வாழ்வைத் தின்னும் கந்துவட்டி



திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அந்த கோரக் காட்சி யார் நெஞ்சையும் விட்டு அகலவில்லை. இரண்டு பிஞ்சு உயிர்கள் உடலில் எரிந்த தீ சதை தின்னும் வலி தாளாமல் கதறிக் கதறி காப்பாற்ற நினைத்தவர்களையும் ஏமாற்றி விட்டு பிரிந்தன காற்றில். அந்தக்காட்சியை படம் எடுத்தவர்களை சோசியல் மீடியாக்களில் புரட்டிக் கொண்டிருக்கும் மக்கள் இப்படியொரு கொடுமை நடக்க காரணமாக இருந்த கந்துவட்டி முறையை வேரறுக்க வேண்டிய தேவையும் உள்ளது.

நெசவு, கொலுசுப்பட்டரை, தச்சு வேலை, விவசாயக் கூலி என உடல் உழைப்பை நம்பி வாழ்வை நடத்தும் மக்களின் அவசரத் தேவைகளே கந்து வட்டிக்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. அதிக வட்டி என்று தெரிந்தும் அவசரத்துக்காக வாங்கும் கந்து வட்டி ... மணிக்கணக்கு வட்டி, மீட்டர் வட்டி, மில்லி மீட்டர் வட்டி என பாம்பின் விஷம் போல் பரவும் தன்மை கொண்டது கந்து வட்டி.

எளிய மக்களால் வட்டிக்கு வட்டி என பறக்கும்  தன்மையால் வட்டியைக் கூட கட்டமுடியாமல் பெருந்தொகைக் கடனாளிகளாக மாற்றப்படுகின்றனர். கந்துவட்டிக் கொடுமைக்காக தற்கொலைகள் நடப்பது மட்டுமே வெளியில் வருகின்றன. இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அந்த வீட்டின் பெண்களே என்கிறார் சேலம் வழக்கறிஞர் மற்றும் பெண்ணிய செயல்பாட்டாளர் தமயந்தி.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கந்துவட்டிக் கொடுமைகள் காலம் காலமாக காணப்படுகிறது. சேலத்தில் 2010ம் ஆண்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழியாக கந்துவட்டியால் கொத்தடிமைகளாக்கப்பட்ட 13 குடும்பங்களை மீட்டு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். சேலம் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களையும் கந்து வட்டிக்காரர்கள் அடிமைகள் போல் பயன்படுத்தினர். அவர்கள் ரேஷன் கார்டு, ஏ.டி.எம். கார்டு இரண்டும் கந்து வட்டிக்காரர்களிடம் இருக்கும்.

துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வந்தால் கந்து வட்டிக்காரர்கள் எடுத்தது போக மிச்சம் தான் அவர்களுக்குக் கிடைக்கும். இது போன்ற பிரச்னைகளுக்கும் அப்போதைக்கு தீர்வு காணப்பட்டது. இன்றளவும் இது போன்ற கொடுமைகள் தொடர்கிறது. ஒரு குடும்பத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கிவிட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது அந்தக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள். வட்டிக்கட்ட முடியாமல் கடன் தொகை பெருகிடும் போது கந்து வட்டிக்காரர்கள் அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு பல்வேறு மன உளைச்சல்களை அளிக்கின்றனர்.

கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது. கடனைக் கட்டி முடிக்கும் வரை உன் மனைவி, குழந்தைகள் என் கஸ்டடியில் இருக்கட்டும் என அவர்களை சிறைப்பிடிப்பது. பின் அவர்களை பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாக்குவதும் நடக்கிறது. மனைவியை அனுப்பி கடனை கழித்துக் கொள் என்று சொல்லும் கந்து வட்டிக்காரர்கள் உள்ளனர். இது போன்ற விஷயங்கள் வெளியில் வந்தால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதால் பாலியல் ரீதியான கொடுமைகள் வெளியில் வராமல் பெண்களின் மனதுக்குள் புதைக்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தின் மார்க்கெட் பகுதிகளில் பூ, பழம் விற்கும் அன்றாட வியாபாரிகள் காலையில் வாங்கிய  பணத்தை  மாலையில் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். தாமதித்தால் மணிக்கணக்கில் வட்டி ஏறும். வாங்கிய கடனைத் திருப்பித்தர முடியாத பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதும் சாதாரணமாக நடக்கிறது. கந்துவட்டித் தொல்லை எல்லை மீறும் போது தான் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

2003ம் ஆண்டு கந்துவட்டி தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 சதவீதத்துக்கும் மேல் வட்டி வாங்குபவர்கள் மட்டுமே இந்தச் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். கடன் கொடுத்துவிட்டு டார்ச்சர் செய்பவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயும். இவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 2010ம் ஆண்டுக்கு மேல் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு டார்ச்சர் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சுய உதவிக்குழுக்கள் வந்த பின் பெண்கள் கந்துவட்டியால் பாதிக்கப்படுவது குறைந்திருந்தாலும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை’’ என்கிறார் தமயந்தி. சரி இதற்கு தீர்வு தான் என்ன? தமயந்தி கூறுகையில், ‘‘கந்துவட்டிக்கு எதிராக வலுவான சட்டம் வேண்டும். அரசு தான் இது போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. கந்துவட்டி புகார்கள் எழும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.

சமீபத்திய புள்ளி விவரப்படி கந்து வட்டிக்கு பணத்தை கடன் கொடுப்பவர்களில் காவல்துறை அதிகாரிகளே அதிகளவில் உள்ளனர். சாதாரணமாக கந்துவட்டிப் பிரச்னைகள் காவல் நிலையம் வரை செல்லும் போதும் அதையே கட்டப் பஞ்சாயத்தாக மாற்றி பணம் வாங்கிக் கொண்டு வழியனுப்பும் வேலைகள் தான் நடக்கிறது. காவல்துறையினர் கந்து வட்டிக்காரர்களிடம் மாமூல் வாங்குவது போன்ற நடைமுறைகளும் அவர்கள் செயல்படாமல் இருப்பதற்கு காரணம். அரசியல்வாதிகளும் இதுபோன்ற வட்டித் தொழில்களில் உள்ளனர்.

காவல்துறையை ஆளும் அரசாங்கம் தான் கையில் வைத்திருக்கிறது. கடன் தொல்லையால் பெண்களுக்கு நடக்கும் மறைமுகமான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தற்கொலைகளை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’என்கிறார் தமயந்தி. தந்தை வாங்கிய கந்து வட்டிக்காக குடும்பமே பிணையக் கைதிகளாக் கப்படுகின்றனர். படிப்பை பாதியில் விடும் குழந்தைகள் குழந்தைத் தொழிலா ளர்களாக மாற்றப்படுகின்றனர். கடன் கொடுத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கின்றனர். அதை வெளியில் சொல்லமுடியாத அடிமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கந்துவட்டியின் கொடுமைகள் பற்றிப் பரவலாகப் பேசத்துவங்கிய பின் அது சார்ந்த கொடூரங்களும் வெளிப்படத் துவங்கியுள்ளது. ஈரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. விசைத்தறித் தொழிலாளி. மனைவி சம்பூரணம் டெய்லர். இரண்டு குழந்தைகள். இருவரும் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தனர். கடன் வாங்கி வட்டி மட்டுமே கட்டி வந்துள்ளார் ரவி. கடன் கொடுத்தவர் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்துள்ளார். பணம் கொடுக்க முடியாவிட்டால் உன்னிடம் இரண்டு கிட்னி உள்ளதல்லவா அதை விற்றுப் பணம் கொடு என்று வற்புறுத்தியுள்ளார்.

கிட்னி புரோக்கரிடம் நானே அழைத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளார். ரவி வர மறுத்த நிலையில் அவருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர் ரவியின் கிட்னியை எடுக்க கேரள மாநிலத்துக்கு கடத்திச் சென்று விட்டதாகவும், கணவரை மீட்டுத் தர வேண்டும் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் ரவியின் மனைவி.

தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் புகார்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக வந்த புகார்கள் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கந்து வட்டிக் காரர்கள் உயிரை எடுப்பவர்களாகவும், பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவது, கொத்தடிமைகளாக மாற்றுவது போன்ற  கொடூரங்களைச்  செய்பவர்களாக வளர்ந்து நிற்கின்றனர்.

அடித்தட்டுக் குடும்பங்களில் கூட ஆண், பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலை காணப்படுகிறது. பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பு முடித்த உடன் அவர்கள் குழந்தைகளும் வேலைகளுக்கு செல்கின்றனர். இவ்வளவையும் தாண்டி கடனில் விழக் காரணம் என்ன? மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட் டங்களின் நிலை குறித்து மதுரை சோக்கோ அறக்கட்டளையின் துணை இயக்குனர்  செல்வகோமதி கூறுகையில்...
    
‘‘தினமும்  ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு பூ விற்பது, காய்கறி விற்பனை போன்ற சிறு முதல் தேவைப்படும் வியாபாரிகள் கந்துவட்டிக்காரர்கள் கைகளில் சிக்குகின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 900ம் ரூபாய் காலையில் கொடுப்பார்கள். மாலையில் வியாபாரம் முடித்து விட்டு 1100 ஆக திருப்பித் தர வேண்டும். அந்தத் தொகையை கொடுக்கத் தவறினால் மணிக்கு ஏற்ப மீட்டர் வட்டியாக மாறிடும்.

இவர்கள் பேருந்து நிலையம், கடைவீதி போன்ற இடத்தில் தான் உட்காரும் அளவுக்கு சிறிய இடத்தில் கடை போடுவார்கள். இவர்கள் கடை வைத்த இடத்துக்கான வாடகை போல தினமும் போலீசுக்கு ஒரு கட்டணம் தர வேண்டும். சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதி கடனுக்கு வட்டியாகவும், போலீசுக்கு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஒரு நாள் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றால் கூட வாங்கிய கடனை செலுத்த முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர்.

கந்து வட்டிக்காக கடன் வாங்கும் யாரும் தன் சொந்தத் தேவைக்காக உடல் நலக் குறைபாட்டுக்காக வாங்குவதில்லை. மகள் திருமணம், உறவினருக்கு முறை செய்தல் ஆகியவற்றுக்கே அதிகளவில் கடன் வாங்குகின்றனர். தென் மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது. காதுகுத்து வீட்டுக்கு முறை செய்ய வரவில்லை என்றால் மைக் போட்டு ஊருக்கே சொல்லும் வழக்கம் உள்ளது. இறந்தவருக்கு முறை செய்யக் கூட ஏழை மக்கள் 50 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.

இதற்கெல்லாம் வாங்கும் கடன் வளர்ந்து நிற்கிறது. அதே போல மொய் விருந்து நடத்தவும் தென் மாவட்டங்களில் அதிக கடன் வாங்குகின்றனர். வருமானத்துக்கு மீறிய செலவினங்களுக்காக வாங்கப்படும் கடன் பெருகி அவர்களை வாழ விடாமல் செய்கிறது. இப்படி வாங்கிய கடன்களுக்காக குடும்பத்துடன் அடிமையாக ஆண்டுக்கணக்கில் வேலை பார்ப்பதும் நடக்கிறது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் கணவன் இறந்து விட்டால் குழந்தைகளை வளர்க்கவே கஷ்டப்படும் பெண்கள் கடன் கொடுத்தவர்களால் பல்வேறு கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.

கந்துவட்டிக்காரர்களின்  அராஜ கங்களை கடுமையான சட்டங்களின் வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும். சிறு வணிகம் செய்யும் நபர்களுக்கு தினக்கடன்களை அரசே குறைந்த வட்டிக்கு வழங்கலாம். அரசின் திட்டங்கள் தேவைப்படும் மக்களுக்கு சென்றடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கந்து வட்டிக் கொடுமைகளில் சிக்கிக் கொள்பவர்களை மீட்க மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் கந்துவட்டி தொழில் செய்வது தடுக்கப்பட வேண்டும். இது போன்ற தொடர் நடவடிக்கைகளால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்’’ என்கிறார் செல்வகோமதி.

- யாழ் ஸ்ரீதேவி