சிறைச்சாலையில் சித்திரவதை



-ஜெ.சதீஷ்

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக ரயிலில் பிரச்சாரம் செய்த 7 மாணவர்களை கடந்த 16.4.2017 அன்று கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தது காவல்துறை. மேலும் பெண்களை சோதனை என்ற பெயரில் மாணவிகள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக, நிர்வாணப்படுத்தியும் ஆபாசமாக பேசி சிறை நிர்வாகம் அத்துமீறியுள்ளது.

இதனை கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த சில பெண்கள், இதே திருச்சி சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை அவ்வளவு எளிதாக கடந்துபோக முடியாத சூழலில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ராஜா கூறுகையில், ‘‘நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த மாணவர்கள், கடந்த 15ம் நாள் குளித்தலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டவர்களில் இருவர் பெண்கள். திருச்சி சிறையில் சோதனை என்ற பெயரில் மாணவிகளை 8 முறைக்குமேல் நிர்வாணப்படுத்தியும், ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும் சிறைச்சாலையில் மாணவிகளை சந்தித்தபோது தெரிவித்தார்கள்.

மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வழங்கக்கூடிய நாப்கின் கூட வழங்காமல் சிறை அதிகாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துள்ளதாக கூறும்போதே அவர்களின் கண்களில் கண்ணீர் வழிகிறது. மாணவர்களுக்கு ஜாமீன் கேட்டும் முறைகேடாக நடந்துகொண்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளோம்” என்கிறார் வழக்கறிஞர் ராஜா.

இச்சம்பவம் குறித்து கருத்தறிய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான ஓவியாவை தொடர்புகொண்டேன். ‘‘பெண்கள் பொது வெளியில் வந்து போராடுவது என்பது, பெண் விடுதலை பார்வையில் மிக முக்கியமான ஒன்று. தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்குப் பின், பெண்கள் அதிக அளவில் பொது வெளியில் வருவது அதிகரித்துள்ளது. திருச்சி சிறையில் நடைபெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது போன்ற சம்பவங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்திருக்கின்றன. உடல்ரீதியான துன்புறுத்தல்களை விட உளவியல் ரீதியான பிரச்சனைகளால் அவர்கள் மீண்டும் போராட வர மாட்டார்கள் என்கிற பார்வை ஆங்கிலேயர்களிடம் இருந்தது. அதையேதான் இங்கு கையாள்கிறார்கள். இம்மாதிரியான செய்திகள் வெளிவரும்போது பொது வெளியில் வந்து போராட நினைக்கும் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவே அதிகார வர்க்கம் முயற்சித்து வருகிறது என்பதை உணரமுடிகிறது.

தொடர்ந்து இத்தகைய போக்கு காவல்துறையிடம் காணப்படுவதைப் பார்க்கிறோம். அண்மையில் பள்ளிக்கரணையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டமொன்றில் கலந்து கொண்ட பெண்களை காவல்துறை பாலியல்ரீதியாக துன்புறுத்தியது. கோவை அருகே மது ஒழிப்புக்காக போராடிய பெண்களை அடித்துத் துன்புறுத்தி அதில் ஒருவரை காது கேட்காத அளவுக்கு தாக்கிய கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.

மகளிர் காவல் நிலையங்கள் வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் பெண் காவலர்கள் தங்களுடைய முன்மாதிரியாக ஆண் காவலர்களையே எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களை போலவே செயல்பட தொடங்குகிறார்கள். ஆதிக்கவாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் சாதாரணப் பெண்கள் கேள்வி கேட்பது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இதனால் மனிதத் தன்மையை இழந்து மிருகம் போல செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினரால் நடத்தப்படுகின்ற கொடுஞ்செயல்கள் அதிகமாகி இருக்கிறது. சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் காவல் துறையினர் மீது அரசு விசாரணை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவெளியில் போராடக்கூடிய பெண்கள் பெருமளவில் அரசியல் வேறுபாடின்றி ஒருங்கிணைய வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல் எவ்வித வேறுபாடின்றி ஒற்றுமையுடன் போராட வேண்டும்’’ என்கிறார் எழுத்தாளர் ஓவியா.