நீராலானது இவ்வுலகு



சதுப்பு நில பாதுகாப்பின் அவசியம்   

நீரும் நிலமும் உறவாடுகின்ற பகுதிகளை ‘சதுப்பு நிலம்’ என்று அடையாளப் படுத்துகிறோம். அந்த வகையில்  ஊருணி, குளம், குட்டை, ஏரி, கண்மாய், அணை, கழிமுகம், கடலோரம், கடற்கரை, முகத்துவாரம், சதுப்பளம், உப்பளம், காயல் என சேறும் சகதியுமான ஈர நிலம் ஆகிய அனைத்தையும் சதுப்பு நிலங்கள் என்று அழைக்கிறோம். உப்பு நீர் நிறைந்த கடலுக்கும், நிலத்துக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் நீர் தேங்கி இருக்கும் பகுதியில் முதன்முதலாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சதுப்பு நிலங்கள் உருவாகின.

உயிரினங்கள் தோன்றி பரிணமித்ததில் சதுப்பு நில பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளது. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை. இதனை தவிர்த்து மனிதனால் உருவாக்கப்பட்ட சதுப்பு நில பகுதிகளும் உள்ளன. ஏரி, குளங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

சதுப்பு நிலம் என்பது வெறும் நீர்வளம் பெற்ற பகுதி மட்டும் அல்ல. பல தாவரங்களுக்கும், நீர் வாழ் உயிரினங்களுக்கும், குறிப்பாக பறவைகளுக்கும் தாய் வீடு அது. மேலும் நன்னீரை பாதுகாப்பதிலும் சதுப்பு நிலம் முக்கிய பங்காற்றுகிறது.

சதுப்பு நிலங்களை உவர்ப்புத் தன்மை உடைய சதுப்பு நிலங்கள் என்றும், நன்னீர் சதுப்பு நிலங்கள் என்றும் வகைப்படுத்தலாம். சதுப்பு நிலங்களில் பரந்து விரிந்து காணப்படும் தாவரங்களை அலையாத்திக் காடுகள் என்று அழைக்கிறோம்.

சுனாமியின் தாக்கத்தை குறைக்கக் கூடியது இந்த அலையாத்திக் காடுகள் என்பதை நாம் அறிவோம். இந்தக்  காடுகள் உவர் நீரும், நன்னீரும் சேரும் இடத்தில் மட்டுமே வளர்வது இதன் சிறப்பு அம்சம். இரண்டு விதமான நீர் கிடைக்கும் பட்சத்தில்தான் இவை உயிர் வாழும்.

இந்தியா - வங்காளதேசம் எல்லைப் பகுதியான வங்காள விரிகுடாவில் கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடுகள் உலகின் மிகப்பெரிய உவர்ப்புத் தன்மை கொண்ட சதுப்பு நில அலையாத்திக் காடாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் சுந்தரவனக்காடுகள், உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு. இதனை தவிர கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை, சென்னையில் உள்ள பள்ளிக்கரணை போன்றவும் தமிழகத்தில் உள்ள பிற முக்கிய சதுப்பு நில பகுதிகள். பள்ளிக்கரணை உயிரின

பன்மை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், சாரி-தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் என்ற பெயரில் சதுப்பு நிலங்கள் உள்ளன.

கேரள மாநிலத்தில் கண்ணனூர் கடற்கரைப் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் காணப்படுகிறது. இப்படி பல்வேறு வகையில் முக்கியத் துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் உலகெங்கும் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டன. குறிப்பாக பல்வேறு சதுப்பு நிலங்கள் வேளாண் நிலங்களாகவும், வீட்டடி மனைகளாகவும் மாற்றம் பெற்றன.

இதனை தடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த 18 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 1971-ல் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் மாநாடு ஒன்றை அமைத்தனர். இதன் முடிவாக அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி  உலக சதுப்பு நிலங்களை பாதுகாக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நாளே (பிப்ரவரி 2-ஐ) உலக சதுப்பு நில நாளாக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கூட்டம் ராம்சர் நகரில் நடைபெற்றதால் இந்த அமைப்பு ராம்சர் அமைப்பு என பெயர் பெற்றது.

தற்போது இந்தியா உட்பட 161 நாடுகள் ராம்சர் அமைப்பில் உள்ளன. உலகில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 25 இடங்கள் ராம்சர் அமைப்பில் சேர்க்க தகுதி பெற்றுள்ளன. அதில் தமிழகத்தின் கோடியக்கரை, பழவேற்காடு அடங்கும்.

இந்தியாவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சதுப்பு நில பாதுகாப்பு விதிகள் 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  இதன் மூலம் சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் செயல்படாத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பல்வேறு இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

சதுப்பு நில பாதுகாப்பிற்காக புதிய சட்டவிதிகளை இயற்ற வேண்டும் என்னும் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. இதன்படி 2017ம் ஆண்டு சதுப்பு  நில  பாதுகாப்பிற்காக புதிய சட்டவிதியை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்படி சதுப்பு நிலைத்தை பாதுகாக்க புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்களை கண்டறிவதும், அதனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

சதுப்பு நிலங்கள் அழிவதற்கான காரணங்களையும் உச்ச நீதிமன்றம் பட்டியல் இட்டுள்ளது. சதுப்பு நிலங்கள் குப்பைக்கூடங்களாக மாற்றப்பட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நம் கண் முன்பே பள்ளிக்கரணை குப்பைமேடாகவும், குடியிருப்புப் பகுதியாகவும் மாறியுள்ளதை நாம் அறிவோம். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள்  வீட்டு மனைகளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், தொழிற்சாலை கழிவுகளை கலக்கும் இடமாகவும், பேருந்து நிலையமாகவும், வணிக வளாகங்களாகவும் மாறுவதைத் தடுக்க வேண்டும்.

நீர் பாதுகாப்பு என்பது சூழலை முழுமையாக பாதுகாப்பது என்பதை உள்ளடக்கியது. அதில் சதுப்பு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அவசியத்தை கடந்த சென்னை வெள்ளத்தின்போது நாம் உணர்ந்தோம்.  இப்படி நம்மைச் சுற்றி அமைந்துள்ள நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் நம் வாழ்வின் உறுதியை நிச்சயப்படுத்துகிறது.

வனப்பாதுகாப்பு சட்டம் எப்படி வனத்தை பாதுகாக்க போதுமானதாக இல்லையோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க போதுமானதாக இல்லையோ, அப்படியே சதுப்பு நில பாதுகாப்பு சட்டமும் சதுப்பு நிலத்தை பாதுகாக்க போதுமானதாக இல்லை. சில அமைப்புகளால் மட்டுமே இவற்றை பாதுகாக்க முடியாது.

ஒட்டுமொத்த அரசின் செயல்பாடுகளில் சூழலியல் பாதுகாப்பு மையப்படுத்தப்படாத வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. இதற்கான ஒருங்கிணைந்த கொள்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள், காடுகள், பிற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தனித் தனியாக நாம் பாதுகாக்க முடியாது.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்தவை. இந்த ஒருங்கிணைந்த அமைப்பை புரிந்து கொண்டால் மட்டுமே நாம் சூழலை பாதுகாக்க முடியும். சூழலை பாதுகாப்பது என்பதை விட சூழலை அழிக்காமல் இருப்பதே தற்போதைய நிலையில் மிகவும் தேவையானது. அந்த வகையில் சதுப்பு நிலைகளை அதன் போக்கில் இருக்க விடுவோம். அவை பறவைகளின் வீடாக, பிற உயிரினங்களின் வாழ்விடமாக, நீர் பகுதியாக இருந்து விட்டு போகட்டும்.

தற்போதைய நிலையில் எல்லா நிலங்களுமே, கட்டிடங்களுக்கான இடங்கள் என்பதே அரசு அமைப்புகளின் பார்வை. சதுப்பு நிலங்கள் கூட இப்படித்தான் பார்க்கப்படுகின்றன. இந்தப் பார்வை மாற வேண்டும். இந்த பூமி தோன்றிய காலம் முதல் பரிணமித்து வளர்ந்துள்ள சதுப்பு நிலங்களை அதற்கான சூழல் முக்கியத்துவத்தோடு அணுகுவோம்.  அரசு அமைப்புகளை  அதற்கு இசைந்த வகையில் செயல்படுத்தச் செய்வது மக்களின் கடமையும்கூட. 

(நீரோடு செல்வோம்!)