வாழ்க்கையை மாற்றும் பயணம்!பெண் மைய சினிமா

நாம் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை இடைவிடாமல் பல இழப்புகளைச் சந்திக்கிறோம். வாழ்க்கை என்பதே எண்ணில் அடங்காத இழப்புகளின் கோர்வை தான். இந்த இழப்புகள் நம்மை துன்பத்துக்குள் தள்ளுகிறது. முதலில் மெல்ல மெல்ல குழந்தமையை இழக்கிறோம். நம்முடைய முடி, பற்கள், உடல் நலம் என்று ஒவ்வொன்றாக இழந்து இறுதியில் வாழ்க்கையையே இழக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் இழப்புகளின் வலியை எப்படி எதிர்கொண்டு, அதை எப்படி இன்னொரு வடிவத்துக்கு மாற்றுகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஏனென்றால் வலியை நம்மால் தொடர்ந்து அனுபவிக்க முடியாது. ஆனால், வலியை இன்னொன்றாக மாற்ற முடியும். இந்த வழியில்தான் தொடர்ந்து நம்மால் எல்லாவற்றுடனும் பிணைந்து இருக்க முடியும். ஒரு மலர் ஆரம்பத்தில் மொட்டாகப் பிறந்து, மலராகி, பிறகு அந்த மலர் வாடி, உதிர்ந்து மறுபடியும் இன்னொரு மலராகப் பிறக்கிறது. அதனுடைய வாழ்க்கையின் நிலையான பகுதி இதுதான். இப்படித்தான் இயற்கை இயங்குகிறது.
- Alejandro Gonzalez Inarritu

அமெரிக்காவின் முக்கியமான பெண் எழுத்தாளர்களில் ஒருவர் செரில் ஸ்ட்ரேய்டு (Cheryl Strayed). அவரின் நினைவுக்குறிப்பான ‘Wild: From Lost to Found on the Pacific Crest Trail’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இந்தப் படம். ஒரு மலை உச்சியில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கிறாள் செரில். அவளின் வலது காலின் கட்டைவிரல் நகம் பிய்ந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நகத்தை பிய்த்துக் கீழே எரியும்போது  வலியில் அவள் துடித்துக் கதறுகிறாள். அந்தக் கதறலுடன் படம் ஆரம்பிக்கிறது.

செரிலின் நிகழ்கால பயணமும், அவளின் கடந்த கால நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு படத்தின் கதை நகர்கிறது. அமெரிக்காவின் அழகான ஒரு நகர்புறத்தில் கணவனுடன் வசித்து வருகிறாள் செரில். அவளுக்கு அம்மாவும், தம்பியும் இருக்கிறார்கள். அப்பா இருந்தும் இல்லாதது மாதிரிதான். அவர் பெரும் குடிகாரர். எப்போதும் அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பவர். அதனால் சின்ன வயதில் இருந்தே செரிலுக்கு அப்பாவைப் பிடிப்பதில்லை.

அம்மாவின் வளர்ப்பிலேயே வளர்ந்த செரிலுக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தமான ஒரே விஷயம் அம்மா தான். அம்மாவிற்குப் பிறகுதான் அவளின் கணவன். இலக்கியம் முதல் காமம் வரை அம்மாவும் மகளும் சுதந்திரமாக நண்பர்களைப் போல உரையாடுகின்றனர். தன்னுடைய வாழ்க்கையில் கற்ற ஒவ்வொரு விஷயத்தையும் செரிலுக்கு கற்றுக்கொடுக்கிறார் அந்த அம்மா.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் புற்றுநோய் வடிவில் பெரிய இடி ஒன்று இறங்குகிறது. ஆம்; 48 வயதான செரிலின் அம்மாவை புற்றுநோய் தாக்குகிறது. அவரின் மரணத்துக்கு நாள் குறிக்கப்படுகிறது. முற்றிலும் நிலைகுலைந்து போகிறாள் செரில். அவளின் ஒவ்வொரு நிமிடமும் நரகமாகிறது. அம்மா மரணிக்கிறாள். அம்மாவின் இழப்பைத் தாங்க முடியாமல் துயரில் மூழ்குகிறாள் செரில்.
சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் வெறுக்கிறாள். போதை பழக்கத்துக்கு அடிமையாகிறாள். முன் பின் தெரியாத மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். செரிலின் போக்கு அவளின் கணவரை எரிச்சலூட்டுகிறது. இருந்தாலும் செரில் தன்னுடைய பாதையை மாற்றாமல் தொடர்ந்து செல்கிறாள். தன் பாதையில் இடையூறாக இருக்கும் கணவரை விவாகரத்து செய்கிறாள்.

போதைப் பழக்கம், முன் பின் அறியாதவர்களுடான உறவு... எதுவுமே அவளை அம்மாவின் இழப்பு தந்த துயரத்தில் இருந்து மீட்கவில்லை. மாறாக அவளின் துன்பங்களை அதிகரிக்கவே செய்கிறது. ஒரு நாள் திடீரென பசிபிக் கிரெஸ்ட் டிரெய்ல் எனப்படும் பி.சி.டி பாதையில் தன்னந்தனியாக நடைப்பயணம் போகலாம் என்று முடிவு செய்கிறாள். செரிலுக்கு எந்த விதமான பயண அனுபவமும் கிடையாது.

சில மாதங்களுக்கு வேண்டிய துணிமணி, உணவு, மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு டிராவல் பேக்கில் நிறைக்கிறாள். அது அவளைவிட எடை கூடியதாக இருக்கிறது. அதை சுமந்துகொண்டே தென் கலிபோர்னியாவிலிருந்து தன்னுடைய நடைப்பயணத்தை ஆரம்பிக்கிறாள். முதல் நாள் பயணமே அவளை நிலைகுலைய வைக்கிறது. தொடர்ந்து நடக்க சிரமப்படுகிறாள்.

சமைப்பதற்காக அவள் எடுத்துவந்த கேஸ் அடுப்பு சரியாக வேலை செய்வதில்லை. கூடாரத்தை அமைக்கும்போது பலமான காற்று அடிக்கிறது. தனிமையும், பயமும் நெருப்பைப் போல அவளை வாட்டுகிறது. அம்மாவின் நினைவுகள் அவளின் தூக்கத்தைப் பறிக்கிறது. பயணத்தின் போது படிப்பதற்காக எடுத்துவந்த சில புத்தகங்கள் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

அடுத்த நாள் பயணத்தை கைவிட்டுவிட்டு திரும்பி வீட்டுக்கே போய்விடலாமா? என்று யோசிக்கிறாள். ஆனால், மனதை திடப்படுத்திக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறாள். பயணத்தின் போது முன்பின் தெரியாத பலர் அவளுக்கு உதவுகின்றனர். இருக்க இடமும், உண்ண உணவும் தருகிறார்கள். சிலர் அவளிடம் தவறாக நடந்துகொள்ளவும் முயல்கிறார்கள். கரடு முரடான பாதை, பாம்பு, நரி போன்ற காட்டுயிர்கள் அவளின் பயணத்தை மேலும் சிரமமாக்குகிறது.

ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காத நிலையிலும், சாப்பிட்ட உணவு சரியாக செரிக்காமல் வயிற்றை தொந்தரவு செய்துகொண்டே இருந்த நிலையிலும், காலுக்குப் பொருந்தாத காலணி அவளின் பாதங்களை பதம் பார்த்துக்கொண்டே இருந்த நிலையிலும், மேடுகளிலும், மலைகளிலும் தன்னைவிட எடைமிகுந்த பேக்கை சுமந்து கொண்டே ஏறும்போது கீழே விழுந்து உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும், அம்மா இறந்த பிறகு போதைப்பழக்கத்திலும், காம களியாட்டங்களிலும் ஈடுபட்டது அவ்வப்போது எட்டிப்பார்த்து குற்ற உணர்வை ஏற்படுத்தும் போதும்... அவள் தன்னுடைய பயணத்தை கைவிடவில்லை. 94 நாட்கள் கால்நடையாகவே 1,100 மைல்கள் பயணம் செய்கிறாள்.

பசிபிக் கிரெஸ்ட் டிரெய்லை முழுமையாக கடக்கவில்லை என்றாலும் வாழ்க்கையைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை அவள் கண்டடைகிறாள். ‘இந்த வாழ்க்கை தாங்க முடியாதது, மர்மமானது. அது  ஒரு வனாந்திரத்தைப் போன்றது. அதை  அப்படியே அதன் போக்கில் விட்டுவிடுவது தான் நல்லது’ என்பதுதான் அவள் கண்டடைந்த விஷயம்.

பயணத்தை முடித்த நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள்கிறாள். மகனும், மகளும் பிறக்கிறார்கள். மகளுக்கு அம்மாவின் பெயரையே சூட்டுகிறாள். கரடுமுரடான காட்டுப்பாதையில் பயணித்து ஒரு அழகான நந்தவனத்துக்குள் நுழைந்த ஒரு உணர்வை தருவதோடு படம் நிறைவடைகிறது. இழப்புகள் எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால், அந்த இழப்பில் இருந்து மீள்வதற்காக நாம் செய்கின்ற செயல்கள் எப்படி நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும்  என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

அம்மாவின் இழப்பில் இருந்து மீள்வதற்காக போதைப்பழக்கத்துக்கும், காம களியாட்டங்களிலும் ஈடுபடுகின்ற செரிலின் வாழ்க்கை அதளபாதாளத்துக்குள் செல்கிறது. ஆனால், இயற்கையுடன் இணைந்த ஒரு பயணத்தை எந்த வித அனுபவமும் இல்லாமல் அவள் மேற்கொள்ளும்போது அவளின் வாழ்க்கை அந்த பாதாளத்தில் இருந்து மேலே எழுந்து புதிய பாதையைக் காட்டுகிறது. இப்போது அமெரிக்காவில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வரும் நிஜ செரிலுக்கு 49 வயதாகிறது. அவரின் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அவரின் எழுத்துப் பயணம் தொடர்கிறது.

- த.சக்திவேல்

பசிபிக் கிரெஸ்ட் டிரெய்ல்
மெக்சிகோவில் இருந்து கனடா வரைக்கும் நீண்டு செல்கிற பசிபிக் கிரெஸ்ட் டிரெய்ல் 2,650 மைல்கள் நீளமுடையது. இந்தப் பாதையில் பயணிக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத பாலைவனத்தின் அழகையும், கண்ணுக்கு எட்டிய வரை வெண்மையாக பனி படர்ந்திருக்கும் நிலப்பரப்புகளையும், பசுமையான காடுகளையும், அழகழகான மலைக் குன்றுகளையும், விதவிதமான பறவைகளையும், விலங்குகளையும், ஓடைகளையும் நாம் தரிசிக்கலாம்.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நடைப்பயணமாகவோ அல்லது குதிரைச் சவாரி செய்தோ இந்தப் பயணத்தை அனுபவிக்கிறார்கள். சிலர்  100 மைல்கள் கூட  பயணம் செய்யாமல் வீடு திரும்பிவிடும் சம்பவம் கூட நிகழ்கிறது. ‘இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் அனுபவிக்க வேண்டிய அழகான பத்து விஷயங்களில் இந்தப் பயணமும் ஒன்று’ என்கின்றனர் செரில் போன்ற பயணக் காதலர்கள்.