ஊனம் உடலுக்கு மட்டும்தான்... மனதிற்கு இல்லை!
ஊனம் என்பது உடலில் ஏற்படும் குறைகளால் வருவதல்ல... மனதில் குறையுடையவர்களே ஊனமுற்றவர்களாக கருதப்படுவர். சிறு வயதிலேயே கால்கள் செயல் இழந்தாலும், மனதால் பல்வேறு தடைகளை தாண்டி தனது கனவுகளை நோக்கி அடியெடுத்து வைத்து, அதில் வெற்றியும் கண்ட முதல் மாற்றுத்திறனாளி பெண் இசையமைப்பாளர் மேரி ஜெனிட்டா. இவர் தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள், இசையமைப்பாளராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, தன்னம்பிக்கை பேச்சாளராக பன்முகங்களோடு வலம் வருவதை குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
‘‘8 மாத குழந்தையாக இருக்கும் பொழுதே என்னுடைய இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது. நடக்க முடியாது என்று டாக்டர்களும் கைவிட்டுவிட்டனர். அம்மா தான் என்னை எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு செல்வார். பள்ளிக்கு கூட அப்படித்தான். அங்கு பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வந்து என்னை தூக்கிக் கொண்டு அழைத்து செல்வார். நாகர்கோவில்தான் என்னுடைய சொந்த ஊர். ரொம்ப வசதி எல்லாம் கிடையாது.
ஏழ்மையான மீனவர் குடும்பம். பிறந்த நாள் முதல் என்னுடைய கால்கள் இரண்டும் செயல் இழந்துவிட்டதால், என் கைகள் எனக்கு கால்களாக மாறின. சின்ன வயசில் அம்மாவால் என்னை தூக்கிக் கொண்டு போக முடிந்தது. நான் வளர்ந்த பிறகு அவங்களால் என்னை தூக்கிக் கொண்டு சுமக்க முடியவில்லை. அதனால் நான் கைகளால் ஊர்ந்துதான் பள்ளிக்கு போவேன். மேலும் என்னைப் படிக்க வைக்கவும் வீட்டில் பெரிய வசதி இல்லை. எட்டு வயதிற்கு பிறகு ஆசிரமத்தில் தங்கி அவர்களுடைய உதவியால் படித்தேன்.
என் அப்பாவிற்கு நான் நன்கு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்னு விருப்பம். அவர்களைப் போல் நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நான் மூன்றாவது படிக்கும் போதே அவருக்கு எங்கள் ஊரில் இருக்கும் வங்கியில் நான் மேனஜராக வேண்டும்னு ஆசைப்பட்டார். ஆனால், எட்டாம் வகுப்பு வரை ஒரு ஆசிரமத்திலும், பிறகு பன்னிரண்டாம் வரை வேறு ஆசிரமத்தில் படித்த எனக்கு பாடல்கள் எழுதுவதும், அதை பாடுவதும் ரொம்பவே பிடித்ததாக மாறியது.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போதே பல்வேறு பாடல், கவிதை மற்றும் பேச்சு என பல போட்டிகளில் பங்கு பெறுவேன். அதில் சக மாணவர்களை தோற்கடித்து முதல் பரிசு பெற்று இருக்கேன். பள்ளிப் படிப்பு முடிச்சதும் கல்லூரியில் சேர்ந்தேன். இளங்கலை படிக்கும் போது ஒரு பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றேன். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களிடம் சிறந்த பேச்சாளர் என்று விருது பெற்றேன்’’ என்றவர் தன் தந்தையின் கனவினை நிறைவேற்றியுள்ளார்.
‘‘இளங்கலை முடிச்சதும், சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.ஏ பட்டம் பெற்றேன். அதன் பிறகு வங்கி பணியில் சேர அதற்கான தேர்வினை எழுதினேன். அதில் மெரிட்டில் தேர்ச்சிப் பெற்றேன். அதன் பிறகு என் அப்பாவின் கனவினை நிறைவேற்ற எங்க ஊரில் உள்ள வங்கியின் கிளை ஒன்றில் மேலாளராக பணியில் சேர்ந்தேன். அவரின் கனவினை நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
என்னுடைய வங்கி மேலாளர் கனவுகள் மட்டுமில்லாமல் மற்ற அனைத்து விருப்பங்கள் மெய்ப்பட என் அப்பா, அம்மா, என் கணவர், என் மாமனார், மாமியார் என் மொத்த குடும்பமே எனக்கு உதவியிருக்கிறார்கள். அதன் பலனாகத் தான் என்னுடைய முதல் குறும்படம் ‘‘பாசக்காரி”க்காக, எட்டு சர்வதேச விருதுகளும், அதில் ஒன்று சிறந்த எழுத்தாளர் விருதும் எனக்கு கிடைத்தது. அடுத்ததாக எனது குடும்ப நண்பர் அகஸ்டின் இயக்கத்தில், எனது கணவரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘புதர்’ திரைப்படத்தில் பாடல்கள் இசையமைத்துள்ளேன். அந்த படத்தில் தமிழில் இரண்டு பாடல்களின் வரிகளையும் நானே எழுதியுள்ளேன்’’ என தனது திரையுலக பயணத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார்.
கோயம்புத்தூரில் வாழ்ந்து வரும் மேரி ஜெனிட்டா தனது வாழ்க்கையின் குறிக்கோள் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், அதற்காகவே திரைத்துறையில் தனது எழுத்தாளர் மற்றும் இசையமைப்பாளர் பயணத்தை துவங்கியதாக கூறுகிறார். ‘‘என்னுடைய தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை இரண்டையும் நான் எதற்காகவும் இழக்க மாட்டேன். கால்கள் செயல் இழந்ததால் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் நான் இழக்கவில்லை.
என்னோட அடுத்த படத்திற்கான வேலைகள் எல்லாம் முடிந்தது. விரைவில் அதற்கான பணிகளும் துவங்க இருக்கிறது. ஒரு வங்கி மேலாளராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து, எனது குடும்பத்திற்கு நல்ல மகளாகவும், குழந்தைக்கு தாயாகவும் என் கடமைகளில் இருந்தும் நான் விலகியதில்லை. எனது கணவருடன் சேர்ந்து ஆதரவற்றவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை சமூகத்திற்கு செய்து கொண்டிருக்கிறோம். ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதில் நான் ரொம்பவே உறுதியாக இருக்கிறேன்’’ என்கிறார் மேரி ஜெனிட்டா.
காயத்ரி
|