தனி ஒருத்தியாக செய்ததை இனி அரசின் துணையோடு செய்வேன்!



சுயநலத்தில் இருந்துதான் பொது நலன் பிறக்கும் என்பார்கள். தனக்கு கிடைத்தால் மட்டுமே போதாது... எல்லா வசதி வாய்ப்புகளும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என சொல்லி வேலை செய்கிறவர்கள் சிலர். அந்த சிலரில் ஒருவர்தான் வசந்தி. வருடா வருடம் பள்ளி பாடத்திட்டங்களை மாற்றுவது மட்டுமே போதாது... மாணவ, மாணவிகள் படிக்க போதுமான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று பேச்சோடு நிறுத்தாமல் தனியொரு பெண்ணாக அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளார். இவரின் தன்னலமற்ற வேலையை பார்த்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மணச்சநல்லூரின் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக நியமித்துள்ளனர். ‘‘இதனால் என்னுடைய பணி மேலும் சிறக்குமே தவிர குறையாது’’ என பேசத் தொடங்கினார் வசந்தி.

‘‘ஸ்ரீரங்கம்தான் என் சொந்த ஊர். நான் பள்ளி படிக்கிற காலத்துல மற்றவர்களிடம் பேசவே பயப்படுவேன். ஆனாலும் நான் தமிழ் நல்லா படிப்பேன். அதனால என்னுடைய வகுப்பு ஆசிரியர்கள் என்னை தமிழ் படிக்க சொல்லி ஊக்கப்படுத்துனாங்க. மேடை ஏறி பேச சொல்வாங்க. ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் மேடையில் பேச பயம் என்று அவர்களிடம் சொன்னேன். ‘நீ தினமும் கண்ணாடி முன் நின்று பேசி பழகினால் பயம் போயிடும்’ன்னு சொன்னாங்க. ஒரு வருடம் கண்ணாடி முன் நின்று பேசி பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டேன். அதன் பிறகு ஒரு மன தைரியம் வந்தது. மேடை ஏறினேன். அனைவர் முன்னிலையிலும் பேச தொடங்கினேன். அன்று மேடை ஏறிய நான் இன்று வரை அதைவிட்டு கீழே இறங்கவில்லை. இதனைத் தொடர்ந்து நான் கவிதைகளையும் எழுத ஆரம்பித்தேன். கவிதை எழுதுவது எனக்கு பள்ளி நாட்களில் இருந்தே பழக்கம்.

 பள்ளியில் சிறப்பு விருந்தினர் வரும் போது, அவரைப் பற்றி கவிதையாக எழுதித் தருவேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் பொருளாதார பிரச்னையில் கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லை. ஆனாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதற்கும் பணம் வேண்டுமே. அதனால் ட்ரான்ஸ்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு சேர்ந்தேன். அதில் வந்த வருமானம் கொண்டு என்னுடைய கல்லூரி படிப்பை முடித்தேன். கல்லூரியில் நடக்கும் விழாவிலும் நான் தான் மேடையில் அதனை தொகுத்து வழங்குவேன். அதன் பிறகு முதுநிலை படிப்பையும் முடித்தேன்’’ என்றவர் கல்லூரி காலங்களிலேயே சமூகம்  சார்ந்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

‘‘ஒரு பிரச்சனை நடந்தால் அதைப் பற்றி பேசிக் கொண்டு இல்லாமல், அதற்கான தீர்வு என்ன பண்ணலாம் என யோசித்து அந்த வேலைகளை செய்ய தொடங்கினேன். இதற்கிடையில் தனியார் சேனல்களில் பேச்சாளராகவும் சென்றிருக்கிறேன். அடுத்து கல்யாணம், குடும்பம்னு என்னுடைய வாழ்க்கை நகர்ந்தது. எனக்கு இரண்டு மகன்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவோடு  இருந்தேன். காரணம், அரசுப் பள்ளிகள் வெறும் பாடங்களை மட்டும் சொல்லித் தருவதில்லை.

குழந்தைகள் இந்த சமூகத்தில் எப்படி அறத்தோடு வாழ வேண்டும் என்கிற சமூக புரிதலை உருவாக்கி தருகிறார்கள். யாரையும் சார்ந்து வாழக்கூடாது என்ற வாழ்க்கை முறையையும் அரசுப் பள்ளிகள் கற்றுக் கொடுக்கிறது என்பது என் திடகாத்திரமான நம்பிக்கை. அதற்காகவே என் இரண்டு மகன்களையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்தேன். என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் பலருக்கு சில விபத்துகள் ஏற்பட்டது.

இதனால் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு குறித்தும், பணியின் போது பின்பற்ற பாதுகாப்பு முறைகள் பற்றி பேச சொல்லி என் கணவர் கேட்டுக் கொண்டதால், தொழிலாளர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை எடுத்துச் சொன்னேன். நான் சொன்னதை அவர்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்ததால், அவர்களுக்கு ஏற்படுகிற பலவித விபத்துகளும் குறைந்தது. நான் பேசியவற்றை பதிவு செய்து அறிவிப்பாக வெளியிட தொடங்கினர்’’ என்றவர் அரசுப் பள்ளிகள் மேல் கவனம் ெசலுத்தியது பற்றி விவரித்தார்.‘‘ஒரு முறை என் மகன்கள் படிக்கும் பள்ளிக்கு சென்றேன். அப்போது தான் பள்ளியில் இருந்த குறைபாடுகள் எனக்கு தெரிய வந்தது.

பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. விசாரித்த போது ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர். ஆசிரியர் கழகம் செயல்பட்டு வரும் என்றும், அவர்கள் மாதம் ஒரு முறை கூடி பள்ளிக்கான வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகள் குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அந்த குழுவில் இருந்தால் பள்ளிக்கு தேவையானவற்றை அரசாங்கத்திடம் சொல்லி பெறலாம் என்றார்கள். அதனால் நான் அந்த கழகத்தில் உறுப்பினராக இணைந்தேன். அதன் பின்னர் தொடர்ச்சியாக குழுவில் கலந்து பேசி பள்ளிக்கு தேவையானவற்றை அரசிடம் முறையிட்டு வாங்கிக் கொடுத்தேன். அப்போது தான் என் மகன் படிக்கும் பள்ளி மட்டுமில்லாமல் மற்ற அரசுப் பள்ளிகளிலும் இதே நிலைதான் இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

அதனால் மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் என் சேவையினை செய்ய ஆரம்பித்தேன். பள்ளிகளுக்கு சென்று என்னென்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு, அந்த சுற்று வட்டாரத்தில் அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்களா என விசாரித்தேன். அவர்களை சந்தித்து, பள்ளியின் நிலைமை குறித்து பேசி அதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க சொன்னேன். இதில் முக்கியமானது 8ம் வகுப்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடங்களை படித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அமருவதற்கு டேபிள் மற்றும் நாற்காலி குறித்து அரசு பதவிகளில் இருக்கும் அனைவரையும் சந்தித்து பேசி பள்ளிக்கு தேவையானவற்றை வாங்கி கொடுக்குமாறு கேட்கவே அவர்களும் வாங்கி கொடுத்தனர். இது மட்டுமில்லாமல் எனக்குத் தெரிந்த உதவி செய்யும் எண்ணம் கொண்ட நிறுவன ஊழியர்கள், அதிபர்களை சந்தித்து அவர்கள் மூலமாகவும் சில பொருட்களை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். நான் தனிப்பட்ட முறையில் மற்றவர்களை அணுகும் போது, அவர்கள் கேட்ட கேள்வி, அரசாங்கம் அரசுப் பள்ளிகளுக்கு பணம் ஒதுக்குவதில்லையா? என்பதாக இருந்தது. அரசுப் பள்ளிகளுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஒரு மாவட்டத்திற்கு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்குகிறார்கள்.

அது அந்த மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி போதுமானதாக இருப்பதில்லை. அவ்வாறு உதவி செய்பவர்களிடம் பணமாக இல்லாமல், பொருளாக வாங்கிக் கொடுக்க சொல்லிடுவேன். இது மட்டுமில்லாமல் நான் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு ஊக்குப்படுத்தும் விதமாக பேசவும் தொடங்கினேன். என்னுடைய பணிகள் குறித்து தெரிந்து கொண்ட அரசு அதிகாரிகள் என்னை திருச்சி மாவட்டத்தின் பள்ளி மேலாண்மை குழுவில் இணைய சொன்னார்கள். இந்த குழுவானது ஒவ்வொரு அரசுப் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் தரத்தினை கண்காணிக்கும்.

ஒவ்வொரு பள்ளியிலும் இது கட்டாயம் செயல்பட வேண்டும் என கல்வி உரிமை சட்டத்தில் உள்ளது. பள்ளி வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் வேலைகள். இக்குழுவின் தலைவராகப் பள்ளியில் படிக்கும் ஏதேனும் ஒரு குழந்தையின் தாய் அல்லது தந்தை தான் இருப்பார்கள். அந்த தலைவரை பெற்றோர்கள் சேர்ந்து தேர்வு செய்வார்கள்.

என்னையும் அவர்கள் தான் தேர்வு செய்தார்கள். அதன் படி நான் மணச்சநல்லூரின் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக தற்போது பொறுப்பேற்றிருக்கிறேன். இவையெல்லாமே நான் செய்த வேலைகளுக்கும் இனி செய்யப் போகும் வேலைகளுக்கும் ஊக்கமாகவே கருதுகிறேன். இவ்வளவு நாட்களும் தனி ஒரு பெண்ணாக நான் செய்தவற்றையெல்லாம் இனி அரசின் பிரதிநிதியாக அரசின் துணையோடு செய்வேன்’’ என மகிழ்ச்சியோடு சொல்கிறார் வசந்தி.

மா.வினோத்குமார்