பெயின்ட் யுவர் நெயில்ஸ்



-பி.கமலா தவநிதி

அழகு என்பது மனதில் இருக்கிறதே தவிர தோற்றத்தில் இல்லை என்றாலும், யார்தான் தம் தோற்றத்தை மேலும் அழகூட்ட மெனக்கெடுவதில்லை? ஒருவர் மனதில் எளிதில் பதியக்கூடியது நம் வெளித் தோற்றம்தான்.  தலைமுடியில் ஆரம்பமாகி பாதம் வரை என அனைத்திற்கும் பார்லர் செல்லும் பெண்களும் உண்டு. அஞ்சறைப் பெட்டியை வைத்தே ஆயுர்வேத அழகிகளாக திகழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

பெரும்பாலும் தலைமுடி பராமரிப்பு, சருமப் பராமரிப்பு, ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர், வேக்சிங், த்ரெட்டிங் போன்றவைப்பற்றி அனைவரும் அறிந்திருக்கக்கூடும்.  ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் ட்ரெண்ட் ஆகிறது. அந்த வகையில், தற்போது சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள், கோல்டன் ஜூப்ளி கொண்டாடும் பெண்கள் வரை பிரியப்பட்டு செய்துகொள்வதுதான் நெயில் ஆர்ட். பெண்கள் புரட்டும் பியூட்டி பக்கங்களை ஆக்கிரமித்து, பெண்களின் முதல் தேர்வாக இருக்கும் நெயில் ஆர்ட் பற்றி நேச்சுரல்ஸின் நிறுவனர் திருமதி வீணா பகிர்ந்து கொள்கிறார்:

‘‘ஸ்டோன்ஸ், க்ளிட்டர்ஸ், ஃபெதர்ஸ், ஸ்டிக்கர்ஸ், பவுடர், பீட்ஸ் போன்றவற்றால் நகங்களை அலங்கரிப்பதே நெயில் ஆர்ட். இதில் ரெகுலர்  நெயில் பாலிஷிற்கு பதிலாக ஜெல் பாலிஷ் பயன்படுத்தப்படுகிறது. அன்றாடம் நாம் கைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதால் ரெகுலர் நெயில் பாலிஷ் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நகங்களில் இருப்பதில்லை.

ஆனால் ஜெல் பாலிஷ் ஒன்றரை மாதங்கள் வரை அழியாமல் இருக்கும் என்பதால் மட்டுமே இது நெயில் ஆர்ட்டில் உபயோகப்படுத்தப்படுகிறது. நல்ல பிராண்ட் ஜெல் பாலிஷ் ஃபேன்சி ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. ஆதலால் ஜெல் பாலிஷ் கொண்ட நெயில் ஆர்ட் பார்லரில் மட்டுமே நேர்த்தியாக செய்யமுடியும். மேட் ஃபினிஷ், பிரெஞ்சு டிசைன், ஷிம்மர் டஸ்ட் என்று வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், கற்பனைக்கும் ஏற்றவாறு செய்து தரப்படும். 

மேலும் மணப்பெண்களுக்கு அவர்களின் ஒப்பனை, ஹேர் ஸ்டைல், உடையின் டிசைன், உடையின் நிறம் போன்றவற்றிற்கு தகுந்தாற்போல நெயில் ஆர்ட் செய்யப்படும். முதலில் நெயில் ஆர்ட் செய்ய வருபவர்களுக்கு அவர்களின் நகம் நல்ல வளர்ச்சி பெற்றதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நெயில் ஆர்ட் பார்ப்பவர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். ‘எனக்கு நெயில் ஆர்ட் பண்ண ஆசை.

ஆனா எனக்கு நகம் வளரவே மாட்டேன் என்கிறது’ என வருத்தப்படுகிற பெண்ணா நீங்கள்? கவலையே வேண்டாம்.  உங்களுக்கான தீர்வுதான் நெயில் எக்ஸ்டென்ஷன்ஸ். இதை நகங்களில் தற்காலிகமாக பொருத்தி அழகு செய்யலாம். நெயில் ஆர்ட் செய்வதற்கு முன்நகங்களை தயார் செய்வது அவசியம். அதற்கு பெயர் ‘ட்ரை மெனிக்யூர்’. அதாவது நகங்களை சுத்தம் செய்து, வெட்டி நகங்களுக்கு நல்ல வடிவம் கொடுப்பதே ட்ரை மெனிக்யூர்.

கால் நகங்களிலும் இதே போன்றுதான் செய்யப்படும். ஓவல், ரவுண்டு, ஸ்கொயர், ஸ்கொயர் வித் ரௌண்டட் எட்ஜஸ், ஸ்டிலேடோ பாய்ன்டட், ஆல்மண்ட் ஷேப், லிப்ஸ்டிக் ஷேப், பெல்லாரினா, ஃபேன் டஸி போன்று பல்வேறு வகை நக வடிவங்களில் தங்களுக்கு பிடித்த வடிவத்தில் நெயில் ஆர்ட் செய்வது அவரவர் விருப்பம். பார்லர்களில்நெயில் ஆர்ட் போட நூறு ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஆகும்.’’

நக பராமரிப்பு
ஹேண்ட் வாஷ், டிடர்ஜென்ட் சோப், ஃபுட் கலர்ஸ் போன்ற ரசாயனங்களோடு நம் கை விரல்கள் தினமும் உறவாடியபடியே இருப்பதால் தோலில் வறட்சி, நகம் பொலிவிழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மாதம் ஒருமுறை மெனிக்யூர் செய்து கொண்டால் கைகள் வனப்புடன் இருக்கும். பாலிஷ் ரிமூவர் கொண்டு நெயில் பாலிஷை எடுத்துவிட்டு, மூன்று டீஸ்பூன் ஆலிவ் ஆயில் உடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து அதில் 10 முதல் 15  நிமிடங்கள் வரை கை விரல்களை ஊறவைத்து பின் கழுவினால் நகங்கள் ஆரோக்கியமானதாகவும், பளபளப்புடனும் இருக்கும்.

படம்:  ஏ.டி.தமிழ்வாணன்