என்று தணியும் சாதி தீ?



உத்தரப்பிரதேச மாநிலம் புலண்ட்ஷர் மாவட்டத்தில் உள்ளது  கேட்டல்புர் பன்சோலி கிராமம். இந்த கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் உயர் சாதியினரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அக்டோபர் 15-ம் தேதி இதே கிராமத்தில் வசிக்கும் தாகூர் சமூகத்தை சேர்ந்த அஞ்சு தேவி என்பவரின் வீட்டருகே இருந்த குப்பைத் தொட்டியை, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் தொட்டதால் தீட்டு ஆகிவிட்டது என அஞ்சு தேவியும் அவருடைய மகன் ரோகித் குமாரும் சாவித்ரியை வெறித்தனமாக  தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த சாவித்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 21ம் தேதி அன்று உடல் நிலை மோசமாகி சாவித்ரி உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தலித்துகளுக்கு எதிரான தாக்குதலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. அதனுடைய நீட்சியாகவே இந்த நிகழ்வை பார்க்க முடிகிறது என சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணியிடம் கேட்டேன். “சமீப காலமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டம்.

தலித் தலைவர் மாயாவதி  ஆட்சி காலத்தில் இந்திய அளவில் அதிகமாக இச்சட்டத்தை பயன்படுத்திய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருந்தது. தற்போது இது போன்ற சம்பவங்கள் இச்சட்டத்தை பயன்படுத்துவதே இல்லை என்பதை காட்டுகிறது. இந்தப் பிரச்சனையை வேறு மாநில பிரச்சனையாக நாம் பார்க்க முடியாது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் தீண்டாமை கொடுமையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் சாதி கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் காவல் துறையில் இது தொடர்பான வழக்குகள் மிகக்குறைவு. பல வழக்குகள் மறைக்கப்படுகின்றன. இன்று தலித் மற்றும் தலித் அல்லாதவர் என்ற இரு சமூகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தலித் அல்லாதவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தலித்துகள் மீதான ஒரு வெறுப்பை இச்சமூகம்  ஏற்படுத்திவிடுகிறது.

அனுபவரீதியாக நான் சந்தித்த வழக்குகளிலே தலித்துகளுக்கு ஆதரவாக தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களே சாட்சி சொல்ல வருவதில்லை. ஒரு வித அச்சமும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இருக்கிறது. இச்சமூகம் சாதி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உடைத்தெறிகிற பொறுப்பும் பணியும் அனைவருக்கும் இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அதிகாரிகள் முறையாக பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தவறும் பட்சத்தில் சமூக உணர்வுள்ள அனைவரும் வலியுறுத்த வேண்டிய தேவை இன்று இருக்கிறது” என்று கூறினார் பேராசிரியர் கல்யாணி.

- ஜெ.சதீஷ்