விண்ணைத் தாண்டிய சாதனை



2 வருடங்களுக்கு முன்பு நமது விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பினார்கள். இதனைக் கொண்டாடும் விதமாக பெங்களூரில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) எடுக்கப்பட்ட பெண்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. பிறகு அது அங்கு நிர்வாகத்துறையில் பணியாற்றும் பெண்கள் என இஸ்ரோ விளக்கமளித்தது. செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட சமயத்தில் பல பெண் விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர். அவர்களை பேட்டி எடுத்திருக்கிறார் பிபிசியைச் சேர்ந்த கீதா பாண்டே. அந்தப் பேட்டியிலிருந்து...

ரிது காரிதால், Deputy Operation Director, Mars Orbiter Mission

வட இந்தியாவிலுள்ள லக்னோவில் வளர்ந்தவர் ரிது காரிதால். இளம் வயதிலேயே நிலவின் வளர்ச்சிக் குறித்துத் தெரிந்து கொள்ளும் விருப்பம் இருந்தது இவருக்கு. நிலா ஏன் தேய்கிறது, மறுபடி ஏன் வளர்கிறது என பல கேள்விகளும் இவர் மனதில் இருந்தன. அந்த இருண்ட வானத்தின் பின்னணி என்ன என தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார் ரிது.
 
இந்த விருப்பத்துடன் இயற்பியல் மற்றும் கணிதத்திலும் ஆர்வம் இருந்ததன் காரணமாக அறிவியல் மாணவியாக சேர்ந்தார் ரிது. பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நாஸா மற்றும் இஸ்ரோ திட்டங்கள் குறித்து வரும் ஒவ்வொரு செய்தியையும் நாளிதழ்களிலிருந்து கத்தரித்து வைத்துக்கொள்வார். வானவியல் குறித்து வரும் ஒவ்வொரு செய்தியையும் விடாமல் படித்துவிடுவார்.
 
“முதுநிலை அறிவியல் முடித்தவுடன் இஸ்ரோவிற்கு வேலைக்காக மனு அனுப்பினேன். பிறகு அங்கு வேலைக்குச் சேர்ந்தேன்.” 18 ஆண்டுகளாக அங்கே பணிபுரிகிறார். பல ப்ராஜெக்ட்டுகளில் ஈடுபட்டிருந்தாலும் செவ்வாய் கிரகத்துக்கு இவர்கள் அனுப்பிய செயற்கைக்கோள் இவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. “2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய இந்த ப்ராஜெக்ட் முடிய 18 மாதங்கள் ஆனது. 18 மாதங்கள் என்பது குறைந்த காலகட்டம் தான். அதற்குள் பெரிய ப்ராஜெக்ட்டை முடிக்க வேண்டி இருந்தது.

கிரகங்களுக்கான பயணத்திற்கு இந்தியா கொஞ்சம் புதுசு. அதனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் நிறைய செய்ய வேண்டி இருந்தது. பெண்கள் இந்த முயற்சியில் உடனிருந்தபோதும் இந்த வெற்றிக்குக் காரணம் டீம் ஒர்க் தான். எந்நேரமும் இன்ஜினியர்களுடன் அமர்ந்து வேலை பார்ப்போம். மூளைக்கு அழுத்தம் அளிக்கும் வகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தோம்.

வார இறுதி நாட்களிலும் வேலை பார்த்தோம். குடும்பத்தையும் வேலையையும் பேலன்ஸ் செய்வது ரொம்ப கடினம்தான், ஆனால் எனக்குத் தேவையான ஒத்துழைப்பு என் கணவர் மற்றும் என் குழந்தைகளிடம் கிடைத்தது. அந்த சமயத்தில் என் மகனுக்கு 11 வயது. மகளுக்கு 5 வயது. நேரமில்லாமல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைமை. பொதுவாக ஆண்கள் மார்ஸில் இருந்தும் பெண்கள் வீனஸில் இருந்தும் வந்ததாகச் சொல்லுவார்கள்.

ஆனால் இந்த மார்ஸ் மிஷனுக்குப் பின்னால் சந்தேகமில்லாமல் பல பெண் விஞ்ஞானிகளின் உழைப்பும் இருந்தது. அதனால் இனி பெண்கள் மார்ஸில் இருந்து வந்தோம் எனச் சொல்லிக்கொள்ளலாம். நான் இந்த பூமியின் மகள். ஒரு சாதாரண இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு இது. மார்ஸ் மிஷன் மிகப்பெரிய சாதனை. ஆனால் நாங்கள் இன்னும் அதிகம் செய்ய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் பலன் சேர்க்கும் இன்னும் பல விஷயங்களை மேலும் இந்த நாடு எங்களிடம் எதிர்நோக்குகிறது” என்கிறார்

நந்தினி ஹரிநாத் Deputy Operation Director, Mars Orbiter Mission

“என் அம்மா கணக்கு ஆசிரியை, அப்பா இன்ஜினியர். எனக்கு இயற்பியல் பிடிக்கும். எனவே எங்கள் எல்லாருக்கும் தொடர்பாக அறிவியல் இருந்தது. அதன் மீது இருந்த இயல்பான ஆர்வத்தின் காரணமாக நாங்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து ஆர்வமாக அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை டிவியில் பார்ப்போம். அந்த நேரங்களில் இஸ்ரோவிற்கு வேலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்துவிட்டது.
 
நான் மனு செய்த முதல் வேலை இது. கிடைத்தது. தற்போது இருபது வருடங்கள் ஆகிவிட்டன. மார்ஸ் மிஷன் தான் முக்கியத் திருப்பம். இது இஸ்ரோவிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மிக முக்கியம். இது நம்நாட்டிற்கு நல்லதொரு கௌரவத்தைப் பெற்றுத் தந்தது. பிற நாடுகளின் முக்கிய கவனத்தை நம் பக்கம் திருப்பியது, இந்த தகுதியை நமக்களித்தது மார்ஸ் மிஷன்.
 
முதன் முறையாக இஸ்ரோவின் உள்ளே என்ன நடக்கிறது எனப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாங்கள் வலைத்தளத்திற்குள் வந்தோம். வலைத்தளத்தில் எங்களுக்கென ஒரு பக்கத்தை உருவாக்கினோம். அதை உலக மக்கள் கவனித்தனர். எங்கள் சாதனையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு மிக கௌரவமாகவும் பெருமகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்போது மக்களின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த சந்தோஷத்தை நான் அனுபவிக்கிறேன்.

மங்கல்யானின் புகைப்படத்தை 2000 ரூபாய் தாளில் பார்த்த போது மகத்தான பெருமையாகவும் த்ரில்லிங்காகவும் இருந்தது. மார்ஸ் மிஷன் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. வேலைநாட்களும் அதிகம். ஆரம்பத்தில் தினமும் 10 மணி நேரம் வேலைப் பார்த்தோம். செயற்கைக் கோள் ஏவப்படும் நாள் நெருங்க நெருங்க தினமும் 12ல் இருந்து 14 மணி நேரம் வரை வேலைப் பார்க்க ஆரம்பித்தோம்.

அந்த சமயத்தில் எனக்கு வீட்டுக்குப் போனோமா என்றே ஞாபகம் இல்லை. காலையில் வருவோம். இரவும் பகலுமாக வேலை பார்ப்போம். மறுநாள் மதியம் வீட்டிற்குப் போய் சாப்பிடுவோம். சிறிது நேரத்திற்குப் பிறகு மறுபடி வேலைக்குச் செல்வோம். முக்கியமான மிஷனில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய தேவை இருந்தது.

நிறைய தூக்கமில்லாத இரவுகளை சந்தித்தோம். இந்தப் பணியில் ஏற்பட்ட பல்வேறு சங்கடங்களை, பிரச்னைகளை முறியடித்தோம். பிரச்னைகள் அதற்கான தீர்வுகளுடன் வந்தன. பிரச்னைகளில் இருந்து சில விஷயங்களை கண்டுபிடிக்கவும் முடிந்தது” என்கிறார். இதில் கடினமான ஒரு விஷயம் என்னவென்றால் இவருடைய மகளின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வுகளும் மிஷனின் முக்கியக் கட்டத்தில் நடந்தது.
 
“அந்த நான்கு மாதங்களும் வீட்டிலும் பணி இடத்திலும் எப்போதும் வேலை. அந்த சமயங்களில் 4 மணிக்கு எழுந்து என் மகள் படிக்கும் தருணங்களில் உதவியாக இருப்பேன். இப்போது நினைத்தாலும் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது அந்தத் தருணம். ஆனால் அந்தத் தேர்வில் என் மகள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள். கணக்கில் 100 மதிப்பெண்கள். இப்போது அவள் மருத்துவக் கல்லூரி மாணவி. அந்த உழைப்பிற்கான பலனும் கிடைத்துவிட்டது.
 
மார்ஸ் மிஷன் ஒரு பெரிய சாதனை, ஆனால் அது முடிந்து விட்டது. இனி நாங்கள் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். அதைவிடப் பெரிதாகச் சாதிப்பது பற்றி யோசிக்க வேண்டும். நமது அண்டை உலகம் ஆராய்ச்சிக்காகக் காத்துக்கிடக்கிறது. பல கோள்கள் இருக்கின்றன. அவை வெளிவருவதற்கான நேரம் இது.”
 
அனுராதா GioSat Programme Director, ISRO Satellite Centre

தனது ஒன்பது வயதில் உருவான கனவை நிறைவேற்றி இஸ்ரோவில் நுழைந்தார். 34 வருடங்களாக இஸ்ரோவில் பணியாற்றும் மூத்த அதிகாரி இவர். வானம் தான் எல்லை இவருக்கு. உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து கொண்டு 36,000 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் செயற்கைக்கோளுக்கு தகவல் அனுப்புகிறார். “நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் பதித்த தருணத்தின்போது தொலைக்காட்சி எல்லாம் கிடையாது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சொல்லித்தான் நான் கேட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை கட்டாயம் கற்பனை செய்துதான் பார்க்க முடியும்.

அப்போதேஅறிவியல் மீது இருந்த விருப்பத்தின் காரணமாக அந்த சமயத்தில் என் தாய்மொழியான கன்னடத்தில் நிலவில் ஒரு மனிதன் கால் வைத்தது குறித்துக் கவிதை ஒன்று எழுதினேன். கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்ய வேண்டிய பாடங்கள் மீது எனக்கு எப்போதும் விருப்பம் இருந்தது இல்லை. ஆனால் இயல்பாகவே எனக்கு அறிவியல் மீது ஈடுபாடு இருந்தது. அதன் உண்மைத் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. பல பெண்கள் அறிவியல் தனக்கானது இல்லை என்று நினைக்கிறார்கள். கணக்கு தான் அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் பெண்கள் அறிவியலின் மீது ஆர்வம் செலுத்த வேண்டும்” என்கிறார். இஸ்ரோவின் மற்ற பெண்கள் இவரை முன்மாதிரிகளாக நினைக்கிறார்கள்.
 

- ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: ஆசிஃப் சௌத்