குற்றவாளிகளை பிடித்துள்ளார். தற்போது, அயனாவரம் காவல் உதவி ஆணையர் தனிப்படை பிரிவில் தலைமை அதிகாரியாக பல குற்றவாளிகளை தனியாகச் சென்று கைது செய்திருக்கிறார் மீனா. மிகச் சமீபத்தில், அயனாவரம் பகுதியில் நடந்து சென்ற நபரை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற சம்பவத்தில், அன்றைய இரவுக்குள்ளாகவே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆகாஷ், சுபாஷ், பிரவீன் ஆகிய மூன்று குற்றவாளிகளை தனியாக சென்று கைது செய்து வந்துள்ளார். இந்த சம்பவத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் உதவி ஆய்வாளர் மீனாவை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரி நாகராஜன்
பூசணி விதைகளின் மகிமை!
இந்தியாவைப் பொறுத்தவரை மருந்துத் தயாரிப்புகளில்பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
*இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து, வைட்டமின் இ ஆகிய சத்துக்கள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகள் பெறலாம்.
*மக்னீசியச் சத்துக்கள் ரத்த அழுத்தம், உடல் எடையைக் குறைக்கும்.
*துத்தநாகச் சத்துக்கள் நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
*தாவர உணவுகள் மூலம் கிடைக்கக் கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
*டிரிப்தோபான் எனும் அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். விதையை நெய்யில் வறுத்துப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், மாதவிடாய் வலி, வெள்ளைப்படுதல் பிரச்னை நீங்கும்.
- எஸ்.மாரிமுத்து, சென்னை.
|