நீராலானது இவ்வுலகுநிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தின் தேவை

2013ம் ஆண்டில் அம்மா குடிநீர் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில மாதங் களுக்கு முன்பாக தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் திரும்ப பெறப்பட்டது. இதனை விட மேலான சட்டம் கொண்டு வரப்படும் என்னும் உறுதியோடு இச்சட்டம் பின்வாங்கப்பட்டது. இன்று வரை புதிய சட்டம் இயற்றப்படவில்லை. என்ன காரணம்? யாருக்கும் தெரியாது. அம்மா குடிநீர் திட்டத்திற்கும் இச்சட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான சட்டம்  என்பதை தவிர்த்து வேறு எந்த தொடர்பும் கிடையாது.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான மக்கள் தற்போது கேன் குடிநீருக்கு மாறியுள்ளனர் என்பது நாடறிந்த செய்தி. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கேன் குடிநீர் விலை ஏற்றம் அடைந்துள்ளதையும் நாம் அறிவோம். இலவசமாக நமக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் தற்போது பணம் கொடுத்து பெறப்படும் பண்டமாக மாறிவிட்டது. நீர் வணிகம் என்பது இன்று மிகப் பெரிய சந்தையாக உருவெடுத் துள்ளது. இவை நம்முடைய நீர்வளத்தை கொள்ளைக் கொண்டு லாபம் பெறுகின்றன என்பது தான் தேவையான உண்மை.

மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் நீர் என்பது அடிப்படை உரிமை. இது இயற்கையின் நீதி. நமது அரசியலமைப்புச் சட்டமும்  இதனை உறுதி செய்துள்ளது. பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் தூய்மையான குடிநீர் பெறுவது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசியலமைப்புச்சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமை என்று கூறியுள்ளது. இத்தகைய அடிப்படை உரிமைகளை நிறைவேற்றும் அமைப்பாக அரசு இருக்க வேண்டும். எனவே தான் நமது அரசு அமைப்பை நல்லரசு என்று கூறுகிறோம். ஆனால் நடப்பது என்னவோ பெருவாரியான எளிய மக்களின் நலன்களை புறம்தள்ளுபவையாகவே உள்ளன.

நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டங்கள்
நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்ட இச்சட்டம் 2003ம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்டது. 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட “சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டம்” அமலில் உள்ள பகுதிகள் தவிர்த்து ஏனைய தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் பின்வாங்கப்பட்ட நிலையில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்தான சில அரசாணைகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன.

1988ம் ஆண்டு பாலாறு ஆற்றை பாதுகாக்க அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. இதுவே முதல் முறையாக தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசில் இருந்து நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் ஆதார பகுதிகளை பாதுகாக்க வெளியிட்ட ஆணையாகும். இதன்படி பாலாறு ஆற்றுப் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் எந்த நிறுவனமும் நிலத்தடி நீரை எடுக்க தடை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 1989ம் ஆண்டு தமிழக அரசு நீர் ஆதாரங்களை பாதுகாக்க அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைப்படி அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை சில நீர் ஆதார பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தொலைவிற்குள் அமைக்கக்கூடாது. அதாவது இந்த அரசாணையில் முக்கிய ஆறுகள், ஓடைகள் மற்றும் அணைகளிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கப்படக்கூடாது. அதென்ன மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் என்னும் கேள்வி வரலாம்.

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் பட்டியலும் அந்த அரசாணையில் உள்ளது. சாராய தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, சர்க்கரை தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, காகித தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சாய தொழிற்சாலை, இரும்பு உருக்கு ஆலை, அனல் மின் நிலையம், மருந்து தயாரிப்பு ஆலைகள், பூச்சிக்கொல்லி தொழிற்சாலை, கல் நார் தொழிற்சாலை, வார்ப்பு தொழிற்சாலை போன்றவை நீர்நிலை அருகாமையில் அமைக்கப்படக் கூடாது என்று இந்த அரசாணை கூறுகிறது.

இதனை தொடர்ந்து 1998ம் ஆண்டு நீர் ஆதார பகுதிகளில் இருந்து 5 கி.மீ தூரம் வரை தொழிற்சாலைகளை நிறுவுவதை தடுக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்க மேற்கூறிய அரசாணைகள் போதுமானதாக இல்லாத காரணத்தாலேயே தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி பெறுவது அவசியம். அந்த அனுமதியும் பலவித ஆய்வுகளுக்கு உட்பட்டே கொடுக்கப்படும்.

இதன் இடையே நிலத்தடி நீரை வணிக நோக்கோடு எடுப்பதை முறைப்படுத்த மத்திய நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆணையும் சில ஆணைகளை வெளியிட்டது. அதன்படி நீலத்தடி நீர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. தமிழக அரசு 2005ம் ஆண்டும், 2009ம் ஆண்டும் நிலத்தடி நீர் குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீரின் அளவு ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆனால் இ்ன்று வரை நிலத்தடி நீர் குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன.

2009ம் ஆண்டு ஆய்வுப்படி தமிழகம் நிலத்தடி நீர் என்பது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பது கண்டறியப்பட்டது. ஒரு பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் அளவின் தன்மை கொண்டு, மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி, குறைந்த அளவிலான பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி, பாதுகாப்பான பகுதி என்கிற வரையறை செய்யப்பட்டது. சென்னை மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது யாரும் வணிக நோக்கோடு சென்னையில் நிலத்தடி நீரை எடுக்க முடியாது. மேற்கூறிய பகுதிகளில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி, குறைந்த அளவிலான பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி மற்றும் பாதுகாப்பான பகுதி ஆகிய இடங்களில் மட்டுமே நிலத்தடி நீரை எடுக்க முடியும். இந்த அனுமதியை பொதுப்பணித்துறை வழங்கும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியும் அவசியம். 2009ம் ஆண்டு ஆய்வின் படி தமிழக பகுதியில் உள்ள 386 நீர் ஆதார பகுதியில், 139 நீர் ஆதார பகுதி மிகவும் அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 33 நீர் ஆதார பகுதிகள் அதனை விட சற்றே குறைந்த அளவில் சுரண்டப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் வணிகம்
தமிழகம் எங்கும் நிலத்தடி நீர் கடுமையாக சுரண்டப்பட்டு வருகின்ற போதும் நிலத்தடி நீரின் பயன்பாட்டை முறைப்படுத்தவோ, கண்காணிக்கவோ அதிகாரம் பெற்ற தனி அமைப்புகள் உருவாக்கப்படாமலே உள்ளது. இருக்கின்ற அமைப்புகள் சிறிய அளவிலான அதிகாரங்களோடு செயல்படுகின்றன. நிலத்தடி நீரை எடுத்து வணிகம் செய்ய பொதுப்பணித் துறை சில ஆய்வுகளின் அடிப்படையிலேயே அனுமதி கொடுக்கிறது. நிலத்தடி நீர் குறைவான பகுதியில் அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்தப் பகுதிகள் குறித்தான தகவல் இணையத்தில் உள்ளன. ஆனால் இவை 2009ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையிலானது.
நிலத்தடி நீரை எடுக்க அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உற்பத்தியாகும் திறனை ஆய்வு செய்வது அவசியமானது. இந்த ஆய்வு மழைக்காலங்களில் செய்யக் கூடாது. பிற காலங்களில் நீர் உற்பத்தியாகும் தன்மை கொண்டு அனுமதி கொடுக்கப்படுகின்றன. அதுவும் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே நிலத்தடி நீரை ஒரு பகுதியில் எடுக்க அனுமதி கொடுக்கப்படுகிறது.

இப்படி நீரை எடுத்த அடுத்த 24 மணிஅளவில் அதே அளவிலான நீர் மீண்டும் உற்பத்தியாக வேண்டும் அப்படியான நிலையில் அந்த பகுதி இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவை எல்லாம் சட்டத்தின் நடைமுறை. ஆனால் உண்மை நடைமுறை என்ன என்பது யாருக்கும் தெரியாது. மணல் அள்ளுவதற்கும் இத் தகைய முறையிலான அனுமதியே வழங்கப்படுகின்றன. இவ்வளவு அளவிலான மணல், இப்படியான முறையில் என பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஆனால் இவற்றில் நடக்கும் விதிமீறல்கள் நாம் அறிந்ததே. அதேபோலவே நிலத்தடி நீரை எடுத்து வணிகம் செய்யும் நிறுவனங்களின் விதி மீறல்களும் அதிகமாகவே உள்ளது. பசுமை தீர்ப்பாயம் நிலத்தடி நீரை எடுப்பதற்கு பலவித கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் விதித்துள்ளது. ஆனால் இவை எல்லாம் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.

நிலத்தடி நீர் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. சூழல் சமன் பாட்டில் நிலத்தடி நீரின் பங்கு மிகவும் முதன்மையானது. கடல் நீர் நிலப்பகுதியில் நுழையாமல் தடுப்பது நிலத்தடி நீரே. நிலத்தடி நீர் உப்பு தன்மையானால் நமது நிலம் மாசாகும். அதனோடு நமது உணவு உற்பத்தியும் பாதிக்கும். நிலத்தடி நீரை பாதுகாப்பதும் சேமிப்பதும் நிலத்தடி நீர் உப்பு தன்மையாகாமல் இருக்க வழி செய்யும்.

மழை நீர் சேகரிப்பு திட்டம் சில வருடங்களுக்கும் முன்பாக கொண்டு வரப்பட்டது. இன்று வரை அச்சட்டம் அமலில் உள்ளது. ஆனால் நடைமுறையில் அதன் கதி நாம் அறிந்ததே. நாம் விவாதிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம்மை நாமே பாதுகாப்பதற்கானதே. நிலத்தடி நீர் அதில் முதன்மையானது. அதனை பாதுகாக்க முதலில் ஒரு சட்டத்தையாவது கொண்டு வரவேண்டியிருக்கிறது.

(நீரோடு செல்வோம்!)