குளிர்கால டிப்ஸ்



பொதுவாகவே குளிர்காலங்களில் அனை வருக்கும் சருமம் வறண்டு காணப்படும். உதடு மற்றும் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். குளிர்காலங்களில் வியர்வை அதிகம் வராத காரணத்தால் தோல் ஈரத்தன்மையை இழந்து விடுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கை முறையில் சரும பாதுகாப்பு குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் பாலமுருகன்.

“உணவே மருந்து என்கிற சான்றோர்களின் வாக்குப்படி அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு உணவு பழக்கவழக்கத்தை மாற்றிக்கொண்டால் உடல் நலமுடன் இருக்கும். குளிர்காலங்களில் பெரும்பாலும் சரும பாதுகாப்பு குறித்து நாம் யோசிப்பதே இல்லை. இந்த காலகட்டங்களில் மனித உடலில் உள்ளுறுப்புகள் சூடாகவும் தோல் குளிர்ச்சியாக வறண்டு காணப்படும்.

இதனால் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். சருமம் ஈரத்தன்மை அற்று காணப்படும். இதனை சரி செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் வெளி சந்தைகளில் கிடைக்கக்கூடிய அழகு சாதனப் பொருட்களை எல்லா காலச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்தலாமா? அது பாதுகாப்பானதா என்பதை அறியாமல் விளம்பரங்களை பார்த்து பயன்படுத்துவதால் பல்வேறு தோல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இயற்கை முறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வீட்டு உபயோகப் பொருட்களைக்கொண்டு குளிர்காலங்களில் சருமத்தை பாதுகாக்கும் முறைகளை பார்க்கலாம்.

* குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள  தேங்காய் எண்ணெயை உடல் மற்றும் முகத்தில் தேய்த்து இதமான சூட்டில் குளிக்கலாம். இது தோலில் எண்ணெய் பசையை தக்கவைத்துக்கொண்டு, தோலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும்.
 
* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நாள்பாமராதி என்று சொல்லக்கூடிய நான்கு பால் மரங்களின் பட்டையில் தயாரித்த தைலத்தை உடல் முழுவதும் தடவி குளித்து வரலாம். இதனால் சருமம் பாதுகாப்பு அடைவதோடு சருமத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். அதேபோல் எண்ணெய் பசை இல்லாத சருமத்திற்கு மகாபித்தலேபம் தைலத்தை  முகத்திற்கு தேய்த்து வரலாம். இது முகப்பொலிவை கொடுக்கும். தனப்பயிர், மஞ்சட்டி ஆகிய பொடிகளை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெயில் பன்னீர் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான வெயிலில் காயவைத்து முகத்திற்கும் உடலுக்கும் தடவி குளிக்கலாம் இது வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். இந்த எண்ணெயை குடிப்பதால் உள்ளுறுப்புகள் குளிர்ச்சி அடைந்து வெப்பம் தணியும். தேங்காய் எண்ணெயில் அருகம்புல், மஞ்சள் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து குளிர்காலங்களில் உடலில் தினமும் தேய்த்து குளிக்கலாம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் அதிக அளவு எண்ணெய் தேய்க்காமல் குறைந்த அளவு மென்மையாக தேய்த்து குளித்து வருவதால் சருமத்திற்கு சரியான சத்து கிடைக்கும். இதை மூச்சுத் திணறல் உள்ளவர்கள், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், சளி பிடித்திருப்பவர்கள், தினமும் இல்லாமல் வாரத்திற்கு ஒருநாள் இந்த முறையை பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி, பாச்சோத்தி பட்டை, வசம்பு மூன்றையும் பொடியாக்கி பசும்பாலில் கலந்து முகத்திற்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால்  முகம் பொலிவு பெற்று முகப்பரு வராமல் தடுக்கும்.  உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க பசும்பாலில் செய்த வெண்ணெய் மற்றும் பசும்பால் நெய்யை உதடுகளில் தடவி வரலாம்.”

- ஜெ.சதீஷ்