என் சமையலறையில்...



சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது சில துளிகள் எலுமிச்சைச்சாறு விட்டால் பாகு முறுகாமல் இருக்கும். கேழ்வரகை ஊறவைத்துப் பால் எடுத்து கோதுமை அல்வா போல் செய்யலாம். கோதுமை அல்வாவை விடச் சிறப்பாக இருக்கும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

ஆப்ப மாவு அரைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தேங்காய்த் தண்ணீரை புளிக்க வைத்து, அதை ஆப்ப மாவில் கலந்து ஆப்பம் செய்தால் ஆப்பம் பூப்போல பொங்கி வரும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

பாயசம், கேசரி செய்யும்பொழுது திராட்சை கைவசம் இல்லையெனில் பேரீச்சம்பழத்தை நைசாக நறுக்கி நெய்யில் பொரித்து கலக்கலாம். சுவை நன்றாக இருக்கும். 3 பங்கு கடலைமாவு, 1 பங்கு அரிசி மாவுடன், 2 டீஸ்பூன் மைதாவும் கலந்து ஓமப்பொடி செய்தால் தூளாக அதிகம் நொறுங்காமல் ஓமப்பொடி நன்றாக எடுக்க வரும். மிளகாய்வற்றலை வறுக்கும்போது சிறிது உப்பை போட்டு வறுத்தால் ஹச்... ஹச்... தும்மல் போயே போச்சு!
- ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

மோர் இல்லாவிட்டால் புளியை கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொண்டு, அதில் உப்பு சேர்த்து மிளகாய்களை ஊறவைத்து காயவைத்தால், மோர் மிளகாயை விட ருசியாக இருக்கும். இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியானால், பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்தால் இட்லி பூப்போல இருக்கும். ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரை பாகு தயாரித்து கேசரி கிளறினால் நெய் செலவில்லாமல் ருசி கூடும்.
- மல்லிகா அன்பழகன், கே.கே.நகர் கிழக்கு.

நார்த்தங்காய் ஊறுகாயில் மோர்மிளகாயை போட்டு வையுங்கள். இந்த மிளகாயை வறுக்காமல், அப்படிேய  தயிர்சாதத்துக்கு தொட்டு சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதில் இளநீர் சேர்த்தால் சப்பாத்தி அதிக சுவையாக இருக்கும்.
- கே.ராகவி, வந்தவாசி.

உருளைக்கிழங்கை சீவி உப்புத் தண்ணீரில் ஊறவைத்து உலர்த்தி வறுத்தால் வறுவல் மொறு மொறு என்றிருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

பால் பவுடர், கோவா, தேங்காய் சீவல், நட்ஸ் விருப்பப்பட்டதை சேர்த்து உருட்டி பூரணமாக தயாரிக்க, மேல் மாவு சத்து மாவு அதனுடன் சோயா அல்லது கார்ன்ஃப்ளார் சேர்த்து கரைத்து சுகியன் தயாரிக்கலாம். டேஸ்ட்டாகவும், சத்தாகவும் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.