குழந்தைத்தனத்தில் வறட்சி
மூளையின் முடிச்சுகள்
திரைப்படங்களில், குழந்தைகள் சார்ந்த காட்சி எது வந்தாலும், அதில் மனம் ஒன்றி, குழந்தைத்தன நடிப்பில் கரைந்த மனித உள்ளங்கள் ஏராளம். 80களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரம் என்கிற அடைமொழியில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி, பேசி சுஜித்தா போன்றவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே வெற்றி பெற்றது. சில திரைப்படங்களில் குழந்தைகளை அடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, குழந்தைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள் திரைப்பட ரசிகர்களை பாதிக்கும்.

குழந்தைகள் மீதும், குழந்தைத்தனத்தின் மீதும் அதீத அன்பை திரை ரசிகர்கள் எப்போதுமே இப்படியாகத்தான் வெளிப்படுத்துவார்கள். ஆனால் இன்றைய சமூகச் சூழலில் குழந்தைகள் மீது பொறுப்புகளும், எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே திணிக்கப்படுகிறது என்று சொல்லலாம்.  அதுவும் மீடியாவில் நடைபெறும் போட்டிகள் வழியாக, குழந்தைகள் வயதுக்கு மீறிய புகழையும், பணத்தையும், ஆண்/பெண் சார்ந்த உறவுகளின் ஈர்ப்புகளையும், வர்க்க வேறுபாடுகளையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளை குழந்தைத்தன பருவத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கிறது என்றே சொல்லலாம். விளைவு, மீடியா வெளிச்சத்தால் வயதுக்கு மீறிய செயல்களில் குழந்தைகளில் சிலர் இறங்கி விடுகிறார்கள். பெற்றோர் குழந்தைகளை வளர்த்த நிலை மாறி, இன்று குழந்தைகள் பெற்றோரை வளர்க்கும் நிலையும் சில வீடுகளில் நிகழ்கிறது. அந்தளவுக்கு குழந்தைகளின் தேவைகள், ஆசைகள் அனைத்தும் சாப்பாட்டில் தொடங்கி, அவர்களின் உடை, அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், வீட்டில் உள்ள அவர்களின் பொருட்கள் வரை, குழந்தைகளுக்கான வீடாகவே இல்லங்கள் மாற ஆரம்பித்திருக்கிறது. இதனால், வீடுகளில் பெரும்பாலும் குழந்தைகளே முடிவெடுக்கும் உரிமை உடையவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, எட்டு வயதுக் குழந்தை, அவள் கேட்கும் உணவை செய்து தரவில்லை எனில், சாப்பிடாமல் இருப்பது, அழுவது, ரகளை செய்வது என்று ஆரம்பிக்கும் போது, பெற்றோர் குழந்தைக்கு பிடித்த உணவை மட்டும் செய்து தர தங்களை பழக்கிக் கொள்கிறார்கள். இன்னும் சில வீடுகளில், குழந்தைகளின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிற நபர்களாக பெற்றோர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும், அதிகாரம் செய்கின்ற குழந்தைகளாகவும் இன்றைய குழந்தைகள் மாறிவருகிறார்கள்.
ஒன்பது வயது சிறுவனின் அப்பா வெளியூரில் வேலை செய்துவர, சிறுவனோ, அப்பா என்பவர் தனக்குத் தேவைப்படுகின்ற பொருட்களை வாங்கிக் கொடுப்பவர் மட்டுமே என்றும், வேறு எதனை முன்னிட்டும் அவரின் மீதான பற்றுதல் தேவையில்லை என்ற ரீதியிலும் வளர்கிறான்.
ஒற்றைப் பெற்றோர்(single parent) அல்லது பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில், குழந்தைகளுக்கு அதீத சுதந்திரம் மற்றும் அவர்கள் எண்ணம் சார்ந்தே செயல்பட வேண்டிய கட்டாயத்தை பெற்றோர் மீது இன்றைய குழந்தைகள் திணிக்கிறார்கள். விளைவு, இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பு சார்ந்த அதீத சந்தேகங்களுடன் மனநல மருத்துவரை அணுகுகிறார்கள். ஆன்லைன் கேம் அடிக் ஷன் மற்றும் அதில் வருகிற ரீல்ஸ் போன்றவற்றை குழந்தைகள் பார்ப்பதை மட்டுமே பெற்றோர் கவனிக்கிறார்கள். சிலநேரம், கைபேசியில் வருகிற தவறான காணொளிகளை குழந்தைகள் பார்க்க நேரும்போது, அவர்களுடன் இருக்கும் குழந்தைகளோடு அதே மாதிரியாக தவறான செய்கைகளை செய்ய குழந்தைகள் முயற்சிக்கின்றனர். குழந்தைகள் வயதுக்கு மீறிய விஷயங்களை செய்ய ஆரம்பித்த பிறகே, பெற்றோர் பயந்து, மனநல மருத்துவரை நோக்கி வர ஆரம்பிக்கின்றனர்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், பாலியல் செய்கைகள், குழந்தைகள் சார்ந்த பாலியல் வன்புணர்வுகள், குழந்தைகளாலும் சில இடங்களில் நடைபெற ஆரம்பித்திருக்கிறது என்பதே இங்கு கசப்பான உண்மை.ஒரு எட்டு வயது சிறுவன், நான்கு வயது குழந்தையை பாலியல் ரீதியாக காயப்படுத்தி இருக்கிறான். இதில், இரண்டு பெற்றோர்களும் பயந்து, தங்கள் குழந்தைகளை அடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
அபார்ட்மென்ட், வில்லா போன்ற கேட்டெட் கம்யூனிட்டி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர், பணி நிமித்தமாக வெளியே சென்றதும், அங்குள்ள வளரிளம் பருவ வயதினர் இணைந்து பார்க்கும் காணொளிகள், பயன்படுத்தும் தவறான வார்த்தைகள், அவர்கள் வெளிப்படுத்துகிற பாலியல் செய்கைகளை குழந்தைகள் கவனித்து, அதைச் செய்ய முயற்சிக்கின்ற போக்கும் ஆங்காங்கே இலை மறை காயாக தெரிய வருகிறது.
பாலியல் சார்ந்த காணொளிகளைப் பார்த்து தவறான உடல் மொழியை குழந்தைகள் வெளிப்படுத்துவதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பள்ளிகளில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை, எதற்காக மனநல மருத்துவமனைக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கின்றனர் என்பது, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இன்று இருக்கிறது.
குழந்தைகளும், இளைஞர்களும் வருங்கால சமூக வளர்ச்சிக்கு விதையாக இருப்பவர்கள். அவர்களிடம் ஏற்படுகின்ற தவறான மாற்றங்கள், ஒட்டு மொத்த சமூகத்தையும் அச்சத்தில் ஆழ்த்திவிடும்.
சமூக மாற்ற சிக்கலில் குழந்தைகள் பாதிக்கப்படும் போது, அதற்கான சிகிச்சை முறைகளைவிட, பிஹேவியர் தெரபி, மனநல ஆலோசனை, மருத்துவர் குழந்தைகளுடன் உரையாடுதல் போன்ற வழிகள் மூலமாகவே குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சிக்க முடியும். இவற்றையெல்லாம் சரி செய்யும் முயற்சியாக, ஒட்டு மொத்த சமூகமும் வெளியில் வந்து மனம் திறந்து உரையாடல் நிகழ்த்த முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு, தங்களின் குழந்தையிடம் எதுவும் மாற்றமோ, பிரச்னையோ ஏற்படும் போது, நம் வீட்டில் இப்படி நடக்கலாமா? வீட்டில் இதைப் பேசலாமா? குழந்தைகளிடத்தில் இதைப் பற்றி பேசலாமா போன்ற கேள்விகளை பெற்றோர் தவிர்த்து, எப்படி குழந்தைகளை எதிர்கொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகளை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நோய் வருவதை விட, நோய் வருவதற்கு முன் உடலை பேணிக் காப்பதே சிறந்தது. அது எந்த வயதாக இருந்தாலும் சரி. இயல்புக்கு மீறிய, இயல்புக்கு எதிரான விஷயங்கள் நடைபெறும் போது, முறையான உதவிகள் மூலம், சூழலை பெற்றோர் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் குழந்தைகளாய் வளர்வார்கள். இதற்காகத்தான், மனநலம் குறித்தும் அதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் தொடர்ந்து பேசியும், எழுதியும் விழிப்புணர்வு கொடுத்து வருகின்றோம்.
குழந்தைத் தன்மைக்கான விஷயங்கள், குழந்தைகளிடத்தில் குறையும் போது, குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும், பொறுப்பும் சமூகம் சார்ந்து நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
எனவே குழந்தைகளுக்கான விளையாட்டு, குழந்தைகளுக்கான கதைகள், குழந்தைகளுக்கான இலக்கியங்கள், குழந்தைகளுக்கான திரைப்படங்களை உருவாக்க அரசும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் சமூகப் பொறுப்புணர்வோடு தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
|