அன்பின் புகலிடம்



தென்றல் சிவக்குமார்

வண்ணதாசன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது என்ற செய்தியை எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார் என் அம்மா. நான் அவரது வாசகியான என் தோழிக்குப் பேசினேன். அவள் தன் சகோதரிக்குச் சொன்னாள்.  இதுதான் வண்ணதாசன் படைப்புகளின் அடிநாதம். எளிமையான மனிதர்களின் இயல்பான உணர்வுகளைக் கோர்த்துச் செய்யும் கவிதைகள், சிறுகதைகள், கடிதங்கள். அவரது சிறுகதையை வாசித்து முடித்து நிமிர்கையில் எதிர்ப்படும் முதல் நபராயிருத்தல் கொடுப்பினை, முற்றிலும் அன்பாலான புன்னகை கிடைக்கும்.

சாலையைக் கடக்கும் பிள்ளைகளைப் பார்வையால் பின்தொடர்ந்து பத்திரம் என்று மானசீகமாய்ச் சொல்லும்; வாழ்வின் ஏதோ ஒரு களத்தில், மிகக் கடுமையான ஒரு சொல்லைச் சொல்ல எத்தனிக்கையில், உள்மனத்திலிருந்து ஆட்சேபிக்கும்; குணம் சறுக்கி, சற்றே கோணிவிட்ட மனங்களுக்கும் நல்வாழ்த்து சொல்லும் எல்லாக் குரல்களையும் வண்ணதாசனின் கதாபாத்திரங்கள் ஒலிக்கின்றன. அது போலவே, அத்தகைய குரலை நம்மிடமிருந்தும் ஒலிக்கச் செய்கின்றன.

ஒடிந்த முருங்கைக்காயின் பச்சை வாசம், பயணிக்கும் மரவட்டை, குழந்தை வீட்டுக்குள் சென்றுவிட்டதால் வெளியில் தனித்து நிற்கும் பொம்மை சைக்கிள்... இவையெல்லாமும் லோகு மதினி, கபாலியா பிள்ளை, தினகரியைப் போலவே வாசகருடன் தனித்த மொழியில் உரையாடும். கிளையில் அமரும் குருவியால் அடர்நிழலின் மத்தியில் மெல்லத் தோன்றி மறையும் வெயில் ஒளி போன்ற அவருடைய எழுத்துக்கள். நிழல் நிரந்தரம் எனினும் ஒளி நேரம் செய்யும் காட்சி விளக்கம் வாழ்வின் அழகு.

வேருக்கொரு தீண்டல், பூவுக்கொரு தீண்டல் என்றில்லாமல் மரம் முழுமைக்குமான மென் தீண்டல் மேல் நம்பிக்கை கொள்ளச் செய்யும் அற்புதமான வாசிப்பனுபவங்கள் வண்ணதாசன் சிறுகதைகள்.ஓடிக்கொண்டேயிருக்கும் காலமும், வயது தரும் அனுபவங்களும் தன்னை மேலும் கனியச் செய்து மனிதர்களின் சகல குணங்களையும் ஒன்று போல் தழுவிக் கொள்ளச் செய்வதைப் பற்றித் தன்னுடைய  “நாபிக் கமலம்” சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்...

“இலை வற்றி, இலை பழுத்து நிற்கையில் சற்று உள்பக்கம் சுருண்டு, அதன் பின்பக்கம் தெரிவதில்லையா, அப்படி.” சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடலில், தன் நண்பரொருவர் வண்ணதாசன் கதைகளை வாசித்தபின் தன் மனைவியுடனான காதலை மீட்டெடுத்ததைப் பகிர்ந்தார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.

அதே நிகழ்வில், தன் அம்மா தினமும் பறிக்கும் பூக்களை அவருக்கு முடியாத அன்று அதே கிண்ணத்தில் தான் சேகரித்ததாகச் சொன்னார் இன்னொருவர். என்னைப் பொறுத்த அளவில் இரண்டும் ஒன்றுதான், அன்பின் வெற்றி. சாகித்ய அகாடமி விருது என்றவுடன் எனக்குத் தோன்றியது இதுதான் “விருதுக்கும் தேவைப்படும்தானே பெரும் பேரன்பின் உள்ளங்கைச் சிறுவெப்பம்?” இன்னும் பல விருதுகளுக்கும் இந்தப் பேறு சித்திக்கட்டும்.

படம் : சதீஷ்