இனி எல்லாம் சுகமே



-ஜெ.சதீஷ்

500 கிலோ எடையுடன் ஒரு பெண் இருந்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இமான் அஹமத். 36 வயதான இவர் உலகின் அதிக எடை கொண்ட பெண். இவரின் எடை 500 கிலோவிற்கும் மேலாக இருந்தது. இதனால் பெரிதும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் பயனாக அவர் தனது உடலின் பாதி எடையை குறைத்துள்ளார். இமான் அஹமத் தற்போது 242 கிலோ எடை குறைத்துள்ளார். இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில், ‘‘தற்போது இவர் சக்கர நாற்காலியில் உட்காரும் அளவிற்கு தேறியுள்ளார்.  தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இமான் அஹமதுக்கு இடது காலில் பக்கவாதம் மற்றும் மூட்டுவலி பிரச்சனை உள்ளது. இதனால் அவர் சிடி ஸ்கேனில் நுழையும் அளவிற்கு எடை குறைந்து விட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். ‘‘தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளன.

மேலும் மூளை தொடர்பான பிரச்சனைகளும் உள்ளன. அவர் நீர் ஆகாரங்களையே எடுத்து வருகிறார். அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். அவர் வயிற்றில் உணவு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளித்து 75 சதவீதம் குறைத்து விட்டோம். இதனால் அவர் கூடிய விரைவில் 100 கிலோ எடையை குறைத்துவிடுவார்” என்கிறார்.

தன்னுடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இமான் அஹமத் கூறுகையில், ‘‘உலகில் எடை அதிகமாக உள்ள பெண் என்கிற அடையாளத்திலிருந்து நான் மீண்டு விட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் உணர்கிறேன். என் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தேன். எடை குறைப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு வந்த எனக்கு இங்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது. மேலும் சிகிச்சைக்காக இங்கு சிறிது காலம் இருக்கலாம் என்றிருக்கிறேன். முழுமையாக குணமடைய சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்” என்கிறார்.