குரல்கள்



நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?

திரைப்படம் என்பது ஒரு கலை வடிவம் அல்லது பொழுது போக்கு அம்சம் என்பதைத் தாண்டி அது ஒரு மாநிலத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது தமிழ்நாட்டில்தான். ராஜாஜி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா என ஆறு தமிழக முதல்வர்களும் சினிமாவில் பங்களித்தவர்கள். அதுபோல டி.ராஜேந்தர், பாக்யராஜ், சிவாஜி கணேசன் என அரசியலில் தோல்வியுற்ற நடிகர்களும் உண்டு.

இன்றைக்கு ரஜினி, கமல் என இருபெரும் நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ‘ஆளப்போறான் தமிழன்’ என விஜய் தனது படத்தின் வாயிலாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தான விமர்சனங்கள் நெடுங்காலமாகவே இருந்து வருகிறதுதான் என்றாலும் இன்றைய அரசியல் சூழலில் நடிகர்களின் வரவை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று நம் தோழிகளிடம் கேட்டோம்.

லதா, உதவிப் பேராசிரியர்
ஜனநாயக நாட்டின் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்துக்குப் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிற அடிப்படையில் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களின் உரிமை சார்ந்தது. அவர்கள் வரக்கூடாது என்று சொல்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. நடிகர்கள் மட்டுமல்ல ராமதாஸ், கிருஷ்ணசாமி, தமிழிசை போன்ற மருத்துவர்களும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். பின்புலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் அது அரசியலுக்கு வருவதற்கான தகுதி ஆகி விடாது. சினிமா நடிகர்கள் தங்களது பிரபலத்தை வைத்து மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. சமூகத்தின் மீது ஆழ்ந்த புரிதல் உடையவர்களாக  அவர்கள் இருக்க வேண்டும். நமது மாநிலத்தின் உள் கட்டமைப்பு எப்படிப்பட்டது? நம் மக்களுக்கான தேவைகள் என்ன? அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தெளிவை அவர்கள் அடைந்திருக்க வேண்டும். ஏழரை கோடி மக்களை ஆளப்போகிறவருக்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

ரசிகர்கள் கூட்டம், படத்தின் வசூல் ஆகியவற்றை மட்டும் அரசியலுக்கு வருவதற்கான பலமாக நினைத்து விடக்கூடாது. யாரும் பிறப்பிலேயே அரசியல்வாதியாகப் பிறப்பதில்லை. அரசியலில் இறங்கும் முன் அதற்குத் தேவையான சமூகப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நடிகர்கள் ஆண்டால் நாடு சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களும் உண்டு. அதுவும் ஒரு வகையான மூட நம்பிக்கைதான்.

கிருத்திகா சீனிவாசன், முதுகலை பட்டதாரி
நடிகர்களுக்கான தகுதி என்பது நடிப்புத் திறன் மட்டும்தான். அரசியல் என்பது மக்கள் மற்றும் சமூக நலன் சார்ந்தது. நடிகராக இருப்பது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான தகுதி ஆகி விடாது. சமூகம் சார்ந்த ஆழமான புரிதலும், பார்வையும் தேவை. அதே சமயம் களப்பணியும் தேவைப்படுகிறது. இவை எதுவும் இல்லாமல் நடிகர் என்கிற காரணத்துக்காக மட்டும் எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்திய அரசியல் சாசனத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்பதால் மட்டும் அரசியலுக்கு வருவது பெரும் சீர்கேட்டை உருவாக்கும். நடிகர்கள் தங்களது ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலமாக ரத்ததானம் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவையெல்லாம் மேம்போக்கானவை. சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள், ஆணவக்கொலைகள் போன்ற தலையாய பிரச்னைகளில் அவர்கள் களத்தில் நின்றிருக்கிறார்களா? என்பது முக்கியம். ஆள்வதற்கான தகுதிகளைக் கொண்டிருப்பின் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதுபொருட்டல்ல. 

ரம்யா, ஐடி ஊழியர்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் இது நாள் வரை அவர்களுக்கு பணத்தையும், புகழையும் கொடுத்தவர்கள் மக்கள்தான் என்பதை உணர வேண்டும். அப்படிப்பட்ட மக்களுக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தோடு வர வேண்டும். மாற்றம் வேண்டி நடிகர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக ஆட்சி புரிய வேண்டும். மக்கள் மீதும்  சமூக நலன் மீதும் அக்கறை கொள்ளாதவர்கள் வெறும் பிரபலம் என்பதற்காக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. வருவது நல்லதுமல்ல.

அர்ச்சனா, திரைக்கலைஞர் நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டியது முக்கியமானது. நடிகர்கள் தான் ஆள வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாக மாறி வருகிறது. நடிகர்கள் ஆண்டால் சிறப்பாக இருக்கும் என எண்ணுபவர்களை என்னதான் சொல்வது? திரையில் மக்களின் பக்கம் நிற்பது போன்று நடிப்பவர்கள் நிஜத்திலும் நிற்பார்கள் என்பதெல்லாம் மூடத்தனம்.

நம்மை ஆட்சி செய்வதற்கு நடிகர்களை விட்டால் வேறு ஆட்களே இல்லையா? சிறந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை தருபவர்களை ஆதரிக்கலாமே. ஆளும் தகுதி நடிகர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்கிற எண்ணத்திலிருந்து வெளியே வந்தாலே நல்ல தலைவர்களை காண முடியும்.

சுதா, வழக்கறிஞர்
நடிகர் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்வியே ஜனநாயக விரோதமானது. இந்திராகாந்தி மகன் என்ற ஒரே தகுதிதான் ராஜீவ்காந்தியின் அரசியல் நுழைவுக்கான ஒரே துருப்புச் சீட்டு என்பதை மறந்துவிட வேண்டாம். ஏன் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கும் கூட இது பொருந்தக் கூடியதே. இவர்கள் அரசியலுக்கு வருமுன் மக்களுக்காக என்ன செய்தார்கள் . ஒன்றுமே இல்லை. இவர்களின் வருகையும் நியாயமா என்று கேட்க வேண்டுமா இல்லையா? கமல், ரஜினி என்றால் மட்டும் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி வருகிறது.

யார் வேண்டுமானாலும் வரட்டும். ஒன்றே ஒன்றுதான். இன்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக அவர்கள் முன்வைக்கும் கொள்கை என்ன என்பதே அடிப்படை. முதலில் ‘அணுஉலையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அது மனிதகுலத்துக்கு எதிரானது, வளர்ச்சி வல்லரசுக் கனவு என்ற பெயரிலானாலும் அணுவுலையை ஆதரிக்கமாட்டோம்’ என்று சொல்ல யார் தயார்? இப்படி ஒவ்வொன்றிலும் அதனடிப்படையில் ஒட்டுமொத்தமாகவும் மாற்றுக் கொள்கையை, நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். இதுதான் யாராக இருந்தாலும் ஆதரிப்பதற்கான அடிப்படை என்பதே என் கருத்து.

- கி.ச.திலீபன்