UPSCல் வெற்றி பெற்ற நகராட்சி ஆணையர்!



அரசுப் பணிகளில் சேர்ந்து மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என கல்லூரி முடித்த கையோடு அரசு தேர்வுகளுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளம். அதிலும் குறிப்பாக UPSC தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. 
பல வருட உழைப்பு நிஜமாகும் போது அவ்வளவு காலமும் அவர்களுக்கு ஏற்பட்ட மனப் போராட்டத்திற்கான தீர்வாக அந்த வெற்றி அமையும். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெரிய அகப்போராட்டத்தை கடந்து வந்தே இந்த வெற்றியை சுவைத்திருக்கிறார்கள். தனக்கு என்ன வேண்டும் என தெரிந்து மனம் தளராமல் அதற்காக தினமும் ஒரு செயலை செய்து வந்தாலே வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் தான் கவின்மொழி.

இந்திய குடிமைப் பணித் தேர்வில் (UPSC) 546-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப் பெற்றுள்ளார். தற்போது குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் இவர் 5 வருட கடின உழைப்பில் தற்போது நடைபெற்ற தேர்வில் தேர்வாகியுள்ளார். 
வெற்றி கொண்டாட்டத்திலும் தன் வேலையை செய்து வரும் கவின்மொழி தன் ஐந்து வருட போராட்டத்தை பகிர்ந்தார்.‘‘சொந்த ஊர் வந்தவாசி அருகே அம்மையபட்டு கிராமம். என் பெற்றோர் முருகேஷும், வெண்ணிலாவும் எழுத்தாளர்கள். எனக்கு இரண்டு தங்கைகள்.

அப்பாவும் அம்மாவும் எங்களுக்குச் சின்ன வயசுலேயே வாசிப்பு பழக்கத்தை கொண்டு வந்தாங்க. நாங்க மூணு பேரும் தினமும் புத்தகங்கள் வாசிப்போம். புத்தகம் வாசிக்காம தூக்கம் வராது. அந்தளவிற்கு எனக்குள் வாசிப்பு பழக்கம் இருந்தது. 

நான் 6ம் வகுப்பு படிக்கும் போது திருவண்ணாமலை மாவட்டத்தின் கலெக்டராக ராஜேந்திரன் அவர்கள் இருந்தாங்க. அவர்தான் எனக்கு முன்னுதாரணம். ஒரு ஆட்சியராக அறிமுகம் ஆகி, எங்களுக்கு காட்ஃபாதர் போல் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டியாக இருந்தார். எனக்கும் அவரை மாதிரி கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

10ம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றேன். நான் நல்ல மதிப்பெண் எடுத்ததால், தெரிந்தவர்கள் எல்லோரும் என்னை பிரபல தனியார் பள்ளியில் சேர்க்க சொன்னாங்க. அம்மா அரசுப் பள்ளி ஆசிரியர். 

அவர் அரசு வேலையில் இருப்பதால் அரசுப் பள்ளி வேணாம்னு சொல்லக்கூடாது என்று சொன்னது மட்டுமில்லாமல், அரசுப் பள்ளியிலும் திறமையான ஆசிரியர்கள் இருக்காங்க, பாடமும் நன்றாகத்தான் எடுக்கிறார்கள் எனச் சொல்லி அம்மா வேலை பார்க்கும் வந்தவாசியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டாங்க. அந்தப் பள்ளியில் தான் என் தாத்தா, அம்மா எல்லாம் படிச்சாங்க.

பொதுவாக அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் நன்றாக இருக்காது, சரியாக பாடம் நடத்தமாட்டார்கள், மாணவர்களேதான் பாடங்களை படித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் பலரும் சொல்வாங்க. ஆனால் என்னுடைய பள்ளி அது எல்லாம் பொய் என்று நிரூபித்தது. எனக்குப் பாடங்கள் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் தலைசிறந்தவர்கள். ஒவ்வொரு மாணவரையும் தனியாக கவனித்துக் கொண்டார்கள். 

அதே போல் அரசுப் பள்ளிகளில் உள் கட்டமைப்பு நன்றாகவே இருக்கும். 12ம் வகுப்பில் 1141 மதிப்பெண் எடுத்தேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கோவை வேளாண்மை கல்லூரியில் வேளாண்மை படிக்க வாய்ப்பு கிடைத்தது. 2020ம் ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிச்சதும் UPSC தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட நான்கு வருடங்கள் அதற்காக மட்டுமே படித்தேன்’’ என்றவர் அந்தத் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து விவரித்தார்.

‘‘நான் கிராமத்தில் வளர்ந்ததால் மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் தேவைகள் என்ன என்று தெரியும். நான் அதிகாரத்தில் இருந்தால், அவர்களின் பிரச்னைகளை தீர்க்கலாம், அதிலும் அரசு துறையில் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் போது நாம நினைச்சதை நமக்கு சரின்னு பட்டதை செய்யலாம். 

மக்கள் பாதிக்கப்படும் போது அதிகாரிகள் நேரில் சென்றாலே பாதி பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும் மேலும் முழுமையான தீர்வுக்கான யோசனையும் கிடைக்கும். குறிப்பா மாவட்ட ஆட்சியராக  பொறுப்பில் இருக்கும் போது மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்ய முடியும். அந்த ஒரே நோக்கத்திற்காகத்தான் நான் ஆட்சியராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் வீட்டில் UPSC தேர்வு எழுத இருப்பதாக சொன்னதும் எங்க வீட்டில் எல்லோரும் நல்லா படின்னு ஊக்கம் கொடுத்தாங்க. அதற்கான பயிற்சி மையத்தில் ஒரு வருடம் பயிற்சி பெற்றேன். பயிற்சியாளர் சந்துரு அவர்கள் என்னைவிட என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். 

நாம தேர்வு எழுதும் போதே தேர்ச்சிப் பெறுவோமா இல்லையா என்று நமக்கே தெரிந்திடும். ஒவ்வொரு தேர்வு எழுதி பிறகு தேர்ச்சி ஆகிட மாட்டோமான்னு ஒரு மனப் போராட்டமாகவே இருந்தது.

இரண்டாவது முறை எழுதிய தேர்வில் பொது அறிவு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்தேன், ஆனால் தகுதித் தேர்வில் தேர்ச்சியடையவில்லை. அது அதிக மன உளைச்சலை கொடுத்தது. என்னால் தேர்ச்சிப் பெறவே முடியாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சந்துரு சார்தான் என்னை ஊக்குவித்தார். 

‘கண்டிப்பா நீ செலக்ட் ஆவாய், விடாம படி’ என்பார். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும், ‘நீ ஆட்சியாளரா பதவி ஏற்ப... தொடர்ந்து படி, சோர்ந்து போகாதே’ என்று தொடர்ந்து ஊக்கம் கொடுத்திட்டே இருந்தாங்க. அது எனக்குள் ஒரு பிடிப்பை கொடுத்தது. UPSC என்பது மிகப்பெரிய கனவு. அதற்கான பயணம் நீண்ட தூரம் உள்ளது.

அதனால் அதற்கிடையில் சிறிய இளைப்பாறுதலுக்காக வேறு அரசு வேலைக்கு முயற்சி செய்ய நினைத்தேன். அதில் தேர்ச்சிப்பெற்று வேலை கிடைத்தால் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்னு நினைத்தேன். குரூப் 2 தேர்வு எழுதினேன். 

2022ல் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். நகராட்சி ஆணையராக வேலையில் சேர்ந்தேன். இது மினி ஆட்சியர் வேலை போன்றதுதான். குறிப்பிட்ட சிறு பகுதியை நான் நிர்வகிக்க வேண்டும். வேலை காரணமாக ஆட்சியரை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த நேரத்தில் மனசில் ஆசை துளிர்விடும் திரும்பவும் படிக்க போகலாம்னு தோணும். ஆட்சியராக மாறினால் மக்களுக்கு நிறைய நல்லது செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

அதனால் பயிற்சி எடுத்துக் கொண்டே 4வது முறையாக பிரிலிம்ஸ் தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சியும் பெற்றேன். அதனைத் தொடர்ந்து மெயின் தேர்விலும் வெற்றியை கண்டேன். அடுத்து நேர்காணல்தான். அந்த சமயத்தில் பலரின் ஆலோசனைகள்தான் என்னை தேர்ச்சிப் பெற உதவியதுன்னு சொல்லலாம். 

குறிப்பாக, ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளான பாலச்சந்திரன், பாலகிருஷ்ணன், பூமிநாதன், அறம் செந்தில்குமார் உள்ளிட்டோரை குறிப்பிட வேண்டும். என்னுடைய ஐந்து வருட கடின  உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறை தோல்வி அடைந்தாலும், சோர்வடையாமல் முயற்சித்துக் கொண்டே இருக்கணும். கட்டாயம் வெற்றி கிடைக்கும்’’ என்று பெருமகிழ்ச்சியோடு சொல்கிறார் கவின்மொழி.

மா.வினோத்குமார்