உடல் தானம் பண்ணியிருக்கேன்! - நந்திதா



கி.ச.திலீபன்

சரளமாகவே தமிழ் பேசுகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா. மைசூரைச் சொந்த ஊராகக் கொண்ட கன்னடப் பெண். தமிழில் நாயகியாக அறிமுகமாகி இரண்டு படங்கள் நடித்ததற்குப் பிறகே தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். தமிழில் அறிமுகமான படம் ‘அட்டக்கத்தி’ என்றாலும் இவருக்கு ப்ரேக் கொடுத்த படம் என்றால் அது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’தான். நாயகன் விஜய் சேதுபதி கொடுக்கும் லவ் டார்ச்சரில் கொதித்துப் போய் வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன்கள் எல்லாம் ஆவ்சம் வகையறா. நந்திதாவிடம் பேசினேன்...

‘‘கர்நாடக மாநிலம் மைசூர்தான் என் சொந்த ஊர். அப்பாவுக்கு சொந்தமா நிலம் இருக்கு. அதைக் குத்தகைக்கு விட்டிருக்கார். எனக்கு இரண்டு தம்பிகள் இருக்காங்க. என் குடும்பம்தான் என் உலகம். என்னோட எல்லா முயற்சிகளுக்கும் எப்பவுமே என் குடும்பத்தார் ஒத்துழைப்பா இருந்திருக்காங்க. எதுல இறங்கினாலும் அதை சிறப்பா பண்ணணும்கிறதுதான் என்னோட எண்ணம்.

படிப்புல நான் ஸ்கூல் டாப்பரா வந்திருக்கேன். ஆனா எந்நேரமும் புத்தகமும் கையுமாவே இருக்க மாட்டேன். படிக்கிற போதே பேட்மிண்டன், த்ரோ பால், நடனம்னு மத்ததுலயும் பங்களிச்சு பல பரிசுகள் வாங்கியிருக்கேன். பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இப்போதான் எம்.பி.ஏ படிச்சு முடிச்சிருக்கேன். அடுத்ததா பி.எச்டி பண்ணலாம்னு இருக்கேன்’’ என்று சுருக்கமாக அறிமுகம் கொடுத்தவரிடம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது குறித்து கேட்டேன்...

‘‘கன்னடப் படமான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’தான் என்னோட முதல் படம். ஸ்கூல் படிக்கிறப்போ நான் நிறைய நடனப் போட்டிகள்ல கலந்துக்குவேன். அப்படியா ஒரு நடனப் போட்டியில் என்னைப் பார்த்துதான் நாயகியா தேர்வு செஞ்சாங்க. அந்தப் படத்துல நான் நடிச்சப்புறம்தான் ‘அட்டக்கத்தி’ வாய்ப்பு வந்தது. அட்டக்தியில என்னோட நடிப்பு பாராட்டுகளை வாங்கித் தந்தது. ‘அட்டக்கத்தி’ வெளிவந்தப்புறம் தொடர்ச்சியா தமிழ் படங்கள்ல நிறைய வாய்ப்புகள் வந்ததால தமிழில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.’’

தமிழ் எப்ப கத்துக்கிட்டீங்க?
‘‘அட்டக்கத்தி படத்துல நடிக்கும்தெல்லாம் எனக்கு தமிழ் சுத்தமா தெரியாது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பண்ணும்போதுதான் தமிழ் பேசவே ஆரம்பிச்சேன்.’’

நடிப்பதற்கான தகுதிகளாக நீங்க எதை நினைக்குறீங்க?
‘‘நடிகையாகுறதுக்கு அழகும் தேவைதான். ஆனா அது மட்டும் போதாது. எல்லோருக்கும் நடிப்பு வந்துடாது. நடிப்புங்கிறது ஒரு கலை. முதல் பட வாய்ப்பு வந்தப்ப நான் 11ம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். அப்ப நான் அந்த வாய்ப்பை ரொம்ப சீரியஸா எடுத்துக்கல. படம் வெளியானதுக்கப்புறம் பார்வையாளர்கள் அதைப் பார்த்துக் கொண்டாடுறதைப் பார்த்ததும்தான் அதோட சீரியஸ்னெஸ் எனக்குப் புரிஞ்சுது.

அதுக்கப்புறம்தான் நான் நடிப்பில் தீவிரமா இறங்கலாம்னு முடிவு பண்ணேன். நாடகக் குழுக்கள்கிட்ட போய் நடிப்புப் பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்தே நடனத்து மேல ஈடுபாடு இருந்ததால எனக்கு நடனம் ரொம்ப சுலபமா இருக்கு. நடிகையான பிறகு பணம், புகழ், ரசிகர்கள் எல்லோரும் கிடைப்பாங்க. ஆனா அதுக்கு நேர்மையா நாம நல்ல நடிப்பை வெளிப்படுத்தணும்’’

இது வரைக்கும் மினி பட்ஜெட் படங்களில்தான் நடிச்சிருக்கீங்க. மினி பட்ஜெட் படங்களின் நாயகிங்கிற அடையாளம் உங்களுக்கு இருக்கே அதப்பத்தி என்ன நினைக்குறீங்க?
‘‘உண்மைதான். எனக்கேத்த கதாபாத்திரம் கிடைக்கும்போது சின்ன பட்ஜெட்டா? பெரிய பட்ஜெட்டான்னெல்லாம் பார்க்க மாட்டேன். இது நாள் வரைக்கும் அப்படித்தான் சில படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா இப்ப நான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ , ‘வணங்காமுடி’ அப்புறம் இன்னும் தலைப்பு வைக்காத சில படங்கள்ல நடிச்சிருக்கேன். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவன் சார் படம். ‘வணங்காமுடி’ படத்துல அரவிந்த்சாமி சார் ஹீரோவா பண்றார். இந்தப் படங்கள் வெளியானதும் அந்த அடையாளம் மாறும்.’’

உங்க நடிப்புக்கான ஸ்கோப் கிடைத்த படம்னு நீங்க நினைக்கிறது?
‘‘அப்படி எதையும் நான் பிரிச்சு பார்க்கலை. நான் நடிச்ச எல்லா படங்கள்லயும் எனக்கான ஸ்கோப் இருந்ததுன்னுதான் சொல்வேன். குறிப்பிட்டுச் சொல்லனும்னா செல்வராகவன் சார் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை சொல்வேன். அந்தப் படம் வெளிவந்தப்புறம் என்னோட நடிப்பு பேசப்படும்னு நம்புறேன். செல்வராகவன் சார் படத்துல நடிச்சது நல்ல அனுபவமா இருந்தது. அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். நல்ல இயக்குனர்கிட்ட வேலை செஞ்ச மன நிறைவு கிடைச்சுது.’’

உங்க ஃபிட்னெஸ் பத்தி சொல்லுங்க...
‘‘இதை சாப்பிடலாம், இதை சாப்பிடக்கூடாதுன்னெல்லாம் நான் பிரிச்சுப் பார்க்குறதே கிடையாது. எதைச் சாப்பிட்டாலும் அளவோட சாப்பிடணும்கிறதுதான் என் டயட். எவ்வளவு சாப்பிடுறமோ அவ்வளவு கலோரியை எரிக்குற அளவுக்கு வொர்க் அவுட் பண்றது அவசியம். நான் தினமும் இரண்டரை மணி நேரம் வொர்க் அவுட் பண்றேன்.’’

உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கிற பெண் யார்? ஏன்?
‘‘எங்க பாட்டிதான் என்னோட பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்க பிறந்தப்ப அவங்களோட அம்மா இறந்துட்டாங்க. அப்படியான சூழல்ல வளர்ந்து வந்து கல்யாணம் பண்ணி 8 குழந்தைகள் பெத்தெடுத்தாங்க. பல கஷ்டங்களை தாண்டி 8 பேரையும் வளர்த்து ஆளாக்கினாங்க. இறந்து போனதுக்கப்புறமும் தன்னோட உடல் யாருக்காச்சும் பயன்படணும்னு உடல் தானம் பண்ணினாங்க. எங்க பாட்டி மாதிரியே நானும் என் குடும்பத்திலுள்ள எல்லோரும் உடல் தானம் பண்ணியிருக்கோம்.’’

நடிப்பை தாண்டி உங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கு?
‘‘சண்டைக் காட்சிகளில் எனக்கு ஆர்வம் அதிகம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘வணங்காமுடி’ படங்கள்ல சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். தெலுங்குல ‘எக்கடத்தி போத்தாவு சின்ன வாடா’ படத்துலயும் எனக்கு சண்டைக் காட்சிகள் இருக்கு.’’

அடுத்த கட்டப் பணிகள் என்ன?
‘‘தமிழில் சில படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். ‘எக்கடத்தி போத்தாவு சின்னவாடா’ படத்தை ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தமிழ் ரீமேக்ல நடிக்கக் கேட்டிருக்காங்க. ‘சதுரங்க வேட்டை’ படத்தோட தெலுங்கு ரீமேக்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்படியா மன நிறைவா என்னோட வேலைகள் போய்க்கிட்டிருக்கு.’’

உங்க இலக்குன்னு எதையாவது சொல்லலாமா?
‘‘இலக்குங்கிறதை யாராலயும் அடைய முடியாது. ஏன்னா உயரம் போகப் போக இலக்கு மாறிக்கிட்டே இருக்கும். மனம் எதிலும் திருப்தியடையாது. எங்கேயும் தேங்கி நிற்காம அடுத்த கட்டத்தை நோக்கி போய்க்கிட்டே இருக்கும். அந்தப் போராட்டம் சாகுற வரைக்கும் இருக்கும். அதனால இலக்குன்னு நான் எதையும் வெச்சுக்கல. எடுத்துக்கிட்ட வேலையை சிறப்பா பண்ணணும் அவ்வளவுதான். நான் சிறப்பா பண்ணிக்கிட்டிருக்கேன்.’’