இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் நம்பிக்கை!



2024 ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்கள் பெற்ற ஒரே வீராங்கனையான மனு பாக்கரை, ‘கைத் துப்பாக்கி கொண்டு குறி நோக்கிச் சுடும்’ உலகக் கோப்பைக்கான போட்டியில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் சுருச்சி இந்தர் சிங். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்தியாவின் துப்பாக்கியால் சுடும் குழுவிற்கு  தலைமை தாங்கிச் சென்றது சுருச்சி இந்தர் சிங்தான்.

ISSF (International Shooting Sport Federation) 2025க்கான உலகக் கோப்பை, 10 மீட்டர் தூர ஏர் பிஸ்டல் கொண்டு சுடுவதில் தங்கப் பதக்கம் வென்ற சுருச்சி,  இரட்டையர் ஜோடியில் சவுரப் சவுத்ரியுடன் இணைந்து 10 மீட்டர் தூர ஏர் பிஸ்டல் சுடும் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 
ஹரியானாவின் ஜஜ்ஜர் ஊரைச்  சேர்ந்த 18 வயதான சுருச்சி, கைத் துப்பாக்கி சுடுவதில் விடிவெள்ளியாக  உதித்திருக்கிறார்.  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆகவும் மாறியுள்ளார். ISSF உலகக் கோப்பை போட்டியில்  தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சுருச்சி  தங்கப் பதக்கம் பெறுகிறார்.

மனு மயிரிழையில் சுருச்சியிடம் தோற்று  வெள்ளிப் பதக்கம் பெற்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவிற்காக சுருச்சி, மனு, சவுரப் சவுத்ரிக்குக்  கிடைத்த பதக்கங்கள்,  இந்தியாவை மூன்று பதக்கங்களுடன் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 

ஒரு ஆண்டிற்குள் கைத் துப்பாக்கி சுடும்   போட்டிகளில் முன்னணிக்கு வந்த  இந்தியாவின் ஒலிம்பிக்ஸ்  நம்பிக்கையான  சுருச்சி யார் தெரியுமா? ‘‘பாரம்பரியம், கௌரவம், ஒழுக்கம்... என்னைப் பொறுத்தவரையில் இவை வெறும் வார்த்தைகள் அல்ல, ரத்தத்தில் கலந்திருப்பவை. கொரோனா தொற்றுக்குப் பிறகு துப்பாக்கிச்சுட பயிற்சி தரும் அகாடமியைத் தேடி அலைந்தோம்.

அந்தத்  தேடல்  என்னை ஹரியானாவின் குருகிராமில் குரு துரோணாச்சார்யா துப்பாக்கிச் சுடும் அகாடமிக்கு  அழைத்துச் சென்றது. அதனை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுரேஷ் சிங் என்பவர் நடத்தி வருகிறார்.

அப்பாவும் ராணுவத்தில் ஹவில்தாராகப்  பணிபுரிந்தவர்.  இந்தப் பயிற்சி நிலையத்தில்தான் மனு பாக்கர் முதலில் பயிற்சி பெற்றார். ராணுவ வீரரின் அகாடமி என்பதால் அப்பா என்னை அங்கு சேர்க்க விருப்பப்பட்டார்.சுரேஷ் சிங்  எடுத்தவுடன் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை.

அவர் என்னிடம் தன்னுடைய பாணியை பின்பற்றப் போகிறேனா அல்லது எனக்கென உள்ள முறையில் பயிற்சி வேண்டுமா என்பதுதான். நான் அவரின் பாணியிலேயே பயிற்சி பெற விரும்புவதாக கூறினேன். மேலும் ஆறு மாத பயிற்சியில் என்னுடைய திறன் திருப்தியாக இருந்தால் பயிற்சியைத் தொடர அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் சரி என்று சொல்லி என்னை சேர்த்துக் கொள்ள சம்மதித்தார். எங்களின் கிராமத்திலிருந்து பயிற்சிக்கு  வந்து போக  மொத்தம் மூன்று மணிநேரம் பிடிக்கும். இருந்தாலும் கடுமையாக பயிற்சி பெற்றேன்.

முதல் போட்டியான ஜூனியர்  உலகக் கோப்பை போட்டியில்  எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில்  நிகழ்ந்த தேசியப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்களையும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரகாண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றேன்.

கடந்த 2024 மற்றும் இந்தாண்டு என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. என்னுடைய ஆசானும், ‘நீ சரியான திசையில் பயணிக்கிறாய்... வெற்றிகளை  இத்துடன் நீ  நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. அது தொடரும்’  என்று பாராட்டினார்’’ என்றவர், அவரின் பயிற்சி குறித்து பேசினார்.

“தினமும் நீண்ட நேரம் பயிற்சி  செய்வேன். காரணம், போட்டி சுமார் 75 நிமிடங்கள் வரை நடக்கும். தொடக்கத்தில் போட்டிகளில் சரிவர  திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.  அதனால் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். 

ஆனால் என்னால் அந்தப் பயிற்சியினை மேற்கொள்ள முடியவில்லை. பொறுமையை இழந்தேன். என் பயிற்சியாளரிடம், ‘நீங்கள் என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்’ என்று கூறினேன். ஆனால் அவர் என் மேல் கோபம் கொள்ளாமல், எனது மனநிலையை புரிந்துகொண்டார்.

அவர் என்னிடம், ‘நீ வெற்றிபெற விரும்பினால், உன் உணர்வுகளைக் கட்டுப்படுத்து... சிறந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையாக இருக்க, முதலில் மன அழுத்தத்தைக்  கட்டுப்படுத்த வேண்டும். பயிற்சியிலும்   சரி...  போட்டியிலும் சரி... அவசரப்படக்கூடாது. பதட்டப்படக் கூடாது’ என்று எனக்கு ஆலோசனை கூறி எனது அழுத்தங்களை குறைத்தார். முதல் சில மாதங்களுக்கு, என்னை  எந்தப் போட்டியிலும் பங்கேற்க விடாமல்  பயிற்சியில் மட்டுமே  கவனம் செலுத்தச் சொன்னார்.

அவருக்கு  திருப்தி  ஏற்படும்வரை பயிற்சி தொடர்ந்தது. ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கு   ஐந்து நிமிடங்களுக்கு முன்பு பயிற்சியாளரை அலைபேசியில்  வீடியோ அல்லது வாட்ஸ்அப்பில் அழைப்பேன். அவர் என்னை ஊக்கப்படுத்துவார். அவரின் வார்த்தைகள் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தும். ஒரு உத்வேகத்துடன்  போட்டியை எதிர் கொள்வேன். போகப்போக இது ஒரு   சடங்காகவே மாறிவிட்டது.  

நான் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் இந்தப் பயிற்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு, கிராமத்தில் எனது வீட்டிற்குத் திரும்பி வயல் வேலைதான் பார்த்திருக்கணும். ஆனால் வெற்றி பெற்றுவிட்டேன். இப்போது என்னுடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பதுதான்’’ என்கிறார் சுருச்சி இந்தர் சிங்.  

கண்ணம்மா பாரதி