திருப்தி இல்லை என்றால் எழுதவே மாட்டேன்! - ரமணிச்சந்திரன்



-ஸ்ரீதேவி மோகன்

இன்றைக்கு இளம் பெண் எழுத்தாளர்கள் பலர் புதிதாக உருவாகி இருந்தாலும் முதுபெரும் எழுத்தாளர் ரமணிச்சந்திரனுக்கு என்று ஒரு பெரும் வாசகப் பட்டாளம் தமிழகத்தில் எப்போதும் உண்டு. அந்த வாசகக்கூட்டத்தில் அதிகளவில் ஆண்களும் அடக்கம். நேர்மறை சிந்தனை கதைகளை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரமணிச்சந்திரன். பாஸிட்டிவ் எனர்ஜியை தரும் அவரது எழுத்துகள் போலவே அவருடைய பேச்சும் நம்முள் வாழ்க்கையின் தேவையை உணர்த்தி உற்சாகம் கொடுக்கிறது. சமீபத்தில் அவரைச் சந்தித்தேன். கடந்து வந்த பாதையின் நீளத்தை புன்னகையோடு பகிர்ந்து கொண்டார். உரையாடலிலிருந்து…

இனிமையான இளமைப் பருவம்
“திருச்செந்தூர் முருகன் கோயில் அருகில்தான் எங்கள் வீடு. நாங்கள் சகோதரிகள் 5 பேர் உட்பட மொத்தம் ஏழு பேர். வீட்டுக்குள்ளே படிக்கும் நேரம் தவிர்த்து நாங்கள் சேர்ந்து எந்நேரமும் சந்தோஷமாக விளையாடுவோம். அம்மா எங்களை அடிக்கடி கடற்கரைக்கு அழைத்துச் செல்வார். கூட்டமில்லாமல் இருக்கும் என்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில் செல்வோம்.

கடல் நீரில் ஆடுவதோடு கடற்கரையிலும் சில விளையாட்டுகள் விளையாடி மகிழ்வோம். அம்மா எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள். அப்பா சில சின்னச் சின்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் எங்களை கட்டுப்பெட்டியாக வளர்க்கவில்லை. எங்கள் உறவினர் பிள்ளைகள் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் கடலுக்குச் சென்று விளையாடுவோம்.

இளம் பிள்ளைகளான எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். மிக மிக மகிழ்ச்சியான இளமைப் பருவம் எங்களுடையது. இன்னும் சொல்லப்போனால் இந்த நகர வாழ்க்கையில் என் பிள்ளைகளுக்குக் கூட அந்த அளவுக்கு மகிழ்ச்சியான இளமைப் பருவம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்”.

எழுத்தாளரான கதை
“புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் இருந்ததே தவிர கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை. அம்மாவும் புத்தகங்கள் வாசிப்பார். அம்மாவின் தாத்தாவிற்கு தமிழில் நல்ல புலமை உண்டு. அதனால் சின்ன வயதில் அம்மாவை மடியில் வைத்துக்கொண்டு கம்ப ராமாயணம், வில்லி பாரத கதைகளை எல்லாம் சொல்வாராம்.

அதெல்லாம் அம்மாவுக்கு மனப்பாடம் ஆகிப்போனதால் அம்மாவும் காவியங்களின் பாடல் வரிகளைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லி அதிலுள்ள கதைகள், கிளைக்கதைகளை எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமாக எங்களுக்குச் சொல்வார். அதனால்தானோ என்னவோ நானும் எழுதும் விஷயங்களை சுவாரஸ்யமாக எழுதுவேன்.

நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். கல்லூரி படித்து முடித்ததும் திருமணம் நடந்தது. எனக்கும் என் சகோதரி ஒருத்திக்கும் அடுத்தடுத்து திருமணம் நடந்ததால் எங்கள் கடிதங்கள் அடிக்கடி தஞ்சாவூர் டூ சென்னை என்று பறக்கும். அவள் கணவர் ராணி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். அவர் என் கடிதங்களை பார்த்துவிட்டு ‘உன் சகோதரி மிக அழகான எழுத்துநடையில் கடிதம் எழுதுகிறார்.

அவரை புத்தகத்திற்கு கதை எழுதச் சொல்’ என வற்புறுத்திக்கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்குப் பின் ஒரு கதை எழுதினேன். அது நன்றாக இருந்தது என அனைவரும் சொன்னதால் தொடர்ந்து புத்தகங்களுக்கு எழுத ஆரம்பித்தேன்”.

நாவல்கள் எழுதப் பிடிக்கும்
“நான் எழுதிய சிறுகதைகள் மிகவும் குறைவுதான். தொடர்கதைகள் கொஞ்சம் எழுதினேன். ஆனால் முழு நாவல்கள்தான் அதிகம் எழுதி இருக்கிறேன். சிறுகதை என்றால் சொல்ல வந்த கதையை நறுக்கு தெரித்தாற்போல் சொல்ல வேண்டும். ஒரு சிலருக்குத்தான் அந்த தொழில்நுட்பம் கைகூடும். ஆனால் நாவலில்தான் நாம் நினைத்த விஷயத்தை விரிவாக பேச முடியும் என்பதால் எனக்கு நாவல் எழுதத்தான் பிடித்திருக்கிறது. கிட்டதட்ட 180 நூல்கள் எழுதி இருப்பேன் என நினைக்கிறேன்”.

நான் எழுதுவதே பலருக்கு தெரியாது
“ஆரம்ப காலத்தில் நான் எழுதுவதே பலருக்கு தெரியாது. பெண்களின் எழுத்து என்றாலே குறையை தேடித் தேடிக் கண்டு பிடிப்பார்கள். காதல் கதை எழுதினால் ‘என்ன இப்படி எழுதி இருக்கீங்க’ என்பார்கள் அதனால் நான் எழுதுவதைப் பற்றி யாரிடமும் அவ்வளவாகப் பேச மாட்டேன். ஏதாவது விழாக்களில் யாராவது பார்த்து விட்டு என் கதை பற்றி பேசினால் ஒரு சின்னச் சிரிப்போடு அமைதியாக இருந்துவிடுவேன்”.

அநுத்தமா கதைகள் பிடிக்கும்
“எனக்குப் பிடித்த எழுத்தாளர் அநுத்தமாதான். அவரின் கதைகளின் முடிவுகள் எப்போதும் மகிழ்ச்சியானதாக இருக்கும். அவரது கதைகளை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ‘அமுத சுரபி’, ‘கலைமகள்’ போன்ற புத்தகங்களில் வரும் அவரது கதைகளை விரும்பிப் படிப்பேன். அவரைப் போலவே நானும் எழுத ஆசைப்பட்டேன்”.

கற்பனைக் கதைகளையே எழுதுகிறேன்
“என் கதைகள் எல்லாமே கற்பனையானவைதான். நான் பார்த்த, சந்தித்த யாராவது என்னிடம் சொல்லிய உண்மை சம்பவங்களை நான் ஒரு போதும் எழுதுவதில்லை. ஒரு வேளை அந்தக் கதை மற்றவர்களையும் பாதிக்கலாம் என்பதால் நான் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுதுவதில்லை. எதாவது ஒரு சின்ன நூல் பிடித்து எதாவது ஒரு கற்பனை கதையை உருவாக்குவேன்.

ஒரு நாள் யாரோ பேசும்போது சொன்னார்கள் ‘நாய்க்கு செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமான்னு?’ அதைக் கேட்டவுடன் ஒரு சின்ன தீப்பொறி மாதிரி ஒரு கதைக்கரு தோன்றியது. அதை ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்ற நாவலாக எழுதினேன். கவிதை என்றால் உயர்வு நவிற்சி அணி இருப்பது கவிதைக்கு அழகு சேர்க்கும். அது போல கதைகளிலும் கொஞ்சம் மிகை உணர்ச்சி இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

பாலாறும் தேனாறும் அங்கே ஓடியது என்றால் நிஜமாகவே பாலாறு ஓடியது என்றா அர்த்தம்? அவ்வளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடையது எல்லாமே கற்பனைக் கதைகள் தான் என்பதால் வாசகர்களுக்கு போரடிக்காத வண்ணம் வித்தியாசமாக சிந்திக்க வேண்டி இருக்கும். அதனால் நிறைய புது விஷயங்களை புகுத்துவேன்.

எனக்கு மற்ற எழுத்தாளர்கள் போல் வெளியுலகம் அவ்வளவாகத் தெரியாது. நான் எழுதும் கதைகளுக்கு எனக்கு எதாவது தகவல்கள் தேவைப்பட்டால் என் கணவரிடம் கேட்பேன். அவர் எனக்கு சேகரித்து தருவார். அது மட்டுமில்லாமல் எப்போதும் தமிழில் புரியும் மாதிரியான வார்த்தைகளைப் போட்டு கதை எழுதவேண்டுமென நினைப்பேன். ஆங்கில இலக்கியம் படித்ததால் எனக்குத் தோன்றும் சில வார்த்தைகளை முதலில் ஆங்கில அகராதி வைத்து தமிழ் அர்த்தம் பார்ப்பேன். அதன் பிறகு தமிழ் டூ தமிழ் அகராதி பார்த்து வார்த்தை
களை கண்டறிந்து எழுதுவேன்.”

கிளைமாக்ஸ்
“அவலச் சுவை கொண்ட கதைகள் நீண்ட காலம் மனதில் வாழும் என்பது உண்மைதான். சோகமும் ஒரு சுவைதான். நான் படித்த ஒரு ஆங்கில நாவல் மார்க்கரேட் மிச்செல் எழுதிய ‘Gone with the wind’ பெரிய புத்தகம். முழுவதும் படிக்க அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் நாவலின் இறுதி படிப்பவர்களை கலங்க வைத்துவிடும். துயரமான முடிவு.

படித்து முடித்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. சுவாரஸ்யமான அந்தக் கதையை நான் மறுபடி படிக்க விரும்பினாலும் அதன் முடிவை நினைத்து மறுபடி படிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இன்றளவும் அந்த கதை என் மனதில் இருப்பது உண்மை. துயரம் தரும் வலியின் தாக்கம் அதுதான். இருந்தாலும் என்னுடைய பாணி என்பது சுபமான முடிவுதான். நாம் நம் வாழ்க்கையை வாழ்வது எதற்காக? மகிழ்ச்சியோடு இருப்பதற்காகதானே? ஆனால் உண்மையில் நமக்கு நடப்பது என்ன? வாழ்க்கையில் கொஞ்ச நேரம் மட்டுமே மகிழ்ச்சியையும் பெரும்பாலான நேரங்களில் கஷ்ட நஷ்டங்களையும் பிரச்னைகளையும்தான் மனிதர்களான நாம் சந்திக்கிறோம்.

அதனால் குறைந்த பட்சம் என் கதைகளை படிக்கும்போதாவது மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கதை படிக்கும் அந்த நேரம் மக்கள் ரிலாக்ஸாக வேண்டும் என நினைத்து எழுதுகிறேன். என் கதையைப் படித்துவிட்டு யாரும் அழக்கூடாது என நினைக்கிறேன். என் கதைகள் எனக்குப் பிடித்திருந்தால் மட்டும்தான் எழுதுவேன்.

திருப்தி இல்லை என்றால் எழுதவே மாட்டேன். ஒரு சமயம் என்னுடைய பாணியில் இருந்து விலகி ஒரே ஒரு கதை எழுதினேன். ஆனால் நான் இதில் இருந்து மாறுவது எனது வாசகிகளுக்குப் பிடிப்பதில்லை. எனது கதாபாத்திரங்களின் தன்மை மாறுவது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதை ஒரு சிலர் என்னிடம் நேரிடையாக தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு ஒரு போதும் அவலச்சுவை கொண்ட கதைகளை எழுதவில்லை”.

வாசகர்கள்
“வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதும் வாய்ப்புகள் வந்தன. சில காலம் எழுதினேன். ஆனால் கேள்வி கேட்பவர் சொல்வது அவருடைய பக்க நியாயமாக மட்டும்தான் இருக்கும். அதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் என்று சொல்ல முடியாது. இதில் மற்றவர்களின் நியாயத்தையும் தெரிந்து கொள்ளாமல் முடிவு சொல்ல முடியாது.

ஒரு சமயம் ஒரு பெண் எழுதி இருந்த கடிதத்தில் தன் பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அதனால், தான் வீட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் எழுதி இருந்தாள். ‘உலகத்திலே நம் நன்மையை அதிகம் விரும்புபவர்கள் நம் பெற்றோர்களாகத்தான் இருக்கும். நீ வெளிஉலகத்திற்கு வந்தால் இன்னும் அதிகப் பிரச்னைகளைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும் அதனால் வீட்டில் இருந்தே உன் பிரச்னையை தீர்க்கப் பார்’ என்று பதில் எழுதினேன்.

எங்கேயோ உட்கார்ந்து கொண்டு நான்கு வரி கடிதத்தைப் பார்த்து யாருடைய வாழ்க்கைக்கோ முடிவுகளும் தீர்வுகளும் சொல்ல நான் விரும்பவில்லை. அதனால் அதை எல்லாம் இப்போது செய்வதில்லை. வீடு தேடி வரும் வாசகர்களிடம் பேசுவேன். மற்றபடி விழாக்களுக்கெல்லாம் அவ்வளவாக செல்வதில்லை.

ஒரு சமயம் ஒரு வாசகர் என்னிடம் வந்து, “ரயில் பயணத்தின்போது எதேச்சையாக உங்களுடைய கதையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கதை மிகவும் பிடித்திருந்ததால் தொடர்ந்து உங்கள் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான், மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன். அதன்படி நடந்தேன். என் அன்பில் உருகிப்போன அவளுள்ளும் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

அவள் தினமும் காலையில் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று பூஜை செய்கிறாள். எதை மறந்தாலும் அவள் எனக்காக பூஜை செய்ய மறப்பதில்லை. எங்கள் குடும்பம் இப்போது மிகுந்த சந்தோஷமாக இருப்பதற்கு உங்கள் கதைகள்தான் முக்கியக் காரணம்” என்றார். இரண்டு பெண்கள் என் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அதில் ஒருவர் சொன்னார் ‘நான் என் கணவரிடம் சண்டை போட்டு விட்டால் உங்கள் கதைகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிடுவேன். அரை மணி நேரத்தில் என் கோபம் எல்லாம் குறைந்து விடும். மறுபடி அவரிடம் பேசி விடுவேன். எங்கள் இல்லறம் இனிமையாக இருக்கக் காரணம் உங்கள் கதைகள்தான்’ என்றார். இது போல ஒரு சிலர் என்னை தேடி வந்து பேசுவார்கள்”.

பெண்களின் பிரச்னைகள்
“என்னுடைய கதைகள் பெண்ணை முக்கியமான கதாபாத்திரமாகக் கொண்டு இருப்பதால் பெரும்பாலான கதைகள் பெண்ணின் பிரச்னையைப் பேசி இருக்கின்றன. பெண்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றி பேசி இருக்கின்றன. ஆனால் முடிவுகள் எப்போதுமே நேர்மறையாகவே இருக்கும். நல்ல வார்த்தைகளை மட்டுமே என் கதைகளில் பயன்படுத்துவேன். இப்போதெல்லாம் கொஞ்சம் ஒரு மாதிரியான சொற்களை கூட பளிச்சென எழுதி விடுகிறார்கள். ஆனால் என் எல்லை இது தான்”.

சாதித்தது
“மலையின் உச்சிக்கு சென்ற பிறகு என்ன பண்ண முடியும். கீழே இறங்கித்தானே ஆக வேண்டும். எனவே சாதித்து விட்டோம் என்று நாம் நினைத்து விட்டால் அதற்குப் பிறகு நமக்கு வீழ்ச்சிதான். சாதித்து விட்டோம் என்று மனதிற்கு தோன்றிவிட்டால் அதற்குப் பிறகு வாழ்க்கையில் வளர்ச்சி இருக்காது”.

வளரும் எழுத்தாளர்களுக்கு...
“இப்போதைய இளம் பெண் எழுத்தாளர்கள் எல்லாரும் திறமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள். எக்காரணத்தைக்கொண்டும் பிறர் சொல்வதற்காக உங்கள் பாணியை மாற்றிக்கொள்வது வேண்டாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எப்படி எழுதவேண்டுமென தோன்றுகிறதோ அப்படியே எழுதுங்கள்”.

குங்குமம் தோழிகளுக்கு...
“இளைய தலைமுறை மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. நாம என்னதான் அவர்களை குறை சொன்னாலும் வாழ்க்கையை எப்படி கொண்டு போவது என்பதில் இளம் தலைமுறை தெளிவாக உள்ளது. குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். ஜாக்கிரதையா பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொள்கிற துணிவையும் கற்றுக்கொடுங்கள்”.

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்