செல்லுலாய்ட் பெண்கள்கண்ணகி, திரிட்சரட்சகை இரு வேறு பிம்பங்களில் ஜொலித்த பசுபலேட்டி கண்ணாம்பா

கூர்மையான நாசி, சற்றே மேடேறிய நெற்றி, ஆந்திரப் பெண்களுக்கே உரிய நெடு நெடு உயரம், கம்பீரமான குரல், கனிவான கண்கள், பாத்திரங்களின் தன்மைக்கேற்றவாறு அவ்வப்போது உருட்டி விழிக்கவும், கனலைக் கக்கவும் தவறாதவை அந்தக் கண்கள். எந்தப் பாத்திரமானாலும் அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஆளுமைத் திறன் கொண்ட நடிகை பசுபலேட்டி கண்ணாம்பா.

அம்மா வேடங்கள் ஏற்பதற்காகவே பிறந்தவரோ என நினைக்க வைக்கும் அளவுக்குப் பல்வேறுபட்ட அம்மா பாத்திரங்களாகவே தன்னை மாற்றிக் கொண்டவர். காருண்யமும் அன்பும் மட்டுமல்ல அம்மாவின் மொழி, அதன் உச்சபட்சமான கண்டிப்பும் கறாருமான குரலில் அதிகாரமாகவும் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன் விழிகளை உருட்டி கம்பீரமாக அவர் பேசும் வசனங்களே முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குப் பல்வேறு அம்மா வேடங்களில் மூழ்கித் திளைத்தவர்.

அம்மாக்கள் பலவிதம்
இந்தியத் திரைப்படங்களில் தேசப்பற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதே அளவு போற்றிப் பாடப்படும் ஒரு விஷயம் தாய்மையும் அன்னையும். அனைத்து மொழிப் படங்களிலும் அது பிரதிபலித்தது. இந்திய சினிமாவில் தாய் கதாபாத்திரம் என்றவுடன் தவறாமல் சிலர் நினைவுக்கு வருவார்கள். அவர்களில் தமிழில் முன்னணி இடம் கண்ணாம்பாவுக்கு உண்டு. அமைதியே வடிவான தாய், ஆர்ப்பாட்டமான தாய், உலக அனுபவமோ, அறிவோ இல்லாத தாய், வாழ்க்கையின் அனுபவங்கள் தந்த படிப்பினையால் தனக்குள்ளேயே இறுகிப் போன தாய், தற்போது லூசுத்தனமான தாய் இப்படி பலவிதமான தாய்மார்களை நம் நடிகைகள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

கண்ணாம்பாவின் தாய் வேடங்களில் குறிப்பிடத்தக்க பல படங்கள் உண்டு. அவற்றில் மனோகரா, படிக்காத மேதை, தர்மம் தலை காக்கும், தாயைக் காத்த தனயன், மக்களைப் பெற்ற மகராசி, வஞ்சிக்கோட்டை வாலிபன், அசோக்குமார் என பல படங்களைச் சொல்லலாம். ஆனால், நடிக்க வரும் போதே அம்மாவாக மட்டுமே நடிப்பது என்ற லட்சிய வேட்கையுடன் யாரும் வருவதில்லை. இறுதிவரை கதாநாயகிகளாக மட்டுமே நடித்தவர்கள் சிலருண்டு. அது அவரவர் திறமை, கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தவை. ஆனால், இந்த அம்மாக்கள்தான் நாயகர்களின் பிம்பத்தையும் உயர்த்திப் பிடிக்கக் காரணமானவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் கண்ணாம்பாவும் ஒரு சில ஆண்டுகளில் அம்மா வேட நடிகையானார்.

பாட்டனாரின் நேரடிப் பார்வையில்…
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத காலத்தில் ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் ஆந்திரப் பகுதியான கடப்பாவில், எம்.வெங்க நரசய்யா- லோகாம்பா தம்பதிக்கு அக்டோபர் 5, 1911ல் பிறந்தார். பசுப்பலேட்டி அவரது குடும்பப் பெயர். தந்தையார் அரசு ஒப்பந்ததாரராக இருந்தார். குடும்பத்தில் ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டார். ஆனாலும் குடும்பச் சூழல்கள் காரணமாக அவரது குழந்தைப் பருவம் அவரது தாய்வழிப் பாட்டனாரான நாதமுனி நாயுடு வீட்டில் ஏலூருவில் கழிந்தது.

நாதமுனி நாயுடு ஒரு கிராம வைத்தியர். அவரது மனைவியான பாட்டியார் ஒரு மருத்துவத் தாதி. கண்ணாம்பாவுக்கு சிறு வயதிலேயே இயல்பாகவே இசையில் நாட்டம் இருந்தது. அதனால் கர்நாடக சங்கீதம் கற்றுத் தரப்பட்டது. அவரது தாய்வழிப் பாட்டனாருக்கும் இலக்கியம் மற்றும் கலை, இசையில் ஆர்வமிருந்ததால் பாட்டனாரின் மேற்பார்வையில் கண்ணாம்பா ஊக்கப்படுத்தப்பட்டார். வழக்கம்போல அவரது இசையும், கலை ஆர்வமும் அவரை நாடக மேடையை நோக்கி உந்தித் தள்ளியது. அவரது நாடக மேடையேற்றமும் அவரை வளர்த்த ஏலூரிலேயே நிகழ்ந்தது.

எதிர்பாராமல் கிடைத்த நாடக வாய்ப்பு
1927ல் அதாவது அவரது 16வது வயதில் ‘நாரல நாடக சமாஜம்’ சார்பில் ‘ஹரிச்சந்திரா’ நாடகத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் சந்திரமதியாக நடித்த நடிகர், மகன் லோகிதாசன் மரணமடைந்த  மிக முக்கியமான கட்டத்தில் கதறி அழ நேரும்போது, அவர் அழுவதைப் பார்த்த ரசிகர்கள் சிரித்துக் கலாட்டா செய்து நாடகத்தை நிறுத்தி விட்டார்களாம். அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது அந்த நடிகரின் நடிப்பு. இதைப் பார்த்துக் கோபமடைந்த கண்ணாம்பா அந்த நடிகரை கடிந்து கொண்டாராம்.

உடனே, ‘நடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை அம்மா, அதுவும் சோகக் காட்சியில் நடிப்பது என்பது மிகவும் கடினம். வேண்டுமானால் நீயே வந்து நடித்துப் பார்’ என்றாராம் அந்த நடிகர். அவர் அப்படிச் சொன்னதை சவாலாக ஏற்றுக்கொண்டு பார்வையாளரான கண்ணாம்பா, உடனே மேடையில் தாவி ஏறிக் குதித்து, சந்திரமதியின் பாடல்களைப் பாடி, அக்காட்சியை சோக பாவத்துடன் நடித்து ரசிகர்களின் கைத்தட்டலையும் பெற்றிருக்கிறார்.

அந்த நிமிடம் முதல் அவர் அந்த நாடகக் கம்பெனியின் முக்கியமான நடிகரானார். தொடர்ந்து அனுசுயா, சாவித்திரி, யசோதா போன்ற முன்னணி பாத்திரங்களில் நடித்து ஏலூரு சுற்று வட்டாரங்களில்  நல்ல நடிகையாகப் பெரும் புகழையும் பெற்றார். இந்த நாடக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவின் அழகிலும்  இசையிலும் நடிப்பிலும் மயங்கி அவர் மீது காதல் கொண்டு, பெற்றவர்கள், பாட்டன்  பாட்டி ஆகியோரின் அனுமதி பெற்று 1934 ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டார்.

புதிய நாடகக்குழு உருவாக்கமும் திரையுலகப் பிரவேசமும் 
காதல் மனைவி கிடைத்த மன மகிழ்ச்சியில் அந்த ஆண்டிலேயே இருவரும் ‘ஸ்ரீராஜ ராஜேஸ்வரி நாட்டிய மண்டலி’ என்ற புதிய நாடகக் குழுவைத் தொடங்கினார்கள். தங்கள் புதிய நாடகக்குழு உறுப்பினர்களுடன் சென்னை ராஜதானியிலும் நிஜாம் பகுதியிலும் ஏராளமான நாடகங்களை நடித்தனர். கண்ணாம்பா அந்த நாடகங்களின் நட்சத்திர நடிகையாகவே மக்களால் பார்க்கப்பட்டார். இதனால் கண்ணாம்பாவின் புகழ் மேலும், மேலும் பெருகியது. அதன் அடுத்தக் கட்ட வளர்ச்சியாகவும் முன்னேற்றமாகவும் திரைப்படங்களை நோக்கி நகர்த்தப்பட்டார். நாடகத்தின் அடுத்த வடிவமாக  சினிமா அப்போது உருவாகியிருந்தது.

நாடகம், திரைப்படம் இரண்டிலும் அறிமுகம் ‘ஹரிச்சந்திரா’
அப்போது ஸ்டார் கம்பைன்ஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் தயாரித்து வந்த ஏ.ராமையா என்பவர் ‘ஹரிச்சந்திரா’ என்ற புராணப் படத்தில் நடிக்க வைப்பதற்காக கண்ணாம்பாவை அணுகினார். கோலாப்பூரில் உள்ள ஷாலினி சினிடோன் ஸ்டூடியோவில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பெஜவாடா (இன்றைய விஜயவாடா) நகரில் இயங்கிய சரஸ்வதி டாக்கி என்ற சினிமா கம்பெனி ‘திரௌபதி வஸ்திராபரணம்’ என்ற படத்தை 1936 ல் எடுத்தது. இந்தப் படமும் கோலாப்பூரில்தான் படமாக்கப்பட்டது.

அடுத்து, வேல் பிக்சர்ஸ் தயாரித்த ‘கனகதாரா’வில் நடித்ததன் மூலம் கண்ணாம்பா பெரும் புகழ் பெற்றார். இப்போது போல திருமணத்துக்குப் பின் நடிக்கலாமா என்ற கேள்வியெல்லாம் அப்போது எழவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான நடிகைகள் திருமணத்துக்குப் பின்னரே நடிக்க வந்தார்கள் என்பது வரலாறு. ஒருவிதத்தில் அதைப் பாதுகாப்பாகவும் அவர்கள் கருதினார்கள் என்றே சொல்லலாம்.

சென்னையை கலக்கிய ‘கிருகலட்சுமி’
மூன்று படங்களுக்குப் பின் எச்.எம்.ரெட்டி மற்றும் பி.என்.ரெட்டி ஆகியோருடன் இணைந்து ‘கிருகலட்சுமி’ (1938) என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இந்த தெலுங்கு ’கிருகலட்சுமி’ சென்னை ராஜதானி எங்கும் வெற்றிகரமாக ஓடியது. இதில் கண்ணாம்பாவுடன் இணைந்து நடித்தவர் அப்போதைய புதுமுகம் சித்தூர் வி.நாகையா. இந்த வெற்றிகரமான ஜோடியை தமிழ் பேசும் மக்களும் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்.

அவ்வளவு பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்களும் இருவரையும் ரசித்தனர். அதன் பலனாக இவர்கள் இருவரையும் தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க வேண்டுமென இங்குள்ள தயாரிப்பாளர்கள் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த வெற்றி ஜோடிதான் பின்னர் ‘அசோக்குமார்’ தமிழ்ப் படத்திலும் தொடர்ந்தது. இந்த நிறுவனமே பின்னர் ஷோபனாச்சலா ஸ்டூடியோவாகவும் வீனஸ் ஸ்டூடியோவாகவும் மாறியது.

சரஸ்வதி டாக்கீஸுடன் பங்குதாரராக இணைந்து ‘சண்டி’ என்ற படத்தைத் தயாரித்து அதில் சண்டிகையாகவும் நடித்தார். பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள இந்தப் பாத்திரத்தைத் திறம்பட நிறைவு செய்து நவரச நாயகியாகவும் ஆனார். பொதுவாக சோகக் காட்சிகளில் நடிப்பவர் எனப் பெயர் எடுத்திருந்த கண்ணாம்பா இப் படத்தின் மூலம் காதல் கதாநாயகியாகவும் மாறினார்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மடைமாற்றம்
தெலுங்கில் தொடர்ந்து பிரபலமாகி வந்த கண்ணாம்பாவின் மீது தமிழ் டாக்கிகளின் கண்ணும் பட்டது. அப்போது ராஜகோபால் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் ’கிருஷ்ணன் தூது’ படத்தினை எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். அதில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கண்ணாம்பாவை நடிக்க வைக்க எண்ணினர்.

அதன் இயக்குநர் ரகுபதி பிரசாத், கண்ணாம்பாவை அணுகி வெற்றி பெற்றார். இதுவே கண்ணாம்பாவுக்கு முதல் தமிழ்ப் படமாக அமைந்தது. இப் படத்தில் திரௌபதியாக வேடமேற்று கண்ணாம்பா நடித்தார். அவர் நன்றாக நடித்திருந்தாலும் அவர் தமிழ் பேசிய ‘அழகு’  அப்படம் தோல்வியடையக் காரணமாக அமைந்ததாம்! பின்னாட்களில் கண்ணாம்பா பேசிய தமிழை நினைத்துப் பாருங்கள்.

காலம் எவ்வளவு விநோதமானது என்பது புரியும். ரோஷக்காரரான கண்ணாம்பா அதைத் தனக்கு விடப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொண்டு அதனை எதிர்கொண்டார். உடனடியாகத் தமிழ் கற்கத் தொடங்கினார். ஓய்வின்றி முழுமூச்சுடன் பயிற்சி பெற்றார். அடுத்த படத்தில் முந்தைய தோல்விக்குத் தக்க பதிலடி கொடுத்தார். அந்தப் படம்தான் ‘அசோக் குமார்’. இளங்கோவன் எழுதிய வசனங்களை அட்சர சுத்தமாகப் பேசி பாகவதரைத் திணறடித்ததோடு, பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களையும் சொந்தக் குரலில் பாடினார்.

மகன் மீது பொருந்தாக் காமம் கொள்ளும் சிற்றன்னை
‘அசோக்குமார்’ படத்தின் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது. மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் வில்லி வேடம். சாம்ராட் அசோகனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட அவன் பிரியத்துக்குரிய காதல் மனைவியான இளம் பெண் திரிட்ச ரட்சகை. மூத்த தாரத்தின் மகனான, அழகிய இளைஞன் குணாளன் மீது மோகம் கொள்ளும் சிற்றன்னை. ஆடல், பாடல் மூலம் அவனது கவனம் கவர முயற்சி செய்து தோற்றுப் போகும் அவள், தன் பெண்மைக்கு இழிவு ஏற்பட்டு விட்டதாகக் கருதி பின்னர் அவனை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறாள்.

அசோகச் சக்ரவர்த்தியின் மகன் குணாளனை தன் காம வலையில் வீழ்த்த பலவிதமான சாகசங்களையும் கையாளும் ஒரு பாத்திரம். குணாளன் போருக்குச் சென்றிருக்கும் நேரத்தில் அவரது தந்தை  சக்கரவர்த்தி அசோகர் மறுமணம் புரிந்து கொள்கிறார். பின்னர், குணாளன்  தனது தந்தையைச் சந்திக்கும்போது தந்தை மகனை வரவேற்று அவருக்கு சிற்றன்னையை அறிமுகப்படுத்துகிறார். பார்த்த உடனேயே அவளுக்கு குணாளனைப் பிடித்துப் போய்விடுகிறது.

குணாளனை அடையத்  துடிக்கிறாள், அசோகரின் மூலமாக குணாளனை அந்தப்புரத்திற்கு அழைத்து வந்து பாடச் சொல்கிறாள், தந்தையின் முன்பாக மகன் சிற்றன்னையின் அந்தப்புரத்தில் பாடுகிறான். அதில் சிற்றன்னை மனம் கரைந்து உருகி விடுகிறாள். அவசர வேலை காரணமாக தந்தை அசோகர் வெளியே கிளம்ப, மகன் குணாளன் பாடுவதைத் தொடருகிறான்.

‘உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ’ என்ற பாடல் கேட்டு சிற்றன்னை சொக்கிப் போய் நடனமும் ஆடுகிறாள். இந்தப் பாடல் முடிந்த உடன் குணாளனை வழிக்குக் கொண்டு வர சிற்றன்னை பல இலக்கிய விவாதங்களில் ஈடுபடுகிறாள். குணாளன் மசியவில்லை. மகனிடமிருந்து அன்னை என்ற வார்த்தையைத் தவிர வேறு சொல் வர மறுக்கிறது.

தன்மானம் அடிபட்டுப் போனதில் கொதித்துப் போகிறாள். எதற்கும் மசியாத மூத்த தாரத்து மைந்தன் மீது வீண் பழி சுமத்துகிறாள். இறுதியில் தனது கணவனைக் கொண்டே மகனின் கண்ணைக் குருடாக்கி அவன் மனைவி காஞ்சனமாலையுடன் நாடு கடத்தச் செய்கிறாள். பாகவதரின் தந்தை அசோகராக சித்தூர் வி.நாகையாவும், அசோகரின் இரண்டாவது மனைவியாக கண்ணாம்பாவும் சொந்தக் குரலில் தெளிவாகத் தமிழ் பேசிநடித்தனர். மனைவி காஞ்சனமாலையாக டி.வி.குமுதினி, பாகவதரின் நண்பராக தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தனர். படத்தொழிலில் மிகப் புகழோடு விளங்கியவர்கள் பலரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.

படத்தின் டைட்டிலில் முதலில் வருவது வசனகர்த்தாவின் பெயர்தான். அவ்வளவு மதிப்பும் மரியாதையும் இளங்கோவனின் வசனத்துக்கு அக்காலத்தில் இருந்தது. இந்த ‘அசோக்குமார்’ திரைப்படத்தில் ஒரு புதிய தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முந்தைய படங்களில் நடிக, நடிகைகள் நேரடியாகப் பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால், முன்கூட்டியே பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப நடனம் ஆடும் முறை இப்படத்திலிருந்துதான் நடைமுறைக்கு வந்தது. கண்ணாம்பா சொந்தக் குரலில் பாடி, ஆடி நடித்திருந்தார்.

‘அசோக்குமார்' சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால், கண்ணாம்பா இப்படத்தில் ஏற்ற பொருந்தாக் காமம் என்ற வகையிலான மகன் மீது தாய் காதல் கொள்ளும் பாத்திரப்படைப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என்றாலும் மறக்க முடியாத ஒரு தாய் பாத்திரம். கண்ணகியின் மறைக்கப்பட்ட அறச்சீற்றம் மகாபாரதத்தின் திரௌபதி வஸ்திராபரணம், இராமாயண சீதையின் அக்னிப் பரீட்சை, அனுசூயா, நளாயினி, சந்திரமதி, சாவித்திரி என்று புராண, இதிகாசங்கள் கற்பித்த கற்புநெறிக்கு மாற்றாகத் தமிழ்க் கவிஞர்கள் முன்னிறுத்திய கண்ணகி பிம்பம் அற்புதமானது. கண்ணகி தெய்வப்பிறவி அல்ல. வணிகக் குலத்தில் பிறந்து வணிக குல தர்மத்துக்கு உட்பட்டு வாழ்ந்தவள். மரபு சார்ந்து அதன் விழுமியங்களை நிலைநாட்டத் தொகுக்கப்பட்ட காவியம்.

மதுரை வரும் கோவலன், கண்ணகியின் ஒற்றைக் கால் சிலம்பை விற்க அங்காடித் தெருவுக்குச் செல்லும்போது, அது அரசியின் சிலம்பு என பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை இன்றியே மரண தண்டனை விதிக்கப்படுகிறான். இந்த அநீதிக்கு எதிராகக் கண்ணகியே மன்னனிடம் நீதி கோருவதன் மூலம் தன் கணவனுக்கு நேர்ந்த அவமரியாதையைத் துடைக்க முயல்கிறாள். ஆனால், கண்ணகியின் அந்த அறச் சீற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவளது கணவன் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டபோதும், பல ஆண்டுகள் அவளை மறந்து மாதவியின் வீட்டில் அவன் கிடந்தபோதும், கண்ணகியின் உடைமைகள் அனைத்தையும் ஊதாரித்தனமாகச் செலவிட்டபோதும் கூட அவள் தன் கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதை மட்டுமே முதன்மைப்படுத்தி பின்னர்  பிரசாரம் செய்யப்பட்டதில் அந்த அறச்சீற்றம் மறைக்கப்பட்டுவிட்டது.

கண்ணகியின் பிம்பம் கண்ணாம்பாவின் பிம்பமே
பி.யு.சின்னப்பாவின் நடிப்பு, பாடல் இவற்றுடன் உயிரோட்டமான கண்ணகியாக கண்ணாம்பா. காதலும் ஊடலும் கொஞ்சலும் கெஞ்சலுமாய் கண்ணாம்பாவின் நடிப்பு அருமை என்று சொல்வதெல்லாம் மிகக் குறைந்த பாராட்டுதலே. இளங்கோவனின் இலக்கிய நயம் மிக்க உணர்ச்சிகரமான வசனங்களை, தெளிவாக உயிர்த் துடிப்புடன் பேசி நடித்தார் கண்ணாம்பா. ‘கண்ணகி' படத்துக்கு முன்னால், எந்த ஒரு நடிகையும் இப்படி வீர வசனம் பேசி, உணர்ச்சிமயமாக நடித்ததில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

தமிழ்ப்படம் ஒன்றில் தெலுங்கு பேசும் ஒரு நடிகை, உணர்ச்சிகரமாகத் தமிழ் பேசி நடிக்கிறார். அவர் பேசிய வீர வசனங்கள், அவரைப் புகழின் சிகரத்துக்கே கொண்டு சென்றன. எப்படியிருந்தாலும், கண்ணகியின் பிம்பம் என்பது இன்னமும் கண்ணாம்பாவின் பிம்பமாகவே எனக்குள் தங்கியிருக்கிறது. இதற்கு முன்பே இரு முறை ‘கோவலன்’ என்ற பெயரில் படமாக்கப் பட்டிருந்தாலும், 1941ல் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்து 1942ல் வெளியான ‘கண்ணகி’ அடைந்த வெற்றியை அவை பெறவில்லை.

அதிகப் படங்களில் இணைந்த ஜோடி பி.யு.சின்னப்பா
‘கண்ணகி’ பட வெற்றி ஜோடியான பி.யு.சின்னப்பாவை வைத்தே கண்ணீருக்குப் பஞ்சமில்லாத மற்றொரு கதையான ‘ஹரிச்சந்திரா’ படத்தை சொந்தமாகத் தயாரித்தார் கண்ணாம்பா. ஆனால், திரையுலகின் சாபக்கேடான ‘வியாபார தந்திரம்’ இப்படத்தை முடக்கிப் போட்டது. திரைத்துறையில் அனுபவசாலியான ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், கன்னடத்தில் தயாரித்து முன்பே வெளிவந்த வெற்றிப்படமான கன்னட ‘ஹரிச்சந்திரா’வைத் ‘தமிழ் பேச’ வைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் இரவு பகலாக விரைந்து முடிக்கப்பட்டு படமும் முதலில் வெளியானது. பிறகென்ன, அசல் தோற்று டப்பிங் ‘ஹரிச்சந்திரா’ மாபெரும் வெற்றிப் படமானது. தமிழின் முதல் டப்பிங் படம் என்ற பெருமையும் வந்து சேர்ந்தது. கண்ணாம்பா தயாரித்த ‘ஹரிச்சந்திரா’ வசூல் ரீதியாகத் தோல்விப் பட வரிசையில் சேர்ந்து கொண்டது. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் தொடர்ந்து ‘அர்த்தநாரி', ‘துளசி ஜலந்தர்', ‘அரிச்சந்திரா', ‘மங்கையர்க்கரசி', ‘சுதர்ஸன்’ என பல படங்களில் இணைந்து நடித்தனர். அடுத்த இதழிலும் ‘அன்பான கண்ணாம்பா’ தொடர்வார்.

(ரசிப்போம்!)

படங்கள்: ஸ்டில்ஸ் ஞானம்