வானவில் சந்தைஎனது தியேட்டர் எனது திரைப்படம் வாரம் ஒருமுறை தியேட் டருக்குச் சென்று திரைப்படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் எனது நண்பரொருவர் சில நாட்களுக்கு முன்பு சந்தித்த போது சலித்துக்கொண்டார். நூற்றியிருபது ரூபாய் செலவில் படம் பார்ப்பவர் (அவர் மிகவும் விரும்பிக் குடிக்கும் காப்பியைக் கூட தியேட்டருக்கு வெளியே வந்துதான் குடிப்பார்), இப்போது அதற்கு இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதே சலிப்புக்குக் காரணம். திரைப்படங்கள் இணையம் வழியாக மடிக்கணினியிலும், மொபைல்போன் திரைகளிலும் பெரும்பாலும் கண்டு ரசிக்கப்படுகின்ற காலம் இது.

இதனால், இரண்டரை மணி நேர திரைப்படத்தைச் சரசரவென பாடல்களைத் தாண்டி விட்டு, ஒன்றரை மணி நேரமாகச் சுருக்கிப் பார்க்கும் ஒரு தலைமுறை உருவாகி விட்டது. திரைப்பட அனுபவம் இன்று தியேட்டரை தாண்டிய ஒரு பிரத்யேகமான அனுபவமாக, தொழில்நுட்பத்தால் மாற்றப் பட்டுவிட்டது. அந்தப் பிரத்யேகமான அனுபவத்தைத் தீவிரமாக அணுகுபவர்களுக்கு ‘ஹோம் தியேட்டர்’ ஒரு அருமையான தீர்வு.  

தொன்னூறுகளின் இறுதியிலேயே, இந்தியாவில் ஹோம் தியேட்டர்கள் பிரபலமாகத் தொடங்கிவிட்டன. அப்போது ஆடியோ சிடிக்களும், வீடியோ சிடிக்களும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. பலரும் விசிடி ப்ளேயர்களை வாங்கத் தொடங்கியிருந்தார்கள். பெரிய திரைகளைக் (29 இன்ச் அளவு) கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகளும் பரவலாக விற்பனையாகின.

5.1 சரவுண்ட்  சவுண்ட் ஹோம் தியேட்டர்கள் அப்போது பரவலாக விற்பனையாகின. 5.1 டால்பி சரவுண்ட் சவுண்ட் என்பது ஐந்து ஸ்பீக்கர்களின் (பார்வையாளருக்கு முன்னால் மூன்று, பக்கவாட்டில் இரண்டு மற்றும் ஒரு வூஃபர்) வழியாக சினிமா ஒலியைக் கேட்கும் அனுபவத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அதற்கு முன்பு, ஒரு திரையரங்கத்தில்தான் அப்படியொரு அனுபவம் சினிமா ரசிகனுக்குக் கிடைத்து வந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் திரையரங்கத்திற்கு வரும் கூட்டம் குறையத் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

விசிடியிலிருந்து டிவிடி க்கு மாறிப் பின் ப்ளூ ரே எனத் தொழில்நுட்பம் பார்க்கும் கேட்கும் அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இன்று, எல்.ஈ.டி. தொழில்நுட்பம் தொலைக்காட்சித் திரையின் அளவைப் பெருமளவு மாற்றிவிட்டது. இருபத்தோரு இன்ச் திரைகள் இருந்த வீடுகளில் இப்போது எழுபத்தைந்து இன்ச் திரைகள் காணக் கிடைக்கின்றன. வீட்டிலேயே திரைப்படங்களைக் காணும் அனுபவம் இப்போது போல எப்போதும் இருந்ததில்லை.   

ஹோம் தியேட்டர் சந்தை
ஒரு ஹோம் தியேட்டர் அமைப்பதற்கு என்னென்ன தேவை என்பதை முதலில் பார்க்கலாம்.

1. தொலைக்காட்சித் திரை: ஒரு ஹோம் தியேட்டரின் முதன்மையான கருவி தொலைக்காட்சித் திரைதான் (இங்கே ப்ரொஜெக்டர்களை நாம் குறிப்பிடவில்லை). தொலைக்காட்சித் திரை இப்போது பல்வேறு அளவுகளிலும் பலவிதமான தொழில்நுட்ப மாறுபாடுகளுடனும் கிடைக்கின்றன. 32 இன்ச் எல்.ஈ.டி. திரையை பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து பல லட்சம் விலையுள்ள அதிநுட்பமான திரைக்காட்சியைக் காட்டும் அல்ட்ரா ஹை டெஃபனிஷன் (UHD) வரை அவரவர் வசதிக்கு ஏற்ப இன்று சந்தையில் வாங்கலாம். இது பற்றி ஏற்கனவே விரிவாக வானவில் சந்தையில் எழுதியிருக்கிறோம்.

2. டிவிடி / ப்ளூ ரே பிளேயர்: திரைப்படங்களின் டிவிடி அல்லது ப்ளூ ரே குறுவட்டுகளைப் போட்டுக் காண உதவும் ஒரு கருவி இது. பொதுவாக இந்தச் சந்தையை அடிப்படை சாதனங்கள் மற்றும் உயர்தர சாதனங்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம். அடிப்படை சாதனங்களை எல்ஜி, சாம்சங், பிலிப்ஸ், சோனி போன்றவை விற்கின்றன. இவை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து இருபதாயிரம் வரையில் விற்கப்படுகின்றன.

உயர்தர சாதனங்களை யமஹா, பயோனீர், மராண்ட்ஸ், டெனான், ஆன்க்யோ போன்ற நிறுவனங்கள் விற்கின்றன. தொழில்நுட்பத்தில் முன்னணியில் நிற்க வேண்டிய தேவையிருப்பதால் ஆராய்ச்சியின் மூலம் தங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றன இவை. அதனால் கடும் போட்டியும் நிலவுகிறது. அதி உயர்தர காணொளிக் காட்சிகளை உற்பத்தி செய்யும் இவ்வகை சாதனங்கள் உலகளாவிய சந்தையைக் கொண்டவை. இருபத்தைந்தாயிரம் ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரையிலான விலையில் இவை இங்கு கிடைக்கின்றன. சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இவை கிடைக்கும்.

3. ஆடியோ வீடியோ ரிசீவர் (AV Reciever):  ப்ளூ ரே டிவிடி ப்ளேயரிலிருந்து கிடைக்கும் ஒலி ஒளி சிக்னல்களை மாற்றி, ஸ்பீக்கர்களுக்கு ஒலிக்கோவைகளையும் தொலைக்காட்சித் திரைக்கு ஒளிக்காட்சிகளையும் அனுப்பும் வேலையைச் செய்வதே ஏவி ரிசீவரின் பணி. ஒரு ஹோம் தியேட்டர் மிகச் சிறப்பான ஒளி ஒலி அனுபவத்தைத் தருவதற்கு இன்றியமையாதது இந்த சாதனம். சோனி, யமஹா, பயனீர், மராண்ட்ஸ், டெனான், போன்ற பல நிறுவனங்கள் இவற்றில் போட்டியிடுகின்றன. சில ஆயிரம் ரூபாயிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை இவை விற்கப்படுகின்றன.

4. ஸ்பீக்கர்கள்:  ஒளிக்காட்சிக்கு எப்படி தொலைக்காட்சித்திரையோ அப்படி இசைக்கு ஸ்பீக்கர்கள். நல்ல இசைக்கு உயர்தரமான ஸ்பீக்கர்கள் இன்றியமையாதவை. ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் அமைப்பை 5.1, 7.1 என இரண்டாகப் பிரிக்கலாம். 7.1 ஸ்பீக்கர் அமைப்பில் பார்வையாளருக்கு முன்னால் மூன்று, பக்கவாட்டில் இரண்டு, பின்னால் இரண்டு மற்றும் ஒரு சப் வூஃபர் என்று பொருத்தப்படும்.

இது ஒரு காட்சியின் சூழலில் நம்மை இருத்திவிடும் தன்மை கொண்டது. சிறிய பிராண்டுகளும் உலகின் உயர்தரமான மிகப்பெரிய பிராண்டுகளும் போட்டியிடும் களமாக இது இருக்கிறது. சில ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்கள் இப்போது எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன. இன்டெக்ஸ், ஸீப்ரானிக்ஸ், எஃப் & டி போன்றவை சில ஆயிரங்கள் விலையில் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களை விற்கின்றன.

நடுத்தரமான விலையில் எல்.ஜி, சாம்சங், பிலிப்ஸ், சோனி போன்றவை போட்டியிடுகின்றன. உயர்தர ஸ்பீக்கர்கள் பல ஆயிரம் ரூபாய்களிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை மலைக்க வைக்கும் விலையில் சந்தையில் கிடைக்கின்றன. போஸ், ஹார்மன் கார்டன், ஜே பி எல், கே ஈ எஃப், பாஸ்டன் அக்கூஸ்டிக்ஸ் என்று எண்ணற்ற பிராண்டுகள் போட்டியிடும் களம் இது.

ஒரு சினிமா ரசிகனாக நீங்கள் என்ன பட்ஜெட்டில் ஹோம் தியேட்டர் அமைக்க விரும்புகிறீர்கள் என்று முதலில் திட்டமிடுங்கள். பிறகு உங்கள் அருகாமையில் உள்ள சந்தையில் என்ன கிடைக்கின்றன என்று பாருங்கள். ஏனென்றால், உயர்தர பிராண்டுகள் பெரிய நகரங்களில்தான் கிடைக்குமென்பதோடு, ஏதேனும் பிரச்சினையென்றால் உள்ளூரில் சேவை கிடைக்காது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். இது போன்ற மின்சாதனங்களை ஆன்லைனில் வாங்குவதை விட, நேரில் சென்று, ஒளி ஒலி அமைப்பை சோதித்துப் பின் வாங்குவதே சிறப்பு. அதே நேரம், கடைகளில் சொல்லும் விலையோடு ஆன்லைன் விலையை பொருத்திப் பார்ப்பதில் தவறில்லை. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவை அதற்கு உங்களுக்கு உதவக்கூடும்.   

(வண்ணங்கள் தொடரும்!)