வளர்த்த கரங்கள்
வாசகர் பகுதி
பல விழாக்களுக்கும், விருந்துகளுக்கும் போய் வருகிறோம். ஆனால் சில விழாக்கள் மகிழ்வும், நெகிழ்வும் தந்து நெஞ்சத்தில் நிரந்தரமாக தங்கி விடும்; பாடம் சொல்லித் தரும்; பாசம் சொல்லித் தரும்; வாழ்க்கையின் பொருளை சொல்லித் தரும். அத்தகைய அழகான விழாவிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். 90 வயதான எங்கள் உறவினரின் பிறந்த நாள் விழா அது. ‘காடு வா வா, வீடு போ போ’ எனும் காலகட்டத்தில் ‘பிறந்த நாளா’ எனக்கூட சிலர் யோசிக்கலாம். அது வெறும் கேக் வெட்டி கைதட்டும் விழா அல்ல. காலம் முழுவதும் நம்மைக் கொண்டாடும் அன்னையை, அவர் நேசித்த மனிதர்கள், அவர் வாழும் காலத்திலேயே வணங்கும். அவர் நூற்றாண்டு வாழ வாழ்த்தும், தம் நன்றியையும் மகிழ்வையும் கூறும். அவரை கௌரவப்படுத்தும் விழா.
அம்மாவுக்கு ‘பிறந்த நாள்’ என அவர் பெண் கீதாதான் ஃபோனில் அழைத்தாள். ‘அதிகம் பேரில்லை. முக்கியப்பட்ட உறவுகளும், உறவு போன்ற நண்பர்களுமாய் ஒரு விழா’ என்றாள். 50, 60 பேர் அமரக்கூடிய ஹாலில் விழா, மாலை போட்டால் தாங்கிக் கொள்வாரா, கூச்சப்பட்டு ஒதுக்கிவிடுவாரா என்ற தயக்கத்தில் என் கணவரும், நானும் உயர்தர பருத்திப் புடவையும், பழங்களையுமே கொண்டு சென்றிருந்தோம். பாட்டியின் பேரன் பேத்திகளும், கொள்ளுப் பேரன் பேத்திகளும்தான் விழா ஏற்பாட்டாளர்கள்.
கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணப் புகைப்படங்கள் வரை அவர் வாழ்க்கைத் தடங்களில் மேற்கொண்ட பயணங்களில் பங்கு கொண்ட விழாக்களில் பல்வேறு சமயங்களில் எடுக்கப்பட்ட பல தரப்பட்ட புகைப்படங்கள் ‘90’ என்ற எண்ணின் வடிவத்தில் விழா மேடையின் மேல் அழகுற ஒட்டப்பட்டிருந்தது. இன்று விழா ஏற்பாட்டாளர்களான யுவன், யுவதிகள் தளிர்களாய் அந்தப் புகைப்படங்களில் அவர் கரங்களில் மின்னினர். ‘தன் அப்பா, அம்மாவை குட்டியாய், குழந்தையாய் பாட்டியின் கரங்களில் பார்த்த பேரன்களின் சிரிப்பும், கேலியும், குதூகலமும் தனிக் கதை.
பெண்கள், பிள்ளை, மருமகள், மருமகன்கள், சம்பந்திகள், சகோதரிகள், எக்ஸ்டெண்டட் குடும்பங்கள், பேரன், பேத்திகள் என எங்கள் சித்தி ஓர் ஆலமரம். அதனால் ஒரு பெரிய கேக் ஏற்பாடு செய்திருந்தார்கள். மெல்லிய பட்டுடுத்தி பிறர் சூழ, மேடை ஏறிய சித்தி கேக் வெட்ட, பேரன்களின் உபயத்தில் கலர், ஜிகினா காகிதங்கள் டாப்பரிலிருந்து பறக்க, தகதகப்பில் சித்தி ஜொலித்தது கண்கொள்ளாக்காட்சி. ‘என் பார்வையில் அவர்’ என்ற தலைப்பில் வந்திருந்த பல உறவினர்களும் அவரவர் கோணத்திலிருந்து சித்தியோடு மகிழ்ந்த தருணங்களை நினைவுகூர்ந்தார்கள்.
அந்த அன்பு விழாவில் தான் நேசித்த சொந்தங்களை நேரில் பார்த்த சந்தோஷம் அவர் முகத்தில் கூத்தாடியது. ஐஸ் கிரீமையும், அறுசுவை உணவையும் நாங்கள்தான் ஒரு வெட்டு வெட்டினோம். பணமோ, பட்டோ, நகை நட்டோ, பொருளற்றுப் போன வயதில் அவருக்கு மகிழ்வு தந்தது, அவர் நேசிக்கும் சொந்தங்களின் பரிவும், பாசமும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுகளும்தான். எனக்கு தனிப்பட்ட முறையில், தன் தாயாருக்கு இப்படியொரு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றும் அவரை, அவர் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் பெற்ற செல்வங்கள் நினைத்தது நெகிழ்ச்சியைத் தந்தது.
காலம் காலமாக தன் குழந்தைகளின் பின், அவர்கள் குழந்தைகளின் பிறந்த நாள், மண நாள் என எல்லாவற்றையும் நினைவில் வைத்து வாழ்த்து கூறும் எத்தனை அம்மாக்கள் தன் பிறந்த நாளை நினைவில் வைத்திருக்கின்றனர்? கொண்டாடுகின்றனர்? ஞாபகம் வந்தாலும் கூட. ‘அது கிடக்கு’ என அலட்சியப்படுத்துதல்தான் அதிகம். வயதானவர்களை தற்காலத்தில் ‘லக்கேஜ்’ என்ற குறியீட்டு மொழியால் குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் சாதித்த செயல்களும், செய்த பணிகளும், உழைப்பும், தியாகங்களும் மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் அடைக்கப்படுகிறார்கள். அடைக்கலமாகிறார்கள். அவர்களைப் பற்றிய நல்ல வார்த்தைகளை அவர்கள் மறைந்தாலன்றி ேகட்க முடியாது. இப்படியொரு சமுதாயச் சூழலில் தம் அன்னையை கொண்டாடிய பிள்ளைகள் பாட்டியைக் கொண்டாடிய பேரன், பேத்திகள், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு விழா எடுத்த குடும்பத்தினர், நம் சமுதாயத்திற்கு பாடம் கற்பித்ததாகவே உணர்ந்தேன். இம்மாதிரி விழாக்கள் ஒரு சமூக விழிப்புணர்வுச் செயல்தான். முதியோரை ஆராதிக்கும் விழாக்கள், இன்றைய சூழலில் மிக மிக அவசியமானது.
- மல்லிகா குரு, சென்னை - 600 033.
(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)
|