குரல்கள்



-கி.ச.திலீபன்

தமிழக அரசு செயல்படுகிறதா? மக்களுக்காக அரசா? அரசுக்காக மக்களா? இன்றைக்கு தமிழகத்தின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சி, மக்களின் நலனுக்கான செயல்திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்காக செயலாற்ற வேண்டும். ஆனால் தற்போது கட்சி/ஆட்சியை கைப்பற்றுவதற்கான போட்டிகளும், மோதல்களுமாய் தமிழக
அரசியல் பெரும் கேலிக்கூத்தாய் இருக்கிறது.

மக்களும் அந்தக் கேலிக்கூத்தை பார்த்து நகைக்கவும், கிண்டலடிக்கவுமே செய்கின்றனர். உண்மையில் தமிழகத்தில் மாநில அரசு என ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறதா? என்பதுதான் இன்றைக்கு பலரது கேள்வி. நம்மைப் பற்றி அவர்கள் யோசிக்கும் நிலை மாறி நாம் அவர்களைப் பற்றி யோசிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். மாநில அரசு இப்படியாக முடங்கிக் கிடப்பது பற்றியான கருத்துகளை சில தோழிகள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சித்தாரா, தனியார் நிறுவன ஊழியர்
ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் துவங்கி இன்று வரையிலும் மாநில அரசு செயலற்ற நிலையில்தான் இருக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்கள் ஒரு புறம், மக்களின் அடிப்படைத் தேவைகள் ஒரு புறம்... இப்படியாக மாநில அரசு பொறுப்பேற்று முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. தமிழ்நாடு இன்றைக்கு ஆதரவற்ற குழந்தை போல்தான் இருக்கிறது. முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியை மக்களுக்கு யாரென்றே தெரியாது. இதுவரையிலும் மக்கள் நலனுக்காக எத்தனை செயல் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார் அவர்? நமது ஓட்டு வீணாகி விட்டதாகவே தோன்றுகிறது.

காயத்ரி, குடும்பத்தலைவி
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று சொல்வார்கள். அரசு முடங்கிப் போயிருப்பது என்பது மக்களும் முடங்கிப் போவதைப் போல்தான். ஒவ்வொரு  துறையைச் சார்ந்தவர்களும் இதன் பாதிப்பை உணர்கிறார்கள். எல்லாவற்றுக்குமான மூலாதாரம் அரசுதான் என்பதைப் புரிந்து இவர்கள் செயல்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம், வர்தா புயல், கடலில் கலந்த எண்ணெய், விவசாயிகள் போராட்டம், ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் தற்கொலை என இந்தியாவின் ஒட்டுமொத்த கவனமும் சில மாதங்களாக தமிழகம் மேல்தான் இருக்கிறது. ஆனால் இதற்காக தமிழக அரசு நடவடிக்கை ஏதேனும் எடுத்ததா? டாஸ்மாக் போராட்டத்துக்கு செவி சாய்த்ததா? வேதனைப்பட வேண்டிய விசயம் இது.

மோனிகா, மென்பொறியாளர்
ஒரு குடும்பத் தலைவருக்கே குடும்பத்தை நிர்வகிப்பதில் பல பொறுப்புகள் இருக்கிறது எனும்போது ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் அரசுக்கு எப்படிப்பட்ட பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அது இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கவிருக்கிறோம். நீர் மேலாண்மை பற்றிய எந்தத் தெளிவும் இல்லாமல் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் போட்டு மூடுமளவுக்குதான் நம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நாம் மத்திய அரசை எதிர்பார்க்கவோ/குற்றம் சாட்டவோ முடியாது. மாநில நிர்வாகத்தைப் பொறுத்த வரை மத்திய அரசை விட மாநில அரசின் பங்குதான் அதிகம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

டாலி, தனியார் நிறுவன ஊழியர்
சுதந்திரத்துக்கு முன்பு எப்படி நமக்கு போராட்டமே வாழ்க்கையாக இருந்ததோ, அதே போல்தான் இன்றைக்கும் எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களின் நலனை சுத்தமாக மறந்து விட்ட அரசாக இருக்கிறது. இப்படியே போனால் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்தான் வாழ்வார்களே தவிர பொதுமக்கள் எல்லாவற்றுக்கும் அல்லல்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.

மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது. இச்சூழ்நிலையில் நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மாநில அரசு செயல்பாடே இன்றிக் கிடக்கிறது. அதனால் நாமும் வலுவிழந்து நிற்கிறோம். அவர்கள் மாற வேண்டும் அல்லது ஆட்சி மாற்றம் வேண்டும்.

சித்திகா, மென்பொறியாளர்
தற்போதைய முதல்வரிடம் முதலமைச்சருக்கான ஆளுமை இருக்கிறதா என்றே தெரியவில்லை. விவசாயம், தொழில் துறை ஆகியவற்றுக்கான முன்னேற்றம் குறித்து என்னவெல்லாம் செயல்திட்டங்கள் வைத்திருக்கிறார் என மக்களுக்கு எதுவுமே தெரியாது. உதாரணத்துக்கு ஆந்திராவை எடுத்துக் கொள்வோமே... அந்நிய தொழில் முதலீடுகள், தொழில் நுட்பத்துறை முன்னேற்றம் என வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறது அவ்வரசு.

தற்போது விப்ரோ, சி.டி.எஸ் ஐடி நிறுவனங்கள் திறமையில்லாதவர்கள் எனக்கூறி பலரை பணி நீக்கம் செய்யவிருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் இப்படி செய்ய முன் வந்தால் வேலையில்லா  திண்டாட்டம் பெருகி விடும். பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும்.

வெண்பா கீதாயன், கல்லூரி மாணவி
நம் மாநிலத்தின் இப்போதைய அரசியல் சூழலில் முதல்வர் பதவியிலேயே எப்போது மாற்றம் வரும்? எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கின்றது? பிரிந்த அதிமுக ஒன்று சேர்ந்ததா? - இப்படி கட்சி சார்ந்தே மக்கள் பல கேள்வி களை எழுப்புகின்றனர். மாநில அரசும் தங்களது கட்சி அரசியலில் அதிக கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது.

கூவத்தூர் ரிஸார்ட் சம்பவத்திற்குப் பிறகு மக்கள் அரசின் மீதுள்ள நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர். இருப்பினும் அரசு அவ்வப்போது தங்களது இணையதளத்தில் மக்களுக்கு சேவை செய்கிறோமென கண் துடைப்பிற்காக சில திட்டங்களை முன்னிறுத்தி தகவல்கள் வெளியிடுகின்றது. உண்மையில் மக்களின் தேவை என்ன? ஒவ்வொரு தொகுதியிலும் எந்த அளவிற்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் இல்லை.