அன்பின் வழியது உயிர்நிலை



கேரள மாநிலம் சிங்கவனம் பகுதியில் ஏழை தொழிலாளியின் உயிரை காப்பாற்ற  கிராம மக்கள் அனைவரும் நிதி திரட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெயன் என்பவர் கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்திலுள்ள சிங்கவனம் மற்றும் பல்லம் பகுதியில் சலவைத் தொழில் செய்து வருகிறார். 20 வருடங்களாக இவ்விரு கிராம மக்களின்  நம்பிக்கையை பெற்ற இஸ்திரிக்காரர் இவர்.

சிங்கவனம் கிராமத்தில் மனைவி மாரியம்மாளுடன் வசித்து வந்த ஜெயன் கடந்த ஐந்தாண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதிலும் கடந்த இரு வருடங்களில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, சுமார் ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், வாடகை வீட்டில் வசிக்கும் ஜெயனுக்கு பத்து லட்சம் புரட்டும் அளவிற்கு வசதி கிடையாது. இதை அறிந்த கிராம மக்கள் சாதி, மதம், கடந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரு கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும், வீடு வீடாக சென்று ஜெயன் சிகிச்சைக்காக நிதி திரட்டினர். ‘ஜெயன் ஃலைப் சேவிங் சமித்தி' என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, அதில் நிதி சேமிக்கப்பட்டது.

கோட்டை யத்திற்குட்பட்ட 5 வார்டுகளில் சுமார் 2500 வீடுகளுக்கு சென்று ஜெயன் சிகிச்சைக்காக  நிதி திரட்டப்பட்டது. ஜெயன் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் தேவைப்பட்ட நிலையில், மக்களின் ஆதரவால், 11.25 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இதற்காக அளித்து நெகிழச் செய்தனர்.

நடுத்தர வர்க்கம், ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்து தரப்பினருமே மனமுவந்து நிதி உதவி அளித்தனர். ஒவ்வொருவரும், ரூ.50 முதல் ரூ.25000 வரையிலும் நிதி அளித்துள்ளனர். ஜெயனுக்கு நவம்பர் மாதம் இடது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. ஜெயனுக்கு கிட்னி தானம் செய்ய உள்ளவர் வேறு யாரும் இல்லை. அவருடைய மனைவி மாரியம்மாள் என்பதுதான்  அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.

- ஜெ.சதீஷ்