இருமனம் கொண்ட திருமண வாழ்வில்ஒப்பனை - 7

திருமணத்தில் தங்கள் அழகை வெளிப்படுத்த மணமக்கள் காட்டும் முக்கியத்துவம் மிகப்பெரிய வியாபார உத்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் திருமணம் என்றால் அதிகபட்சம் மணப்பெண்ணிற்கு ஜடை பின்னி ரெடிமேடாக செய்யப்பட்ட பூ நாடாவை வைத்து கட்டி, உடனிருக்கும் உறவும், நட்புகளுமே அலங்காரம் செய்து பெண்ணை தயார் செய்வார்கள். இப்போதைய நிலை வேறு. அழகு சாதனப் பொருட்களும், அதை சந்தைப்படுத்துதலும் பெண்களை அதை நோக்கி ரொம்பவே நகர வைத்திருக்கிறது.

அழகு… அழகு... அழகு... அழகிற்குத்தான் பெண்கள் எவ்வளவு அடிமை. திருமணத்தன்று எப்படி எல்லாம் தன்னை அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் மணமக்களுக்கு தோன்றும் கனவு அலாதியானது. இயற்கையிலே பெண்கள் அழகுதான். திருமணம் முடிவானதும், இன்னும் தன்னை அழகாக்க நினைத்து அழகு நிலையங்களை நோக்கிச் செல்லத் துவங்குகிறார்கள்.

மணமக்களுக்கான அழகு கலை தொடர்பான விசயங்களை அறிய துறைசார்ந்த அழகுக்கலை நிபுணர்களான ரூபி சர்மா மற்றும் ஹேமலதாவை அணுகிய போது... ரூபி சர்மா சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “அவரவர் கலாச்சாரம், பழக்க வழக்கங்களைப் பொருத்தே அழகுபடுத்துவதிலும் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்கள் தாங்கள் இயற்கையாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புவார்கள்.

ஆனால் வடநாட்டு பெண்கள் தங்களின் அழகை வெளிப்படுத்தும விதம் மிகவும் பிரைட்டாக இருக்கும். மேக்கப் எல்லாமே டார்க்கா வித்தியாசமான கலரில் மிகவும் தூக்கலாக, அடர்த்தியான புருவங் களுடன் இருக்க வேண்டும். எங்களை அணுகும் மணப்பெண்ணிற்கு, மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபேசியல், வாக்சிங், ஸ்கின் பாலிஷிங், ஸ்கின் பிரைட்டனிங் போன்ற வேலைகளைச் செய்து அவர்களை அழகுப்படுத்தத் தொடங்கி விடுவோம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு, திருமண நேர அலைச்சல், சரியான தூக்கமின்மை காரணமாக தோல் வறண்டு பாதிப்படையும். திருமணம் முடிவான மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து மாதத்திற்கு ஒரு முறை அல்லது மணப் பெண்ணிற்கு தோல் பாதிப்பு அதிகம் இருந்தால் பதினைந்து நாளுக்கு ஒரு முறை என இரண்டு முறை ஃபேசியல் எடுக்கச் சொல்வோம். திருமணத்திற்கு ஐந்து நாளுக்கு முன் ஒருமுறையும் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

இதில் ஃபேசியல், பெடிக்யூர், மெனிக்யூர், பாடி மசாஜ் போன்றவைகளும் அடக்கம். மணப் பெண்ணின் தோல் நிறத் திற்கு ஏற்ற மாதிரி கோல்டன் ஃபேசியல் கொடுப்போம். சிலருக்கு இயற்கையாகவே நல்ல ஸ்கின் டோன் இருக்கும். சிலருக்கு பரு, வடு, தழும்புகள், கண்ணைச் சுற்றி கருவளையம் எல்லாம் இருக்கும். அதனால் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து எடுக்கும்போது தோல் புத்துணர்வு பெறுவதுடன் மணப்பெண்ணிற்கு கல்யாணக்களை கூடும்.

திருமணத்தன்று மணப் பெண் பார்க்க மிகவும் அழகாகத் தோன்றுவார். மணப்பெண் என்ன மாதிரியான உடை வைத்திருக்கிறாரோ அதற்கு ஏற்ற மாதிரி மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்யப்படும். எல்லா நிகழ்ச்சிக்கும் ஒரே மாதிரி இல்லாமல் எல்லா லுக்கும் ஒரே மாதிரி இல்லாமல் கிரியேட்டிவாக மேக்கப் வேண்டும். தென்னிந்தியாவின் டிரெடிஸ்னல் மேரேஜ் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி ஹெவி மேக்கப்.

கிறிஸ்டியன் மேரேஜ் என்றால் அவர்கள் வெள்ளை கவுன் அணிந்து மென்மையான கலரில் தோன்றுவார்கள். எனவே மேக்கப் கண்ணை உறுத்தும் அளவுக்கு அதிகப் படுத்தாமல், அந்த உடைக்கு ஏற்றார்போல் அவர்களை ஒரு ஏஞ்சலாகக் காட்ட வேண்டும். வட இந்திய திருமணம் என்றால் அவர்கள் திருமண உடை லெஹங்கா தான். குஜராத்தி மணப்பெண் வலது பக்கம் சேலையின் தலைப்பை போட்டு மிகவும் ப்ரைட்டாக மேக்கப் போட்டு பெரிதாக பொட்டு வைத்து, பெரிய பெரிய நகைகள் எல்லாம் அணிவார்கள்.

பெங்காலிகள் கூட அப்படித்தான். பெரிசாக பொட்டு வைத்து டார்க் மெரூன் கலர் ஷேடில் லிப்ஸ்டிக் இடுவார்கள். அவர்களுக்கு மேக்கப் எல்லாமே தூக்கலாக மிகவும் ப்ரைட்டாக தெரிய வேண்டும். அவர்களின் வழிபாட்டுத் தெய்வமான காளியின் லுக்கை தங்கள் உடைகளில் கொண்டுவர பெரிதும் முயற்சிப்பார்கள். அவர்களின் ஹேர் ஸ்டைலும் முழுவதும் மாறுபடும்.

ஒரு மணப் பெண்ணிற்கு எந்த மாதிரியான கலாச்சாரத்தில் எப்படி அவர்கள் பாரம்பரிய முறைப்படி அலங்காரம் வேண்டும் என்பதை புகைப்படம் காண்பித்தால் போதும். அதை வைத்து அதற்கு ஏற்ற மாதிரி ப்ரைடல் மேக்கப் செய்து விடுவோம். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே டிரையல் மேக்கப் போட்டு மணப் பெண்ணிற்கு காட்டி விடுவோம்.

சென்சிட்டிவ் ஸ்கின் உள்ள மணமகளாக இருந்தால் ஒரு டெஸ்ட் எடுத்து விடுவோம். பிராண்டடான தயாரிப்புகளை பயன்படுத்துவதால் 99 சதவிகிதம் எதுவும் ஆகாது. மணப் பெண்ணின் விருப்பம் கேட்டு, எங்களது ஆலோசனைகளையும் கொடுத்து, அவர்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை சிறப்பாகத் தந்துவிடுவோம். அவர்கள் வாங்கியிருக்கும் உடைக்கு எந்த நகைகள் செட் ஆகும், எந்த மாதிரியான மேக்கப் சரியாக இருக்கும், சேலையை எப்படி உடுத்தினால் நன்றாக இருக்கும், லெகங்காவில் எந்த மாதிரியான நிறம் அவர்களுக்கு செட் ஆகும் என எல்லாவற்றுக்கும் ஆலோசனை வழங்குவோம்.

உள்ளாடைகள் பற்றிகூட ஆலோசனை வழங்கப்படும். நகரத்து மக்களின் பழக்கவழக்கம், கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்கள் வேறுபடும். அதையும் மனதில் வைத்துக்கொண்டு, மணப் பெண்ணை தயார் செய்வோம். அவர்கள் திருமணம் நடக்கும் மஹால், ஊர் போன்ற இடங்களையும் மனதில் இருத்தி, அதற்கேற்ற சில விசயங்களையும் செய்ய வேண்டும். திருமணத்தன்று செய்யப்படும் மேக்கப்தான் மிகமிக முக்கியமான விசயம். 

திருமணத்தன்று போடும் மேக்கப்பில் மணப் பெண்ணிண் கண்கள் சோர்ந்து கலங்கிவிடாமல் இருக்க ஐ டிராப் போடுவோம். இது கண் சிவந்து கண்ணீர் வராமல் கண்களுக்கு குளிர்ச்சியினை தரும், மேக்கப் போடும்போது முகம், கழுத்து இரண்டும் சேர்த்து செய்ய வேண்டும். சிலருக்கு முகம் உருண்டையாக குண்டாக இருக்கும். சிலருக்கு ஓவல் ஷேப், சிலருக்கு நீளமாக இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி மேக்கப் போடப்படும்.

அந்த மாதிரியான முக அமைப்பு உள்ளவர்களுக்கு கான்டூரிங்(contouring) போடுவோம். இது ஷேப் கொடுக்க பயன் படுவது. எப்படிப்பட்ட முகத்தையும் கான்டூரிங் நன்றாகக் காட்டும். போட்டோ எடுக்கும் போது முகம் மிகவும் அழகாகத் தெரியும். மணமகளின் மூக்கை கூட  கான்டூரிங் செய்து மிகவும் வடிவாக காட்ட முடியும். முகூர்த்த நேர டென்ஷன் தவிர்க்க முடியாதது.

மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே மணமகளை தயார் செய்யத் துவங்கிவிடுவோம். அதிகாலை முகூர்த்தம் என்றால் மணமகளை இரவு 2 மணியில் இருந்து தயார் செய்யத் துவங்குவோம். திருமணத்தில் அடுத்தடுத்து இரண்டு, மூன்று புடவைகளை மாற்றி மாற்றி கட்டி அவர்களை தயார் செய்ய வேண்டும். ஆனால் முகூர்த்த நேரத்தையும் தவறவிடக் கூடாது. எனவே விரைவுப்படுத்தி எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும்.

அந்தந்த உடைகளுக்கு மணமகள் அணியப் போகும் ஆபரணங்களும் தயார் நிலையில் இருக்கும். கடைசிநேர டென்ஷனை குறைக்க சின்னச் சின்ன விசயங்களை கவனித்து முன்கூட்டியே எடுத்து வைக்க வேண்டும். ஆண்களும் பெண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. அழகாய் ஜொலித்து நிற்கும் தன் இணைக்கு நிகராகத் தங்களை காட்டிக்கொள்ள மணப்பெண்ணிற்கு நிகரான முயற்சிகளை எடுக்கத்தான் செய்கிறார்கள்.

லிப்ஸ்டிக், ஐஃப்ரோ, காஜல் தவிர ஆண்களுக்கு பெண்களைப் போன்று ஃபேசியல், ஃபவுண்டேசன், மேக்கப் என எல்லாம் அவர்களுக்கும் உண்டு. சிலர் புருவங்களை சரி செய்து கொள்கிறார்கள். தேவையான ஹேர் ஸ்டைல் பண்ணிக் கொள்கிறார்கள். வடமாநிலத்தைச் சேர்ந்த மணமகன் என்றால் லிப் பாம் லைட்டாகப் போடுவோம்” என்கிறார்.

அழகுக்கலை நிபுணர் ஹேமலதாவிடம் பேசிய போது, “இப்போது பெண்கள் படிப்பு, வேலை என அதிகம் வெளியில் சுற்றுகிறார்கள். எனவே பெண்களுக்கு 80 சதவிகிதம் டேமேஜ்ட் ஸ்கின்தான். திருமணம் பேசத் துவங்கிவிட்டாலே ஸ்கின் டிரீட்மென்ட் எடுப்பது நல்லது. ஸ்கின்னில் இருக்கும் டேமேஜை சரி செய்ய குறைந்தது மூன்று மாதம் தேவைப்படும். மேக்கப் என்பது திருமணத்தன்று மட்டும் செய்வது.

மேக்கப் என எடுத்தால் க்ளன்ஸ் பண்ணுவோம். சோப்பு போடும்போது வரும் நுரை, க்ளன்ஸ் போடும் போது வராது. ஆனால் தோலுக்குக் கீழிருக்கும் லேயரில் உள்ள அழுக்கைக் கூட க்ளன்ஸ் எடுத்துவிடும். ஆனால் முகத்தில் ப்ரைட்னஸ் தராது. அதன் பிறகு டோனர் அப்ளை பண்ணுவோம். இதனால் நாம் போடும் மேக்கப் முகத்தில் அப்படியே இருக்கும். முன்பு எல்லாம் ஐஸ் க்யூப் பயன்படுத்தினார்கள்.

இப்போது டோனர். அதன் பிறகு கன்சீலர் போடுவோம். இது முகத்தில் இருக்கும் தழும்புகள், பருக்கள், கருவளையங்களை எல்லாம் மறைத்து ஈவனாக ஸ்கின் டோனைக் காட்டும். திருமணத்தன்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவில்கூட பருக்கள் இருந்தால் தெரியாது. அதன் பின்னர் ஃபவுண்டேசன் அப்ளை செய்வோம். ஃபவுண்டேசன் என்பது எச்.டி, பான் கேக், லோஷன் என மூன்று விதங்களில் வருகிறது. எச்.டி. சைனிங் தரும். இதன் பிறகு பவுடர் அப்ளை பண்ணுவோம்.

மேக்கப் என்பது லிப் மேக்கப், ஐ மேக்கப் மற்றும் பிளஷ் கொடுப்பது என தனித் தனியாக உண்டு. பிளஷ் கொடுத்தாதான் மேக்கப் பண்ணியது மிகவும் ஷார்ப்பாகத் தெரியும். இறுதியாக கான்டூர் பண்ணுவோம். அது முகத்தின் வடிவத்தை மாற்றிக் காட்டும். அதற்கடுத்தது ஐ மேக்கப். அதிலும் ப்ரைமர் மற்றும் ஐ கலர் என உள்ளது. முன்பெல்லாம் ஐ லைனர் போட்டு, லிப்ஸ்டிக் போட்டு முடிச்சுருவாங்க.

இப்போதெல்லாம் மணப்பெண்ணிற்கு ஐ மேக்கப் ரொம்ப முக்கியம். ஐ மேக்கப்பிற்கு எனத் தனியாக கோர்ஸ் உள்ளது. ஒரு மணப் பெண்ணைப் பார்க்கும்போதே கண் அழகாத் தெரிய வேண்டும். முக்கியமாக பெண்கள் திருமண ஆல்பத்தில் தன் கண் அழகாக வர வேண்டும் என நினைப்பார்கள். இப்போதெல்லாம் ஐ லாஷ் வந்துவிட்டது.

அதை ஒட்டிவிட்டால் ஒட்டியது தெரியாமல் மிகவும் இயற்கையாக இருக்கும். பிறகு குளோவிங் கொடுப் போம். ஹைலைட்ஸ் அப்ளை பண்ணி விட்டால் பார்க்க மிக ஷைனிங்காக தெரியும். போட்ட மேக்கப் கலையாமல் இருக்க மேக்கப் ஃபிக்சிங்  ஸ்ப்ரே அடித்துவிடுவோம். புராடக்ட்டை பொருத்து 8 மணி நேரம் வரை மேக்கப் கலைந்துவிடாமல் தாங்கும். ஃபேஸ் மேக்கப், ஸாரி டிராப்பிங், ஹேர் டிரஸ்ஸிங் இதெல்லாம் முடிக்க 4 மணி நேரம் பிடிக்கும். 6 மணி முகூர்த்தம் என்றால் ரெடியாக 2 மணிக்கே வந்தால்தான் இத்தனையும் முடித்துத் தயாராக முடியும்.

மணப்பெண் சேலை கட்டி பூ ஜடை வைத்த காலம் எல்லாம் இப்போது இல்லை. மிகவும் ஹெவியான மேக்கப் எல்லாம் இப்போது இருக்கும் நவீன பெண்கள் விரும்புவதும் இல்லை. உடுத்தும் உடைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை விரும்பத் தொடங்கிவிட்டார்கள். முன்னால் ஒரு பஃப் வைத்து, பிரெஞ்ச் நாட் போட்டு மீதி முடியினை முன்னால் விடுவதுதான் இப்போது டிரெண்ட். படித்த பெண்கள் பெரிய பெரிய நகைகளையும் அதிகமான ஆபரணங்களையும் இப்போது விரும்புவதில்லை.

எளிமையாக பார்க்க அழகாக இருக்கவே விரும்புகிறார்கள். சிம்பிள் அண்ட் எக்ஸ்குளூசிவ் மேக்கப்பிலே தங்களை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். லெகங்கா என்றால் அதுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். ஃபுல் கவுன் என்றால் அதற்கேற்ற ஹேர் ஸ்டைல் என வெரைட்டி காட்டுகிறார்கள். முன்பகுதி முடியினை அழகுபடுத்தி, பின்பக்க முடியினை ஸ்டாம்ஸ் அல்லது அயர்ன் செய்து விட்டுவிடுவர். முடி குறைவாக இருந்தால் செயற்கை முடிகள் மிகவும் அழகாக, நேச்சுரலா மாலை போட்டாலும் கலையாத விதத்தில், அவரவர் ஹேர் கலரிலும் கிடைக்கிறது.

- மகேஸ்வரி

ரூபி சர்மா, அழகுக்கலை பயிற்சியாளர்
புரொபஷனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நான். நடனம் கற்று டான்ஸராகும் கனவுகளுடன் சென்னை வந்தேன். வாரத்தில் இரண்டு நாள் இரண்டு மணி நேரம் மட்டுமே நடன வகுப்பு என்பதால், மீதி நேரத்தை உருப்படியாக்க எதையாவது செய்ய நினைத்து லாக்மே, லாரியல், மேக், ரெவ்லான் என ப்ராண்டட் வைஸ் சேல்ஸ் கேள் ஆக மாலில் வேலைக்குச் சேர்ந்தேன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட ஐந்து மொழிகள்வரை எனக்கு சரளமாக வரும்.

கொஞ்சம் கொஞ்சமாக புராடக்ட் பற்றி அதன் குவாலிட்டி பற்றி எல்லாம் கற்றுக் கொண்டேன். லாக்மே, அதைத் தொடர்ந்து ரெவ்லான் இன்டர்நேஷனல் பிராண்டில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக புரொமஷன் ஆனேன். பெஸ்ட் டிரெயினர்களிடம் மேக்கப் டிரெயினிங் எடுத்து தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். ஒரு புராடெக்டை எத்தனை விதங்களில் பயன்படுத்த முடியும் என்ற நெளிவு சுளிவுகள் கைவசப்பட்டது. ஃபேஷன் டிசைனர்க ளுக்கும் ஏற்கனவே மேக்கப் ஆர்ட்டிஸ்டாக இருப்பவர்களுக்கும் தற்போதைய மேக்கப் டிரண்ட், என்ன புராடெக்ட் சந்தைகளில் வருகிறது என எல்லாவற்றையும் விளக்கி, செமினார் வகுப்பு எடுத்து சான்றிதழ் வழங்குகிறோம்.

டிப்ஸ்

வெளியில் செய்யும் மேக்கப்பால் மட்டும் மணப்பெண்ணிற்கு அழகு வராது. திருமணம் முடிவானால் ஆயில் உணவுகளை தவிர்த்து, ஃப்ரஸ் ஃப்ரூட்ஸ் மற்றும் பழச்சாறுகளைத் தொடர்ந்து உணவாக எடுக்க வேண்டும். நன்றாகத் தூங்கி எழ வேண்டும். கைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும். எப்போதும் ஸ்ட்ரெஸ் இன்றி ஃப்ரீ மைண்டாக இருப்பது முக்கியம்.

திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே மேக்கப் சேர்த்து, மணப்பெண் என்றால் மொத்த பேக்கேஜ் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆகும். மணமகன் என்றால் பத்தாயிரம் முதல் பதினைந்து ஆயிரம் வரை ஆகும்.