மல்யுத்தப் பெண்பெண்களால் செய்ய முடியாத வேலை என்று தற்போது எதுவுமே  இல்லை. ஆண்களால் மட்டுமே பங்கு பெறக்கூடிய போட்டியாக பார்க்கப்பட்ட மல்யுத்தத்தில் பெண்களும் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் முன்னாள் பளுத்தூக்கும் வீராங்கனையான ஹரியானாவை சேர்ந்த கவிதா தேவி தற்போது WWE (World Wrestling Entertainment) என்று அழைக்கப்படும் பொழுதுபோக்கு மல்யுத்தத்தில் பங்கு பெற ஒப்பந்தம் செய்திருக்கிறார்.  இந்த பெருமையை பெரும் முதல் இந்திய பெண் கவிதா தேவி. 

முன்னாள் பளுத்தூக்கும் வீராங்கனையான கவிதா தேவி தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஹரியானாவை சேர்ந்த இவருக்கு வயது 34. ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மால்வி என்ற சிறு கிராமத்தில் இருந்து வந்தவர் கவிதா தேவி. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் ஆறாயிரத்திற்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

மேலும் இங்கு பெரிய அளவில் சாதிக்க நினைப்பவர்களுக்கு எவ்வித வசதியும் இல்லை என்பதும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம்.  பெண்கள் படிக்க தடைவிதிக்கும் அந்த கிராம சூழலை மீறி பி.ஏ. வரை படித்து முடித்திருக்கிறார் கவிதா. இவருடைய எல்லா வெற்றிக்கும் பின்னால் இவர் சகோதரர் சந்தீப் உறுதுணையாக இருந்திருக்கிறார். மேலும் கவிதா இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ‘மே’ என்ற இளைஞர்களுக்கான கிளாசிக் டோர்னமென்டில் பங்கேற்றதின் மூலமாக உலக பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டான WWE ல் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் முதல் பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். 

சமீபமாக இணையத்தில் பெண் ஒருவர் மல்யுத்த போட்டிக்கு சுடிதாரில் வந்து சண்டையிட்டு ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் வீழ்த்திய காணொளி வைரலாக பரவி வந்ததை பார்த்திருப்போம். உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் இந்த WWEல் முதன் முதலாக பெண் ஒருவர் இந்தியாவிலிருந்து பங்கு பெறப்போவது ஆச்சரியமூட்டும் விஷயமாக இருக்கிறது. இருந்தபோதிலும் உலக மல்யுத்த பொழுதுபோக்கான WWEல் இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்கள் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். கிரேட் காலி முதல் WWE சாம்பியன் ஜிந்தர் மஹால் வரை எண்ணற்ற வீரர்களால் பெருமை அடைந்துள்ளது. 

அந்த வரிசையில் மிகப் பிரபலமான மல்யுத்த வீரரான பஞ்சாபை சேர்ந்த கிரேட் காலியிடம் பயிற்சி பெற்ற இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரரான கவிதா தேவி தற்போது நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் நியூசிலாந்து மல்யுத்த வீரரான டகோட்டாக்காயுடன் நடந்த முதல் சுற்றில் கவிதா தோல்வியடைந்திருந்தாலும் அவர் பங்கேற்ற போட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதற்கான காரணம் என்னவென்றால் கவிதாவின் மல்யுத்த திறனும், சுடிதார் அணிந்து வந்திருந்தாலும் எதிர் போட்டியாளரை புரட்டி போட்டு துவம்சம் செய்ததும்தான்.

துபாயில் நடந்த WWE போட்டியிலும் கவிதா தேவி பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகுதிச் சுற்றில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். போட்டியில் பங்கேற்ற 32 போட்டியாளர்களில் இவரும் ஒருவர். நான்கு வயதே ஆன குழந்தைக்குத் தாயான கவிதா தேவி திருமணத்திற்குப் பிறகு சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பெரும் முன்னுதாரணம்.

- பி.கமலா தவநிதி