வாசகர் பகுதி-கேஸ் அடுப்பை பராமரிப்பது எப்படி?



*சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.

*அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடி விட்டு பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.

*அடுப்பு எப்போதும் தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

*அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவனக்குறைவாக இருக்கக் கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படலாம்.

*அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.

*சுய ரிப்பேர் செய்வது ஆபத்தானது. யாரையும் கேஸ் உபகரணங்களை பழுது பார்க்க அனுமதிக்கக் கூடாது. விற்பனையாளரிடமே இந்த பொறுப்பை விட்டு விட வேண்டும்.

*ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

*கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து விட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அனைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைத்திருக்கும் சிலிண்டர் வால்வை மூட வேண்டும். இது வால்விலிருந்து கேஸ் கசிவதைத் தடுக்கும்.

*பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணெயில் ஊறவைத்து பிறகு பழைய டூத்பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

*சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைத்தால் எளிதாக சுத்தமாகி பளிச்சென தோன்றும்.

*சில சமயம் எண்ணெய் காயவைக்கும் போது அதில் தண்ணீர் சிந்தி இருந்தால் தீ பற்றிக் கொண்டு விடும். அடுப்பை சட்டென்று அணைத்து எரியக் கூடிய பொருட்களை கூடிய மட்டும் அகற்றி விட்டுத் தள்ளிப் போய் விட வேண்டும். அதிலுள்ள தண்ணீர் தானாகவே எரிந்து அணைந்து விடும். தீ பெரியதாக இருந்தால் மேலே மணலைக் கொட்டலாம்.

*இரவில் படுக்கப் போகும் முன்பு ரெகுலேட்டரும் அடுப்பின் வால்வும் சரியாக மூடி இருக்கிறதா என கவனித்து
செல்லவும்.

- லதா நஞ்சன், நீலகிரி.