விடைபெறும் டென்னிஸ் புயல்



சுவிஸ் நாட்டு டென்னிஸ் புயல் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்த வார இறுதியில் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்.யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் தவானின் சான் யங் ஜங் உடன் இணைந்து தற்போது விளையாடி வருகிறார். இத்தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொள்வதாகவும் ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.

37 வயது நிரம்பிய மார்ட்டினா ஹிங்கிஸ் தான் ஓய்வு பெறுவது குறித்து கூறும்போது, ‘நான் டென்னிஸுக்கு அறிமுகமாகி 23 ஆண்டு களாகிவிட்டன. தற்போது எனது மனம் வலிமையாக இருந்தாலும்  உடல்  அதற்கு ஒத்துழைக்கவில்லை’ என்றார். இவர் தனது ஃபேஸ்புக் பதிவில், ‘கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் நான் எனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினேன்.

இத்தனை ஆண்டுகளில் எனது விளையாட்டிலும் வாழ்க்கை யிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். இப்போது ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 1994ம் ஆண்டு முதல் விளையாடி வரும் மார்ட்டினா ஹிங்கிஸ் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். அவற்றில் 5 ஒற்றையர் பட்டங்களும், 7 கலப்பு இரட்டையர் பட்டங்களும், 13 மகளிர் இரட்டையர் பட்டங்களும் அடங்கும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-சீன தைபேவின் சான் யங் ஜான் ஜோடி இறுதிச் சுற்றில் வென்றதன் மூலம் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். இது குறித்து மார்ட்டினா ஹிங்கிஸ்,"இதுவரை டென்னிஸ் வாழ்க்கையில் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பது எனக்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

இது எனக்கு மிகுந்த பெருமை தருவதாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒற்றையர் பிரிவில் பட்டம்  வென்றேன். அதே அமெரிக்க ஓபனில் இப்போது மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகியிருக்கிறேன். அற்புதமான எனது டென்னிஸ் பயணத்தில் இந்த நேரம் மகிழ்ச்சிகரமானது" எனவும் தெரிவித்தார். சர்வதேச டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிஸ் நாட்டின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை நம்பர் ஒன் ஜோடியாக இருந்து வந்தது.

மியாமி ஓபன் டென்னிசில் மார்ட்டினா ஹிங்கிஸ் மற்றும் இந்திய வீராங்கனை சானியா மிர்சாவும் இணைந்தனர். இரட்டையர் டென்னிஸ் போட்டியினை கலக்கிய இந்த ஜோடி, இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை அடுத்து சானியா - மார்ட்டினா ஜோடி இரட்டையர் தரவரிசை யில் 9-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

சானியா பற்றி கருத்து தெரிவித்த மார்ட்டினா, சானியாவுடன் விளையாடு வது ரொம்பவே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் எங்கள் இருவரின் ஸ்டைலும் முற்றிலும் வித்தியாசமானவை. போர்ஹேண்ட் ஸ்டைலில் சானியா திறமையாக விளையாடுவார். அதேபோல், பேக்ஹேண்ட் ஸ்டைலில் நான் நன்றாக விளையாடுவேன் எனக் குறிப்பிட்டார்.

சாம்பியன் டென்னிஸ் லீக்(CTL) பற்றி கருத்து தெரிவித்த மார்ட்டினா, இந்திய வீரர்களுடன் எனக்கு எப்போதுமே ஆரோக்கியமான நட்பு உண்டு. ஒவ்வொரு மேட்ச்சிலும் நாங்கள் இணைந்தே பயிற்சி செய்கிறோம். மேட்ச் முடிந்து செல்லும் போது ஏதோ ஒன்றை மிஸ் செய்ததை போன்ற ஒரு உணர்வு எனக்குள் இருக்கும்.  டென்னிஸ் விளையாடுவதற்காக மட்டும் நான் இந்தியாவுக்கு வரவில்லை. மும்பை, பெங்களூரு போன்ற பல நகரங்களை சுற்றி பார்க்கவும் ஆர்வத்துடன் இருப்பேன் எனத் தெரிவித்தார்.

மற்றோர் தருணத்தில் லியாண்டர் பயஸ் பற்றி கருத்து தெரிவித்த மார்ட்டினா, அமெரிக்காவில் இரண்டு சீசன்களில் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். பயஸிடம் இருக்கும் ஒரு நல்ல பண்பு தன்னுடன் ஜோடி சேர்ந்து விளையாடும் வீராங்கனைகளின் பாதுகாப்பை அவர் உறுதிசெய்வதுதான்.

ஒரு மேட்ச்சில் விளையாடும் போதும் சரி, உறவு முறைகளிலும் சரி பாதுகாப்பாக இருப்பதையே எந்தப் பெண்ணும் விரும்புவாள். இதுதான் பெண்களின் இயல்பு. அந்த வகையில் லியாண்டர் பயஸ் சிறந்த பண்புள்ளவர் எனக் கருத்துத் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மார்ட்டினா ஹிங்கிஸ், கடந்த 23 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் பல சாதனைகளை படைத்து வெற்றி நடைபோட்டவர். இவர் கடந்த 2003ம் ஆண்டு தனது 22வது வயதில் ஓய்வு பெற திட்டமிட்டு பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல சாதனைகளை படைத்த இந்த டென்னிஸ் வீராங்கனையினை வாழ்த்தி விடை தருவோம்.

- மகேஸ்வரி