கிச்சன் டிப்ஸ்...* ஜவ்வரிசி வடகம் செய்ய கூழ் கிண்டும் போது உப்பு, காரம் சேர்ப்பதற்கு முன் வெந்த மாவில் கொஞ்சம் பெரிய வடகமாக ஊற்றிக் காய வையுங்கள். தேவைப்படும் போது இந்த வடகத்தை எண்ணெயில் பொரித்து சர்க்கரை, ஏலம் கலந்து பாலில் ஊறவைத்து சாப்பிடலாம். சுவையான ஜவ்வரிசி பால் போளி தயார்.

* தோசை மாவு தேவையை விட குறைவாக இருந்தால் அரிசி மாவு, தேங்காய் சிறிதளவு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து அப்பம் போல வார்க்கலாம்.

* அப்பளம் மற்றும் வடாம் ஆகியவற்றின் உடைந்த துகள்களை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து வடிகட்டி தாளித்துக் கொட்டி எலுமிச்சைச்சாறு சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

* உளுந்து வடை செய்யும் போது மாவு மீந்து விட்டால் அத்துடன் தேவையான அரிசி மாவு, உப்பு, சீரகம், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து தேன்குழல் மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு, முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து எடுத்தால் சுவையான இன்ஸ்டன்ட் தேன்குழல் ரெடி.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* கீரையை மசியல் செய்யும் போது சாதம் வடித்த கஞ்சியைச் சிறிது விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும். ருசியும் அருமையாக இருக்கும்.

* எள்ளு சாதம் செய்யும் போது கொஞ்சம் கறிவேப்பிலையைப் பொடியில் சிறிது சேர்த்துக் கலந்தால் எள்ளு சாதம் ருசியும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
- கீதா ரவி, திருவான்மியூர்.

* பச்சைமிளகாய் பழுக்காமலிருக்க அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு வைக்கலாம்.

* பாம்பே (வெள்ளை) ரவையை வறுத்து பச்சைமிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து தோசை சுட வித்தியாசமான, சத்தான தோசை தயார்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* நெய் காய்ச்சும் போது வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை போட்டுக் காய்ச்சியவுடன் ஆறிய பிறகு வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை எடுத்து சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்தால் சூப்பர் டேஸ்டுடன் சப்பாத்தி வாசனையாக இருக்கும்.

* பீன்ஸ் கறியுடன் 1/2 கப் கடலை மாவு, சிறிது காரப்பொடி, உப்பு, சோம்பு, மசாலாப்பொடி, கொத்தமல்லித்தழை போட்டு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து சிறிய வட்டங்களாக செய்து ரஸ்க் பொடியில் புரட்டி நான்ஸ்டிக் கல் அல்லது தோசைக்கல்லில் தட்டி எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* கசகசாவை அரைத்து குழம்புக்கு பயன்படுத்துவது சிரமம். கசகசாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொண்டால் தேவையான போது பயன்படுத்தலாம்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* தோசை பஞ்சு போல வரவில்லையா... சாதம் வடித்த கஞ்சியை சிறிது தோசை மாவில் கலக்கவும். பிறகு வார்த்துப் பாருங்கள். மொறு மொறு தோசை நிமிடமாய் பறந்து விடும்.

* தக்காளி சூப் நீர்த்துப் போய் விட்டது. மாவும் கைவசம் இல்லையா? கையை பிசைவானேன். உருளைக்கிழங்கு ஒன்று வேகவைத்து மசித்து சூப்பில் சேருங்கள். திக்னெஸ், டேஸ்ட், சத்து.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-97.

* மோர் மிகவும் புளித்து விட்டால் குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், உளுந்து, கடலைப்பருப்பு, கடுகு தாளித்து 5 ஆழாக்கு மோர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு 2 ஆழாக்கு அரிசி போட்டு சாதமாக வேகவைத்து எடுத்தால்
எலுமிச்சம்பழ சாதம் போல் ருசியாக இருக்கும்.

* ரவா கேசரி கட்டி தட்டாமல் இருக்க, கேசரிக்கு விடும் நெய்யில் முக்கால் பாகத்தை ரவையை வறுக்கும்போதே ஊற்றி விட வேண்டும். இதனால் கேசரி மணத்துடன், கட்டி தட்டாமல் சுவையாக இருக்கும்.

* வெண்ணெய் காய்ச்சி இறக்குவதற்கு முன் வெல்லக்கட்டி ஒன்றை போட்டால் நெய் மணமாகவும், சுவையாகவும் இருப்பதுடன் நீண்ட நாட்கள் கெடாது.

* உளுந்து வடை அரைக்கும் பொழுது நீர் அதிகமாகி விட்டால், ஒரு கை பயத்தம் பருப்பை போட்டு கிளறி மாவை மூடி வைத்து விட்டு 1/2 மணி நேரத்திற்கு பிறகு வடை தட்டினால் வடை பக்குவமாக இருக்கும்.
- மாலதி நாராயணன், ஆழ்வார் திருநகர்.