நியூஸ் பைட்ஸ்



புத்தகச் சங்கிலி

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்திருக்கிறது, செல்சியா. இங்கே உள்ள ஒரு புத்தகக்கடைக்கு மக்கள் மத்தியில் செம மவுசு. கடை இருக்கும் இடத்திலிருந்து 350 அடி தொலைவில் உள்ள இன்னொரு இடத்துக்குக் கடையை மாற்ற திட்டமிட்டார் முதலாளி. புதிய இடத்துக்குக் கடை மாறப்போகிறது, கடையில் இருக்கும் 9,100 புத்தகங்களை புது இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தனது வாடிக்கையாளர்கள் சிலரிடம் சொல்லியிருக்கிறார்.

புது இடத்துக்குக் கடை மாறப்போகிற தகவல் செல்சியா முழுவதும் பரவியது. சுமார் 300 வாடிக்கையாளர்கள் கடையின்  முன்பு திரண்டனர். கடை இருக்கும் இடத்திலிருந்து, புதிய கடை வரை மனிதச் சங்கிலி போல நின்றனர். அந்த 300 பேரும் சேர்ந்து இரண்டே மணி நேரத்தில் பழைய கடையிலிருந்த 9,100 புத்தகங்களைப் புது இடத்துக்கு மாற்றிவிட்டனர். பேக்கிங் செய்து, வண்டியில் வைத்துக் கொண்டு போயிருந்தால் இன்னமும் நேரமாகியிருக்கும். தவிர, பணமும் செல்வாகியிருக்கும். ஆம்; அந்த 300 பேரும் காசு வாங்கவில்லை.

கல்லூரிக்கு விமானத்தில் பறக்கும் மாணவி!

ஜப்பானைச் சேர்ந்த பிரபல பாடகி, யுசுகி நகாசிமா. இசைத்துறையின் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் கூட, கல்வியின் மீதான காதலை யுசுகி கைவிடவில்லை. யுசுகி படிக்கும் பல்கலைக்கழகம் அவருடைய இடத்திலிருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் கல்லூரிக்கு விமானத்தில் சென்று வருகிறார் யுசுகி. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து, தயாராகி, இரண்டு மணி நேர விமானப் பயணத்தின் மூலம் கல்லூரிக்குச் செல்கிறார். இந்தப் பயணத்துக்குத் தினமும் 18 ஆயிரம் ரூபாய் செலவாவதுதான் இதில் ஹைலைட்.

AI முதலீடு

இன்று ஒவ்வொரு நாடும் செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்த உலகையே ஏஐதான் ஆளப்போகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றனர். இப்படி ஏஐ துறையில் அதிகமாக முதலீடு செய்யும் 10 நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. 470.9 பில்லியன் டாலர் முதலீட்டுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது அமெரிக்கா.

இரண்டாம் இடத்தில் உள்ள சீனா, 119.3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. 11.1 பில்லியன் டாலர் முதலீட்டுடன் 7ம் இடத்தில் உள்ளது இந்தியா. மூன்றாம் இடத்தில் இங்கிலாந்தும், நான்காம் இடத்தில் கனடாவும், ஐந்தாம் இடத்தில் இஸ்ரேலும், ஆறாம் இடத்தில் ஜெர்மனியும், எட்டாம் இடத்தில் பிரான்ஸும், ஒன்பதாம் இடத்தில் தென்கொரியாவும், பத்தாம் இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.

டாப் 10 நகரங்கள்

சமீபத்தில் அதிகமாக செலவு வைக்கும் டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதாவது, நிறைய பணம் இருந்தால் மட்டுமே இந்த நகரங்களில் வாழ முடியும். இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது, மொனாகோ. இங்கே வசிப்பவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் மில்லியனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் இடத்தில் நியூயார்க்கும், மூன்றாம் இடத்தில் ஹாங்காங்கும், நான்காம் இடத்தில் லண்டனும் உள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் பாரீஸ், சிட்னி, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலைக்கு வாசற்படிகள்!

சீனாவில் உள்ள ஜியாங்ஸியில் இருக்கும் மலையை ஒட்டி ஒரு சொகுசான ரிசார்ட் உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து, மலையில் நகரும் படிக்கட்டுகளை அமைத்திருக்கிறது அந்த ரிசார்ட். 1500 மீட்டர் உயரமுள்ள அந்த மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரை வளைந்து, நெளிந்து செல்கிறது அந்த நகரும் படிக்கட்டுகள். 

இதற்கு முன்பு சீனாவில் உள்ள தான்யா மலையில் நகரும் படிக்கட்டுகளை அமைத்தனர். ஆனால், அதன் உயரம் குறைவு. ஜியாங்ஸியின் மலையில் அமைந்திருக்கும் நகரும் படிக்கட்டுகள் நீளமானது மட்டுமல்லாமல், சிக்கலானவையும் கூட.

இந்தப் படிக்கட்டுகளின் வழியாக உச்சியை அடைந்து, அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும் போது சொர்க்கத்தையே பார்த்ததைப் போன்ற உணர்வு கிடைக்கும். அதனால் இதனை சொர்க்கத்தின் வாசற்படிகள் என்றும் சொல்கின்றனர். மலையேற்றம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் உச்சியை அடைந்துவிடலாம்; நகரும் படிக்கட்டுகள் மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே உச்சியைத் தொட முடியும். 

கடந்த 2022ம் வருடம் மலையின் மீது நகரும் படிக்கட்டுகளை அமைப்பதற்கான வேலை ஆரம்பமானது. சமீபத்தில் முழுமையாக நகரும் படிக்கட்டுகளை அமைத்துவிட்டனர். விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது இந்த சொர்க்கத்தின் வாசற்படிகள்.

த.சக்திவேல்