உடல் மனம் மொழி
ஒரு பெண் அமைதியை விரும்புகிறாள்
-சக்தி ஜோதி
கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த எரின்னா என்பவர் ஒரு கிரேக்கப் பெண் கவிஞர். சாப்போவின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த இவர் கிரேக்கத்தின் டிலோஸ் என்கிற தீவில் வாழ்ந்தவர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த டயோனிசியஸ் என்கிற கவிஞர், “இருளின் நிழற் சிறகுகள் ஒருநாளும் அவள் பெயர் மீது மையிருட்டைச் சேர்க்காது” எனப் பாராட்டியுள்ளார். எரின்னா எழுதிய ஒருசில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பௌஸிஸ் என்கிற அவளுடைய தோழியின் மறைவிற்கான இரங்கற்பா ஒன்று இவரது அடையாளமாக அறிஞர் சி.எம். பௌராவின் மொழியாக்கத்தில் கிடைத்திருக்கிறது.
“இரங்கத்தக்க பெளஸிஸ்! இந்த இரங்கற்பாவைத் துயரப்பெருக்கின் புலம்பலாக அழுது தீர்க்கிறேன். ஒரு காலத்தில் நாம் ஆடிப்பாடி மகிழ்ந்ததெல்லாம் இன்று எரிதழற் சாம்பலாகி விட்டது. கவலை என்பதையே அறியாமல் பொம்மைகளை இளம் மனைவியர்களைப் போல், நாம் சிறுமிகளாக இருந்தபோது அணைத்துக் கொண்டிருந்தோம். பொழுது விடிந்ததும் கம்பளி நெசவு செய்ய வந்த தொழிலாளர்களுக்கு உன் அம்மா கம்பளி கொடுப்பாள். இறைச்சிக்கு உப்பு கொண்டுவர உன்னை அழைப்பாள்.
நமது குறும்புத்தனத்தைக் கண்டு உன் அன்னை, பேய் பூதக் கதைகளைக் கொண்டே பயமுறுத்துவாள். பெரிய காதுகளைக் கொண்ட சின்னஞ்சிறு பேய்கள், நான்கு கால்களுடன் பல தோற்றங்களில் வரும். இந்த கதைகளையெல்லாம், உன் அன்பனுடன் மஞ்சத்தில் சேர்ந்த பிறகு, நீ மறந்திருப்பாய். அப்ரோதிதே உனக்கு இந்த மறதியை அளித்திருப்பாள். உன்னுடைய இறுதிச் சடங்குகளை நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
உனக்குத்தான் தெரியுமே, நான் சவத்தைப் பார்க்கக் கூடாதென்று. என்ன செய்வது? இப்பொழுது, கண்ணீரும் கம்பலையுமாய் வெட்கமின்றி அழுகிறேன்.”
தோழிக்காக எழுதிய இரங்கற்பா எனினும் பெண்களின் வளரிளம்பருவ விளையாட்டுகளும் அந்த நாட்களின் அவர்களின் மகிழ்வும் இந்தப் பாடலின் அடையாளமாகியுள்ளன. எந்தக் காலகட்டத்தில், எந்த நிலத்தில் தோன்றியது என அறியவியலாத மனிதர்களின் பல செயல்பாடுகளில் ஒன்றுதான் பொம்மைகளை உறவுகளாக உருவகப்படுத்தி விளையாடுகிற பெண்களின் மனமும். பெண்களுக்கும் பொம்மைகளுக்கும் இடையே இருக்கிற உணர்வு என்பது ஆண்களாலோ அல்லது வேறு புறச்சூழலினாலோ உருவாக்கப்பட்டதெனக் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் அகமானது வேறுவிதமாகச் செயல்படுகிறது.
தன்னை ஓர் ஆணாகக் கருதி, ஓர் ஆணிடமிருந்து தான் பெற விரும்புகிற அணைப்பை பொம்மைகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எரின்னாவின் இந்தப் பாடலில் உணரமுடிகிறது. “அப்ரோதிதே” என்கிற கிரேக்க காதல்தேவதை இந்தப்பெண்களின் இளம்பருவ விளையாட்டுக்களை காதலர்களுக்கென மடைமாற்றம் செய்கிறாளென எரின்னா நம்புகிறாள்.
மரப்பாச்சிகளாலும் பாவை விளையாட்டுகளாலும் நம்முடைய நிலத்துப் பெண்களும் தங்களுடைய இளம்பிராயத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள். சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்ந்து பேய்மகள் இளவெயினியார் பாடிய புறநானூற்றுப் பாடல்,
“அரி மயிர்த் திரள் முன்கை வால் இழை, மட மங்கையர், வரி மணற் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து தண் பொருநைப் புனல் பாயும் விண் பொருபுகழ், விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப் புடைய அரண் கடந்து, துப்புறுவர் புறம்பெற் றிசினே: புறம் பொற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினி யும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே; இழை பெற்ற பாடி னிக்குக் குரல் புணர்சீர்க் கொளை வல்பாண் மகனும்மே. என ஆங்கு, ஒள்அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.”
மென்மயிர் திரண்ட முன்கைகளையும் தூய அணிகலன்களையும் உடைய இளமங்கையர், மணலால் சிறுவீடு அமைத்து, வண்டல் மண்ணால் பாவை வைத்து, அதற்கு கோட்டுப்பூச்சூடி விளையாடி மகிழ்வர். குளிர்ந்த பொருநை நதியில் பாய்ந்து நீராடி மகிழ்வதற்கு ஏற்ற இடமாக வஞ்சி மாநகரம் விளங்குகிறது. அத்தகைய நிலத்தில் புலவர்கள் பாடுவதற்கு ஏற்ற வெற்றி வேந்தனான மன்னன், பகைவரின் அரணை அழித்து, வலிமையுடன் எதிர்த்த பகைவர்களைப் புறங்காட்டி ஓடுமாறு செய்து வெற்றி பெற்றான்.
அவ்வேந்தனின் வீரத்தைப் பாடிய பாடினிக்கு பல கழஞ்சு எடையளவு கொண்ட பொன்னால் செய்யப்பெற்ற அழகிய அணிகலனானது பரிசாகத் தரப்பட்டது. இசைந்து பாடிய பாணனும் ஒளிவீசும் நெருப்பில் இட்டுச்சேர்த்து, வெள்ளிக்கம்பியால் தொடுக்கப்பட்ட பொற்றாமரை மாலையினை பரிசாகப்பெற்றான். ‘தண் பொருநை’ என்கிற ஆறு வஞ்சிநகரில் கருவூரைச் சார்ந்து செல்வது. இவ்வாற்றாங்கரை மணலில் மகளிர் பாவை செய்து விளையாடினர். பாவைக்குச் சூட்டுதற்காகப் பூவும் கொய்தனர்.
நீரிலாடினர். மணல் மட்டுமன்றி பலவகைப் பொருட்களினாலும் மகளிர் பாவை செய்து விளையாடுவர். இளமகளிர் தங்களுக்கான விளையாட்டுகளில் மகிழ்ந்திருக்கும் படியான வாழ்வியல் சூழலை இந்தச் சேர மன்னனின் ஆட்சி வழங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் அரண் வலிமையுடையதாக இருக்க அந்த நாட்டின் மக்கள் மகிழ்வுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த அரசன் எதிரி நாட்டினை புறமுதுகிட்டு ஓடச் செய்திருக்கிறான். எதிரி நாட்டின் அரணை அழித்திருக்கிறான்.
இவனைப் புகழ்ந்து பாடிய பாடினிக்கும் பாணனுக்கும் இந்த மன்னன் வழங்கியிருக்கும் பரிசில்களின் மூலம் இவனது நாட்டின் வளமையை உணரலாம். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நாட்டின் சூழல் பாதுகாப்பையும் மகிழ்வையும் தருவதாக அமைந்திருக்கிறது என்பதையே இந்தப் பாடலின் மூலமாக அறியமுடிகிறது. போரின் நிழல் படியாத வலிமைமிக்க நாட்டின் மக்களுக்கும் போர்ச்சூழலின் பிடியில் சிக்கியிருக்கும் நாட்டின் மக்களுக்குமிடையே இட்டு நிரப்பவியலாத மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.
தன்னுடைய நாட்டின் அரணைக் காக்க இயலாமல் புறமுதுகிடுகிற நாட்டின் மக்கள் தங்களுடைய மகிழ்வை இழந்தவராவார். அந்த நாட்டின் குழந்தைகள் தங்கள் விளையாட்டினை இழந்திருப்பார்கள். பெண்கள் கண்ணீருக்கு மட்டுமே உரியவராவார். மீட்கவியலாத கடந்தகாலத்தின் நினைவில் துயருற்றிருப்பர். போர் என்பது எந்தக் காரணத்திற்காக நிகழ்த்தப்பட்டாலும் அதில் நெறிமுறை அல்லது ஒரு நீதியான நிகழ்வு என்பதே கிடையாது. போர் என்பது தர்மம் இல்லை. போர் தர்மம் என்று எதாவது இருப்பதாகச் சொல்வதெல்லாம் அதர்மம்தான்.
எனவே எந்த தர்மமும் போர்தர்மம் ஆகாது. எவ்வகையான நிலைபாட்டிலும் போர் என்பதை நியாயப்படுத்த இயலாது. ஏனெனில் போரில் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற, பலவீனர்களாகப் பிரதானப்படுத்தப்படுகிற பெண்களும் குழந்தைகளும்தான் போரின் விளைவுகளினால் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். போரை அல்லது போர்க்கால துரோகத்தை அல்லது உள்நாட்டுக் கலவரங்களை மையமாகக் கொண்டு உலகம் முழுக்க திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்தனை திரைப்படங்களுமே போரினால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் மற்றும் பெண்களை சிறிதளவேனும் அடையாளம் காட்டுவதற்கு முயலுகின்றன.
‘அமெரிக்கன் ஸ்நைப்பர்’ (American Sniper) என்கிற திரைப்படத்தில் அமெரிக்கப் படைவீரர்களின் மீது எறிவதற்காக கையாலே எறியப்படும் வெடிகுண்டு ஒன்றினை தன்னுடைய ஏழு அல்லது எட்டு வயது மகனிடம் கொடுத்து அனுப்புவாள் ஈராக் தேசத்தின் ஓர் அம்மா. அந்தச் சிறுவனும் அவனது அம்மாவும் அடுத்தடுத்த கணங்களில் ஒரு மறைதாக்குதலில் பலியாவார்கள். அவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்களோ அதனை நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது.
அந்தத் தாயையும் குழந்தையையும் கையெறி குண்டினைக் கையிலெடுக்கச் செய்தது எதுவாக இருக்க முடியும்? தன்னுடைய நாட்டின் சமன் கலைக்கப்படும்பொழுது, தன்னுடைய நாட்டின் அரண் சிதைக்கப்படும்பொழுது குழந்தைகளும் பெண்களும் யுத்தங்களில் பங்கெடுக்கிறார்கள். போர் என்து ஆண்களுக்கானது. நாட்டைப் பிடிக்க போர் செய்வது ஆணின் விருப்பமாக இருக்கிறது. நாடுபிடிக்கவோ, எல்லைகளை விஸ்தீரணப்படுத்தவோ ஆயுதத்தினை பெண் எடுப்பதில்லை.
தன்னுடைய குழந்தையிடமும் கொடுப்பதில்லை. தாய்நாட்டைக் காக்கிற யுத்தங்களில் குழந்தைகளும் ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள் ‘ஹோட்டல் ருவாண்டா’ என்கிற ஆப்பிரிக்கத் திரைப்படம் ஹுட்டு, டுட்சி என்கிற இருபிரிவினரிடையே நடக்கின்ற உள்நாட்டு யுத்தத்தினை மையமாகக்கொண்டது. இந்தத் திரைப்படத்தில், முதல்கணம் வரையில் வேறுபாடுகள் ஏதுமற்று இருந்தவர்கள் பகையாகிப்போவதைக் காணமுடியும். வெட்டி வீழ்த்தப்பட்ட உடல்களால் அந்த நகரமே நிறைகிறது.
தன்னை எவ்விதமாகவும் காத்துக்கொள்ள இயலாத பச்சிளம் குழந்தைகள் கூட செஞ்சிலுவை இயக்கத்தினரின் துணையுடனே எல்லையைக் கடக்க முடிகிறது. குழந்தைகளும், பெண்களும், கன்னிகாஸ்திரிகளும் சொந்த நிலத்தில் அந்நியமாக்கப்பட்டு எல்லை கடந்து செல்வதற்காக, படுகிற அவஸ்தையினை காணும்பொழுது போர் என்பது எவ்வகையிலும் தர்மம் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்லமுடிகிறது. திரைப்படத்தின் ஒரு காட்சியில் செஞ்சிலுவை அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண், “டுட்சி இனக்குழந்தைகளை அழிப்பதன் மூலம் அடுத்த தலைமுறையே இல்லாது போய்விட செய்வதுதான் ஹூட்டுக்களின் குறியாக இருக்கிறது“ என்பார்.
இதை ஒரு திரைப்படத்தின் வசனமாக மட்டுமே கடந்து சென்றுவிட இயலாது. ஓர் இனத்தினை அழிப்பதற்காக குழந்தைகளை அழிப்பதன் வழியாகவும் பெண்களை சிதைப்பதன் வழியாகவும் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. உலகம் முழுக்க நடைபெற்ற, நடைபெறுகிற அத்தனை யுத்தங்களிலும் பெண்களும் குழந்தைகளுமே இவ்விதமாகவே பாதிக்கப்படுகிறார்கள். இனி நடைபெறப் போகிற யுத்தங்களும் இவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ளப் போவதில்லை.
சிங்களப்படையினரால் தமிழ் மக்கள் இன அழித்தொழிப்பு செய்யப்பட்ட பொழுது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட கணத்திற்குச் சற்று முன்பாக ரொட்டி ஒன்றை சாப்பிடுகிற முதல் புகைப்படமும், உடல் முழுக்க குண்டு பாய்ந்து இறந்து கிடக்கும் சிறுவனின் அடுத்த புகைப்படமும் போர்நிலத்தின் மிக உச்சமான துரோகத்தின் அடையாளமாகியுள்ளது. தமிழனாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் என்றென்றைக்கும் நீங்காத துயரம் படிந்த அடுத்தடுத்த கணங்களின் புகைப்படங்கள் இவை.
வியட்நாம் பிரச்னை எனக் குறிக்கப்படுகிற இரண்டாவது இந்தோ சீனப்போர் 1965 முதல் 1975 ஏப்ரல் 30 வரை நடைபெற்றது. தெற்கு வியட்நாம் படைவீரர்கள் பின் தொடர ஓடிவருகிற குழந்தைகளை டெனிஸ் சாங் ( Denise Chong ) என்பவர் புகைப்படமாக எடுத்திருப்பார். அந்தக் குழந்தைகளின் மத்தியில் நிர்வாணமாக ஓடிவருகிற பெண்குழந்தை போரின் அவலத்தை சொல்கிறதாக இன்றளவும் குறிப்பிடப்படுகிறது. April 2, 1963ல் பிறந்த “Phan Thi Kim Phuc” என்கிற அந்தப் பெண்குழந்தை வளர்ந்து 1997 முதல் தன்னுடைய பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி போரில் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கு உதவி செய்துவருகிறார்.
தன்னுடைய குழந்தைகள் கையில் ஆயுதத்தைக் கொடுத்தனுப்புகிற தாய் தமிழ்நிலத்திற்குப் புதியதல்ல. என்றபோதிலும் குழந்தைப்பருவ விளையாட்டுகளை விட்டெறிந்துவிட்டு ஆயுதத்தைக் கொடுக்கிற நிலையினை எந்தத்தாயும் விரும்புவதேயில்லை. ஒரு தாய் தன்னுடைய மகனை அவனுடைய எந்தப்பருவத்திலும் குழந்தையாக மட்டுமே பார்க்கிறாள். வாழுகிற சூழலில் அமைதியை விரும்புகிறவளாக பெண் இருக்கிறாள். தன்னுடைய குழந்தை அவனுடைய எந்த வயதிலும் போர்க்கருவியை கையிலெடுப்பதை ஒரு பெண் விரும்புவதில்லை.
என்றபோதிலும் போர் என்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. அது எந்தக்காலத்திலும், எந்த நிலத்திலும் பெண்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட செயல்களையே நிகழ்த்துகிறது. ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணியின் “யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்” என்கிற தலைப்பிலுள்ள கவிதை, போர்ச்சூழலில் குழந்தைகள் இழந்த குழந்தைமையைச் சொல்கிறது. யுத்தநிலத்தின் ஒவ்வொரு சிறு அசைவும் குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தினை விளைவிக்கிறது என்பதே என்றைக்கும் மாறாத உண்மை. “யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் எங்கள் குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடும். ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின் பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய், எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர். எஞ்சிய சிறிய பகலிலோ ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும் கிளித்தட்டு மறிப்பதையும் அவர்கள் மறந்து போனார்கள். அதன் பின்னர் படலையை நேரத்துடன் சாத்திக் கொள்ளவும் நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும் கேள்வி கேட்காதிருக்கவும் கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது மெளனமாயிருக்கவும், மந்தைகள்போல எல்லாவற்றையும் பழகிக் கொண்டனர். தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது. யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் ‘வளர்ந்தவர்’ ஆயினர்’’.
(சங்கத்தமிழ் அறிவோம்!)
பேய்மகள் இளவெயினியார் எயினி என்பது பாலை நிலத்து மக்களிடையே வழக்கிலுள்ள பெயர். எனினும் மற்ற நிலத்து மக்களிடை யேயும் இந்தப் பெயர் வழங்கப்பட்டு வந்தது. ஆடவருக்குப் பேயன், பேய் என்று பெயர் வைப்பது பண்டைய வழக்கம். மதுரை வட்டாரத்தில் பேயாண்டி என்று பெயர் வைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. எனவே பேய் என்று அழைக்கப்படுபவரின் இளையமகள் என்று கொள்வது பொருத்தமாகும்.
தேவராட்டி, பூசாரிச்சி, பேயினது ஆவேசமுற்றவள் என்றும் இவரது பெயருக்கு சிலர் விளக்கம் தந்துள்ளனர். இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்வதுடன் வஞ்சிநகரின் வளத்தையும் பாடுவதால் இவர் சேரநாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. இவர் பாடியதாக புறநானூறில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது.(புறம்: 11) பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாடாண். துறை:பரிசில் கடாநிலை.
துறை விளக்கம்: தான் பரிசில் வேண்டி நிற்றலை மன்னர்க்கு அறிவுறுத்தவேண்டி ‘யாவரும் பரிசில் பெற்றனர்; நான் வில்லை’ என்று குறிப்பால் கூறுதல். இப்பாடலில் ‘பாடினி இழை பெற்றிசின்; பாண்மகள் பூப்பெற்றிசின்’ என்பதால் தான் எதுவும் பெறவில்லை என்று குறித்து தான் பரிசில் வேட்கை தோன்றக் கூறியதால் பரிசில் கடாநிலை ஆயிற்று என இந்தப் பாடலுக்கு உரையாசிரியர்களின் விளக்கம் இருக்கிறது.
ஆனால் பாடலின் பொருளில் காட்சி வருணனையாக அரசனின் வீரம், நாட்டின் வளம், பாணன், பாடினி போன்றோர் மதிக்கப்படுதல் போன்ற குறிப்புகள் உணர்த்தப்படுகின்றன. பாடல் எழுதப்பட்ட காலத்திற்கும் உரையாசிரியர்களின் காலத்திற்கும் இடைப்பட்ட தூரம் இந்தப் பாடலை பரிசில் கடாநிலை என்கிற துறையில் இணைக்க வைத்திருக்கும். புலவர்கள் என்பவர்கள் அரசனிடம் பரிசில் வேண்டி இரந்து நிற்பவர் என்கிற பொதுவான கருத்தின் அடிப்படையில் இந்தப் பாடலுக்கு உரை எழுதப்பட்டிருக்கும்.
மேலும் பேய்மகள் என்ற பெயரைக் காரணமாகக் கொண்டு பேய்மகள் என்பவள் பெண் வடிவாகப் பாடினாள் என்றும் யாவரும் பரிசில் பெற்ற களத்தே, பகைவர் புறமுதுகிட்டதால் தன்னுணவாகிய தசைத்துண்டம் பெறாது பாடினாள் என்றும் பழைய குறிப்பொன்று கூறுகிறது.
சிறு பெண்களின் விளையாட்டு பற்றிய சங்கக்குறிப்புகள் * “குறுமகள் பாவை தை இயும்” (குறுந் 276) “பைஞ்சாய்ப் பாவை ஈன்றனன்” (ஐங் 155) “சாய்க் கொழுதிப்பாவை தந்தனைத்தற்கோ (கலித் 76) என்பன மகளிர்தம் பாவை விளையாட்டு கூறும் அடிகளாகும். * பாவைக்குப் பூச்சூட்டுதலை, ‘திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பு தைஇத் தண்கயமாடும் மகளிர்’ (புறம்.243) என்பதாலும் அறியலாம். * “சுடர் விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும் விளையாட” கலித்தொகை(595-6) * சுணங்கு அணி வனமுலை அணங்கு கொள்த்திமிரி நிழல் காண் தோறும் நெடியன வரி மணல் காண் தோறும் வண்டல் தைஇ -நற்றிணை. (9-66) * பொம்மைகளைப் பாலூட்டி வளர்ப்பாள் போன்ற விளையாட்டைப் பற்றி கண்டிக்கும் அல்லமோ, கொண்க; நின் கேளே? உறாஅ வறு முலை மடாஅ உண்ணாப் பாவையை ஊட்டு வேளே! -ஐங்குறுநூறு 128 * கிரேக்கப்பெண் கவிஞர் எரின்னா குழந்தைப் பருவத்தில் கூடி விளையாடிய இடங்களை நினைத்து இரங்கியது போல, நற்றிணைத் தாயொருத்தியும் ஒரு பாடலில் உள்ளம் வருந்திக் கூறுகிறாள்,
“ உள்ளின் உள்ளம் வேமே—உண்கண் மணிவாழ் பாவை நடை கற்றன்ன என் அணி இயற் குறுமகள், ஆடிய மணி ஏர் நொச்சியும் தேற்றியும் கண்டே” -நற்றிணை184.
|