ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாதவை



-பி.கமலா தவநிதி

சிலர் வீட்டு ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தால் அதில் இல்லாத பொருட்களே இல்லை என்பது போன்று நிறைந்திருக்கும். எல்லாவற்றையும் தூக்கி ஃப்ரிட்ஜில் போட்டுவிட்டால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது ஒருவித மூடநம்பிக்கையே. ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத ஐந்து பொருட்கள் இவை:

தர்பூசணி
முழு தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பது மிகவும் ஆபத்தானது. 2006ல் அமெரிக்காவின் விவசாயத் துறை நடத்திய ஆராய்ச்சியில் கூறப்பட்டதாவது: புதிதாக பறித்த தர்பூசணியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் சேர்ந்ததுதான் ஆன்டிஆக்சிடன்ட். 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக லைகோபீனும், 130 சதவிகிதத்திற்கும் அதிகமாக பீட்டா கரோட்டினும் நிறைந்திருக்கும்.  இந்த தர்பூசணியானது ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவை அளவு மிகவும் குறைந்து சத்து அற்றதாக மாறிவிடும். 

தக்காளி
இயற்கையாகவே தக்காளி மிகவும் மென்மையானது. குளிரூட்டப்படும்போது அதன் அமைப்பையும், சுவையையும் இழக்கிறது. குளிர் காற்றானது பழுக்கும் செயல்முறையை நிறுத்துவதால் அதன் இயற்கை தன்மையை இழக்கிறது. நன்கு பழுத்த தக்காளிகளை ஓரிரு நாட்களுக்குள் உபயோகப்படுத்திவிட வேண்டும். நல்ல மணமுள்ள ருசியான தக்காளிகள் தினந்தோறும் சந்தைகளில் கிடைக்கும்.  டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்குவதை தவிர்க்கவும்.  

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதன் சுவையை மாற்றி இனிப்பாக்கிவிடும். குளிர்காற்று அதில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து மேலும் அதன் சுவையை முற்றிலுமாக மாற்றிவிடும். இயற்கையாகவே அதில் உள்ள அக்ரலமைட் என்கிற ரசாயனத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடும்போது இந்த ரசாயனம் நம் உடலுக்குள் சென்று தீங்கு விளைவித்து மேலும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது. நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பதே சிறந்தது அல்லது காகிதப் பைகளில் வைக்கலாம். 

வெங்காயம்
வெங்காயத்தில் ஏற்கனவே ஈரப்பதம் இருக்கிறது. ஃப்ரிட்ஜில் வைப்பதால் அவை மேலும் மென்மையாகி அழுகிவிடும். ஆனால் வெங்காயங்களை நறுக்கி ஏர் டைட் கண்டைனரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். பிளாஸ்டிக் பையில் போட்டு வைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் வைப்பதே சிறந்தது. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை ஒன்றாக வைக்கக் கூடாது. அவை வெளியேற்றும் ஈரப்பதம் மற்றும் வாயு இரண்டும் சேர்ந்து அவற்றை அழுக செய்துவிடும். பூண்டையும் ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்த்தல் நல்லது. 

தேன்
தேனை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அதேபோல் அடுப்பு பக்கத்திலோ, மைக்ரோவேவ்அவன் பக்கத்திலோ வைக்கக் கூடாது. ஏனெனில் அதிகப்படியான குளிர் மற்றும் வெப்பம் அதன் சுவையை கெடுக்கிறது. அதிகப்படியான குளிர் தேனை படிகமாக மாற்றிவிடும். தேன் நீண்ட நல்ல சுவை மாறாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் சேமிக்கலாம். காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கில் சேமிக்கக் கூடாது. தேனில் புளிப்பு வாசனை வந்தால் நிச்சயம் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.