வானவில் சந்தை



காப்பீட்டுச் சந்தை
சில வாரங்களுக்கு முன் எங்களிடம் நிதி ஆலோசனைக்காக ஒரு பெண் வந்திருந்தார். நண்பரின் பரிந்துரையின்படி அவர் வந்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்தான் அவர் தனது கணவரை இழந்திருந்தார். வீட்டுக் கடன் தவிர்த்து வேறு பெரிய சுமைகள் ஏதும் அப்போது அவருக்கில்லை. எனவே நான், ’வீட்டுக் கடன் காப்பீடு செய்யப்பட்டிருகிறதா?’ என்று அவரிடம் கேட்டேன்.

அவர் இல்லையென்றார். நான் எதற்கும் அவரது வீட்டுக் கடன் தொடர்பான ஆவணங்களைப் பார்க்க விரும்பினேன். ஏனென்றால், கடந்த பல வருடங்களாகவே வீட்டுக் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் தங்களது கடன் தொகையை காப்பீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அதாவது கடனாளி இறந்து போனாலோ, விபத்தினால் வேலை பார்க்க முடியாத அளவு பாதிக்கப்பட்டாலோ, கடன் தொகையை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டு கடன் கொடுத்த நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்கும். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் அந்தக் கடன் சுமையிலிருந்து விடுபடும். இப்படி கடனை காப்பீடு செய்வது என்பது நிதி நிறுவனங்களில் பெருமளவு பரவலாக இருந்து வருகிற நடைமுறைதான்.

பெரும்பாலும், வாடிக்கையாளருக்கு இதன் தேவையோ பயனோ சரியான முறையில் விளக்கப்படாமலே இந்தக் காப்பீடு விற்கப்பட்டு வருகிறது. பிறகு, அவரது கடன் ஆவணங்களை பார்த்தபோது அப்படிக் காப்பீடு ஏதும் செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. ஆனால் அவரது கணவர் வாங்கியிருந்த தனி நபர் கடன் அவ்வாறு காப்பீடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆனால், வீட்டுக் கடன் என்ற பெரிய சுமை அவருக்கு இப்போது இருக்கிறது. அவருக்கு வேறு சில ஆயுள் காப்பீடுகளிலிருந்து வந்த இழப்பீட்டுப் பணம் அதற்கே போதுமானதாக இருக்கிறது. முப்பதுகளில் இருக்கும் அவர் இனி தனது குழந்தையைப் படிப்பித்து ஆளாக்குவதற்கும், தனது எதிர்காலத் தேவைகளுக்கும் என்ன செய்வதென்று இனிமேல்தான் முடிவெடுக்க வேண்டும். குறை ஆயுள் காப்பீட்டின் (Under Insurance) விளைவே இது.

எல்.ஐ.சி. மட்டுமே இருந்துவந்த காலம் போய் இப்போது 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. 90களில் ஆரம்பித்த தாராளமயமாக்கலுக்குப் பின்னான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவங்களின் இந்த வளர்ச்சி, ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் கடும் போட்டியையும், சேவை கூடுதல் மக்களை சென்றடையவும் காரணமாயிருந்திருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால், ஆயுள் காப்பீட்டின் தேவையும் பயன்பாடும் குறித்த விழிப்புணர்ச்சியோ படித்தவர்களிடமுமே மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எங்களது அனுபவமும் நாள்தோறும் இதை உறுதிப்படுத்துகிறது.

ஆயுள் காப்பீட்டின் தேவை
நிதித் திட்டமிடுதலில் (Financial Planning) மிக முக்கியமானது, குடும்பத்தின் நிதி ஆதாரமான நபர் தன்னை ஆயுள் காப்பீடு செய்துகொள்வதுதான். ஏனென்றால்,  நிதித்திட்டமிடுதல் என்பதே ஒருவரது எதிர்கால வாழ்வு எதிர்பாராத நிகழ்வுகளால் நிதி சார்ந்த பிரச்னைகளில் சிக்கிச் சீர்குலையக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான்.

ஒரு குடும்பத்தின் வருவாய்க்குக் காரணமானவர் இறந்து விட்டாலோ, விபத்தினால் வேலையை தொடர முடியாமல் போனாலோ, அக்குடும்பம் அதுவரை அனுபவித்து வந்த அடிப்படை வசதிகள் (உணவு, உடை, இருப்பிடம்) கூட மறைந்து விடும். கூடுதலாக, நீண்ட காலக் கடன்களுக்கும் (வீட்டுக் கடன் போன்றவை) அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

சில நேரங்களில் இருக்கிற சொத்துக்களையே பறிகொடுக்க வேண்டியிருக்கலாம். சரியான, போதுமான தொகைக்கான, ஆயுள் காப்பீடு இதைத் தவிர்க்கும். ஆக, சரியான ஆயுள் காப்பீட்டுத் தொகையை எப்படிக் கணிப்பது? இது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும் மூன்று முக்கியமான வழிகளை பார்க்கலாம்.

1. வருவாய் பதிலீட்டு அணுகுமுறை (Income Replacement Approach)
இது ஒரு எளிதான அணுகுமுறை. இதில் கணக்கில் எடுக்கப்படும் விஷயங்கள் என்ன?

* வயது, தற்போதைய நிகர வருமானம்
* தற்போதைய ஆயுள் காப்பீடு
* மீதமுள்ள வருமானம் ஈட்டக்கூடிய வருடங்கள்
* பதிலீடு செய்ய வேண்டிய வருமான விகிதம்.

இந்த முறையில் காப்பீட்டுத் தொகையைக் கணக்கிடுவது சற்று மேம்போக்கானது. காப்பீடு எடுப்பவரின் முழுச் செலவுக் கணக்கு தெரியாதபோது இம்முறை உதவும். இதன் குறையும் இதுதான். செலவு பற்றி கணக்கில் கொள்ளாதது. பொதுவாக சம்பாதிக்க ஆரம்பிக்கும் நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கு இது உதவும்.

2. செலவு அணுகுமுறை (Expense Approach)
இது கொஞ்சம் கூடுதலானவற்றை கணக்கில் எடுக்கும் முறை.

* தற்போதைய வருமானம் (வருமானம் ஈட்டும் திறன்)
* எதிர்கால வாழ்நாள் செலவு (பணவீக்கத்தையும் சேர்த்தே கணக்கிடப்படும்)
* எதிர்பார்க்கப்படும் சேமிப்பு
* கிடைக்கக்கூடிய ஓய்வூதியம்

நடுத்தர வயதுக்காரர்களுக்கு இவற்றைக் கணக்கில் கொண்டு ஆயுள் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கலாம். செலவு மட்டுமே கணக்கிலெடுக்கப்படுவதால் இது சில சமயம் குறை காப்பீட்டுக்கு (Under Insurance) இட்டுச் செல்லும்.

3. இரட்டை அணுகுமுறை (Hybrid Approach)
முன்னால் பார்த்த இரண்டையும் சேர்த்து, முழுமையான ஆயுள் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் அணுகுமுறை. இதில் முக்கியமானது மனித ஆயுள் மதிப்பு (Human life Value). வார்ட்டனைச் (Wharton School of Business) சேர்ந்த சாலமன் எஸ்.ஹுப்னர் (Solomon S. Huebner), 1920களில் இதை பிரபலப்படுத்தியதன் மூலம் ஆயுள் காப்பீட்டை அறிவியல்ரீதியாக அணுக வழி ஏற்படுத்தினார். வருமானம் ஈட்டுபவரின் இறப்பினால் ஒரு குடும்பம் எதிர்காலத்தில் எவ்வளவு பணம் இழக்கும் என்பதைக் கணக்கிடுவதே இந்த அணுகுமுறையின் மையப் புள்ளி.

* வருமானம்
* செலவு
* மீதமுள்ள வருமான காலம்
* எதிர்காலத் தேவைகளின் மதிப்பு (பணவீக்கத்தையும் சேர்த்து கணக்கிடுவதன் மூலம் வரும் தொகை).

இந்த அணுகுமுறையின் வழி ஓரளவு துல்லியமான ஆயுள் காப்பீட்டுத் தொகையைக் கணக்கிடலாம். மேலே சொல்லப்பட்டவற்றையெல்லாம் தாண்டி வேறு பல காரணிகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டியிருக்கும். அது ஒரு நபரின் தனிப்பட்ட நிதிச் சூழலையும் பிரச்னைகளையும் கணக்கில் கொண்டே செய்யப்பட வேண்டும். எப்படியும் ஒருவர் தனது வயதிற்கேற்பவும், வருமானத்திற்கேற்பவும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை தொடர்ந்து மறுபரிசீலனை செய்து கொண்டேயிருக்கவேண்டும். ஏனென்றால், ஒருவரின் பொருளாதார நிலை என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிற ஒன்றுதான்.

(வண்ணங்கள் தொடரும்!)