சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள்



வாசகர் பகுதி

உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக படியும். குறிப்பிட்ட வகை உணவுகள், அதிக உடல் எடை, சில மருந்துகள், உணவு சப்ளிமென்ட்கள் ஆகிய அனைத்தும்தான் சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகிறது. 

அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து இயற்கை முறையில் வெளியேற்றுவது சிறந்தது. சிறுநீரகத்தில் உள்ள கற்களைப் போக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். அதே சமயம் வீட்டிலேயே சில பானங்கள் பருகுவது மூலம் சிறுநீரகக் கற்களை போக்க முடியும்.

*எலுமிச்சை தண்ணீர்

தேவையானவை: எலுமிச்சை - 1, தண்ணீர் - 4 டம்ளர், தேன் - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் எலுமிச்சையை பிழிந்து, இனிப்புக்கு தேவைப்பட்டால் தேன் சேர்க்கலாம். இதை நாள் முழுவதும் பருக வேண்டும்.

*ஆப்பிள் சிடர் வினிகர் பானம்

தேவையானவை: ஆப்பிள் சிடர்

வினிகர் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 1 கப், தேன் - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு கப் தண்ணீரில், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேவையான தேன் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை பருகினால் சிறுநீரகக் கற்கள் உருவாகுவதை தடுக்கும்.

*துளசி டீ

தேவையானவை: துளசி இலைகள் 15, தண்ணீர் - 2 கப், தேன் - தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் துளசி இலைகளை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து ½ மணி நேரம் மூடிவைத்து விட வேண்டும். வடித்து தேன் கலந்து பருக வேண்டும்.

*மாதுளைச் சாறு

ஒரு மாதுளம் பழத்தை உதிர்த்து மிக்ஸியில் சேர்த்து சாறு பிழிந்து வடிகட்டி பருக வேண்டும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளது. இது சிறுநீரகக் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

*தர்பூசணி ஸ்மூத்தி

தேவையானவை: தர்பூசணி சிறிதளவு, எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன், தேங்காய் தண்ணீர் (அ) இளநீர் - ஒரு கப்.

செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் தர்பூசணி துண்டுகளையும், தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து நன்றாக அடித்து, எலுமிச்சைச் சாறு கலந்து பருக வேண்டும். இந்த பானம் புத்துணர்ச்சி தரும். மற்றும் சிறுநீரக இயக்கத்தை அதிகரிக்கும்.

- எஸ்.செசிலியா, கிருஷ்ணகிரி.