நாங்க குட்டி ஹிரோயின்ஸ்



தமிழ்த் திரைப்படங்களில் நம் மனதை கொள்ளை கொள்ளும் சிறுமிகள் அறிமுகமாகிறார்கள். இவர்களில் பலர் அடுத்தடுத்த படங்களில் நடிக்காவிட்டாலும் ஒரு படத்திலேயே மனதில் நிற்குமளவுக்கு அட்டகாசமாக நடிக்கிறார்கள். அப்படி நம் மனம் கவர்ந்த குட்டி கதாநாயகிகள் சிலரை சந்தித்தோம்.

2014ம் ஆண்டு தமிழில் வெளிவந்த  திரைப்படம் ‘காக்கா முட்டை’. இத்திரைப்படத்தை மணிகண்டன் எழுதி இயக்கினார். சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான  திரைப்படம் என இரண்டு தேசிய விருதுகளை வென்றது நாம் அனைவருமே அறிந்ததுதான். இப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட குழந்தை நட்சத்திரங்களில் ஒருவரான ரம்யாவை சந்தித்தோம். யார் இந்த ரம்யா என்ற கேள்வி எழுகிறதா? அட இதே படத்தில் ‘ஐய பீலாலா வுடாத.... சிம்பு துண்ண பீசாவா’ என்று வசனம் பேசி  இருப்பார் ரம்யா. கோயில் திருவிழாவில் சின்ன காக்கா முட்டையுடன் இவர் ஆடும் நடனத்திற்கு பல ரசிகர்கள் உண்டு.

தற்போது அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் ரம்யாவின் குடும்பம் காசிமேடு அண்ணா நகரில் வசித்து வருகிறது. கடற்கரை ஓரமாக இருக்கிறது இவருடைய வீடு. 5ம் வகுப்பு படிக்கும்போது ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்தாராம். இவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார்... வேறென்ன படங்களில் நடித்திருக்கிறார் என்பது பற்றி அவரிடமே கேட்டோம். ‘‘நான் 5வது படிச்சிக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் எங்க டியூசன்ல ஒரு புரோகிராமுக்கு வீட்டு வாசல்ல டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

அப்போ எங்க வீட்டாண்டை பீச்சில சூட்டிங் எடுத்துட்டு இருந்தாங்க. அப்போ அங்க இருந்த மணிகண்டன் அண்ணா வந்து படத்துல நடிக்கிறியான்னு கேட்டாங்க. எங்க அம்மாகிட்ட கேட்டேன், அம்மாவும் சரின்னு சொன்னாங்க. நாங்க 10 நாள் சூட்டிங்ல இருந்தோம். எங்க ஏரியால இருந்து 5 பசங்க போயிருந்தோம். சூட்டிங் முடிஞ்சவுடன் நாங்க எல்லாரும் ஜாலியா விளையாடுவோம். மணிகண்டன் அண்ணா, ஜெய் அண்ணா எல்லாரும் எங்களை நல்லா பார்த்துக்கிட்டாங்க.

ஓட்டலுக்குப் போனோம், நாங்க கேட்டது எல்லாம் வாங்கித் தந்தாங்க. நான் அந்தப் படத்துல ‘‘ஐய…. பீலாலா வுடாத சிம்பு துண்ண பீசாவா”ன்னு விக்கி கிட்ட கேட்பேன். அந்த டயலாக்தான் எனக்குப் படத்துல ரொம்பப் புடிச்சது. அந்தப் படத்துல  டான்ஸ் ஆடியிருந்தேன். எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிப்போச்சு’’ என்கிறார் ரம்யா.  இவர் ‘மனிதன்’ படத்தில் இட்லி விற்கும் தெருவோரப்  பெண்ணின் மகளாக நடித்திருந்தார். ஒரு கால் ஊனமாக நடக்கும் இவரது நடிப்பு  பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கும்.

‘‘போன வருசம் ‘மனிதன்’ படத்துல  இட்லிகாரம்மா பொண்ணா நடிச்சேன். அந்தப் படத்துல கால் ஊனமாக நடிக்கணும். அது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனாலும் நடிச்சிட்டேன். நான் நல்லா நடிச்சேன்னு ராதாரவி சார், பிரகாஷ் ராஜ் சார், உதயநிதி சார் எல்லோரும் கை குடுத்தாங்க . எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு’’  என்னும் ரம்யாவுக்கு வளரும் பசுமை இயக்கம் அமைப்பு 2015ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை வழங்கி சிறப்பித்திருக்கிறது. ”எதிர்காலத்தில் ஒரு சிறந்த நடிகையாக வரவேண்டும்” என்பதே என்னுடைய ஆசை என்கிறார் இவர்.

‘மூடர்கூடம்’ படத்தில் மழலை மொழியில் அனைவரையுமே கவர்ந்தவர் குழந்தை நட்சத்திரம் ரிந்தியா. ரிந்தியாவின் குடும்ப நண்பராக இருந்ததால் சிரமப்படாமல் காட்சியை படமாக்கி அனைவரையுமே சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் நவீன். ஒரு காட்சியில் வந்தாலும் படம்பார்த்த அனைவரும் பேசக்கூடியதாக இருந்தது ரிந்தியாவின் நடிப்பு. படப்பிடிப்பு குழுவினரால் கவரப்பட்ட ரிந்தியா, எந்த ஒரு  பயிற்சியும் இல்லாமல் வசனம் பேசி அசர வைத்துள்ளார்.

நடிப்பதற்கு முன்னால் ‘என்னைப் பிடித்தால்தான் நடிப்பேன்’ என்று ரிந்தியா சொல்ல, இயக்குனரும், நடிகையும் ரிந்தியாவோடு ஓடிப் பிடித்து விளையாடினார்களாம். இப்படி இரண்டு நாளாக ஓடிப் பிடித்துதான் ரிந்தியாவை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் நவீன். ஒரு நாள் முழுவதும் படக்குழு காத்திருந்து இவரது காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு அப்போதுதான் வந்திருந்த ரிந்தியாவிடம் பேசியபோது...

‘‘ நான் 3வது படிக்கும்போது மூடர்கூடம் படத்துல காமெடி சீன் பண்ணியிருந்தேன். நவீன் மாமாதான் என்ன நடிக்க வெச்சாங்க. அங்க எல்லோரும் என்னை நல்லா பாத்துகிட்டாங்க. நாங்க எல்லாரும் ஜாலியா விளையாடினோம். நவீன் மாமா எனக்கு சாக்லெட் எல்லாம் வாங்கி தந்தாங்க. நவீன் மாமா கிட்ட என்ன ஓடிப் பிடிக்க சொல்லுவேன். நான் ஓடிப் போயிடுவேன். அவங்களால என்னைப் பிடிக்க முடியாது. ஓவியா ஆன்ட்டி கூட ஊஞ்சல் விளையாடினேன். 

ஒரு அங்கிள் போன் பண்ணுவாங்க, அப்பா குளிக்கிறாங்கனு சொல்லிட்டு உனக்கு என்ன தோணுதோ பேசுனு சொன்னாங்க. நான் அந்த அங்கிள்கிட்ட அப்பா குளிக்கிறாங்க அங்கிள், எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றீங்களா, அப்புறம் 5 ஸ்டார், டைரி மில்க் 3, லட்டு ஜிலேபி, பீட்சா எல்லாம் வாங்கிட்டு வர்றீங்களான்னு கேட்டேன். அப்புறம் போன் கட் ஆயிடிச்சு. நவீன் மாமா போதும்னு சொல்லிட்டாங்க. படம் ரிலீஸ் ஆன பிறகு நான், அப்பா எல்லோரும் போய் படம் பார்த்தோம்.

படத்தில் நடிச்சப்போ நான் ரொம்ப சின்னப் பிள்ளையா இருந்தேன். அதனால நான் என்ன செஞ்சேன்னு எனக்கு அவ்வளவா தெரியலை. அப்புறம்தான் தெரிஞ்சது நான் அந்தப் படத்தில் என்ன காமெடி பண்ணியிருந்தேன்னு. எங்க ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாரும் படம் பார்த்துட்டு, நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. எங்க டீச்சர் எங்க ஸ்கூல்லையும் ஒரு ஆக்டர் இருக்காங்கனு சொன்னாங்க’’ என்று சொல்லும் ரிந்தியா தற்போது 5ம் வகுப்பு படித்து வருகிறார். படம் வரைவதென்றால் ரிந்தியாவுக்கு மிகவும் இஷ்டம். வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர்களை வரவழைத்து, கேமரா மற்றும் டிரைப் பேடை கொண்டு கதை சொல்லி படமெடுத்துக் கொண்டிருக்கிறார் ரிந்தியா.
 
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ‘தெறி’. இந்தப் படத்தில் விஜய்யையும் தாண்டி ரசிகர்களை கவர்ந்தவர் யார் என்றால் அது மீனாவின் மகள் நைனிகாதான். அவருடைய குறும்புத்தனமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அடுத்தடுத்து பல பேர் கால்ஷீட் வேண்டி நடிகை மீனாவின் வீட்டிற்குப் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்களாம். அவர்களுக்கு எல்லாம் மீனா சொல்லும் ஒரே பதில், ‘‘அவ படிக்கணும்”.
 
முதல் முறை இயக்குனர் அட்லி கேட்ட போது மறுத்த மீனா, தொடர்ந்து கேட்டதால் ஒப்புக்கொண்டிருக்கிறார். பிறகு முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது சின்ன அச்சத்தோடு இருந்த நைனிகா அடுத்தடுத்த நாட்களில் அனைவரிடமும் நன்றாகப் பழகத் தொடங்கியுள்ளார். இவருக்கென அங்கு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்து விட்டதாம். அத்தனை பேர் இருந்தாலும் ‘விஜய் அங்கிள் சோ ஸ்வீட்... அவர் எனக்கு நிறைய சாக்ெலட்ஸ், கிப்ட்ஸ் வாங்கித் தந்தார்.

அப்புறம் வாட்ச், பிங்க் கலர் பேக், ஒரு ஸ்மைலி பாக்ஸ் கொடுத்தார்’ என மழலை மொழியில் கூறுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே இடத்திலே இருக்கமாட்டாராம். அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறார். அங்கு தன்னோடு விளையாடியவர்களை பட்டியல் இடுகிறார் ‘‘விஜய் அங்கிள், கர்ணா அங்கிள், அட்லி அங்கிள் எல்லோரும் என் கூட இருப்பாங்க. ரன்னிங் ரேஸ், ஸைடன் சீக் எல்லாம் விளையாடுவோம்’’ எனும் நைனிகா ஷூட்டிங் இடத்தையே விளையாட்டு மைதானமாக மாற்றி இருக்கிறார்.

இவரை நடிக்க வைக்க இயக்குனர் அட்லி ஒரு குழந்தையாகவே மாறி விட்டாராம். ஒவ்வொரு முறையும் வசனம் பேசுவதற்கு முன்னாலேயே சொல்லிக்கொடுத்து பேச வைப்பார்களாம். மீண்டும் பேசச் சொன்னால் ‘‘எத்தனை தடவை சொல்றது... இப்பதானே சொன்னேன், சும்மா சும்மா சொல்லச் சொல்றீங்க’’ என்று சொல்வாராம். அதிகபட்சம் ஓரிரு டேக்குகளில் காட்சிகளை எடுத்துவிட்டார்களாம்.

வீட்டிற்கு வந்து மீனாவிடம்,‘‘எல்லாரும் பொய் சொல்றாங்க... அது வாங்கித் தரேன்னு சொன்னாங்க, அங்கே கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாங்க... ஆனா, எதுவுமே செய்யல’’ என்று சொல்வாராம். ஆனால் அவர் கேட்பதற்கு முன்பே எல்லாம் பண்டல் பண்டலாக வந்து சேருமாம். படத்தை இரண்டு முறை பார்த்ததாகக் கூறுகிறார். ‘‘படம் பார்க்கும்போது அடுத்து என்ன வரப்போகிறதென்று முன்னாலேயே சொல்லத் தொடங்கிட்டா, தியேட்டரில் இவ சத்தம்தான் அதிகமாக இருந்தது” என்றார் மீனா.

‘‘எனக்கு ‘மொக்க பேபி நீ’ டயலாக்கும், அப்புறம் புரியாத பாஷையில பேசச்சொன்ன டயலாக்கும்தான் ரொம்பப் பிடிச்சிருந்தது’’ என்றார் நைனிகா. படப்பிடிப்பின்போது விஜய்யுடன் பைக்கில் போகும்படியான காட்சிகள் படமாக்க வேண்டும். அப்போது, ‘‘உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா... ஒரு தடவை ஓட்டிக் காட்டுங்க... அப்பதான் நம்புவேன்” என்றிருக்கிறார் நைனிகா. விஜய்யும் ஒரு ரவுண்டு ஓட்டி காட்டிய  பிறகே அந்தக் காட்சி படமாக்கப்பட்டதாம்.

நம்மோடு பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்திலே தன்னுடைய மழலை சேட்டைகளை ஆரம்பித்துவிட்டார். தண்ணீரில் இறங்கி நடிக்க பயமாக இருந்ததா என்று கேட்டபோது, ‘‘நா பயப்படல... எனக்கு சிரிப்புதான் வந்தது’’ என்றார். ‘‘நான் ஷூட்டிங் போகும் போதெல்லாம் ‘எப்போ மம்மி எனக்கு ஷூட்டிங். நீங்க மட்டும் போறீங்க’ன்னு கேட்கிறா” என்கிறார் மீனா.

விளம்பரங்கள் மூலம் 2 வயதில் தொடங்கியது வைஷ்ணவியின் நடிப்புப் பயணம். பல்வேறு விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த போது, இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் வெளி வந்த ‘முகமூடி’ படத்தில் அறிமுகமானார் வைஷ்ணவி. ‘‘முதல் தடவை பெரிய பெரிய கேமராவைப் பார்த்து பயந்தேன். அப்புறம் அம்மா சொல்லி புரிய வச்சாங்க. அதுக்கப்புறம் பயமெல்லாம் இல்ல. என்ன ஷூட்டிங் கூட்டிட்டு போறது, என்னைப் பாத்துக்குறது எல்லாமே எங்க பாட்டிதான். என்னோட முதல் படம் ‘முகமூடி’ ஜீவா சார்கூட நடிச்சேன்.

என் கூட நிறைய சின்னப் பசங்களும் நடிச்சிருந்தாங்க. ஜாலியா இருந்தது. மிஷ்கின் அங்கிள் எங்க எல்லோரையும் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க’’ - தன்னுடைய நடிப்பில் மிஷ்கினையும் கவர்ந்து இருக்கிறார் வைஷ்ணவி. 9 வயதாகும் வைஷ்ணவி லாலாஜி மெமோரியல் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து  வருகிறார். ‘பசங்க 2’ படத்தில் நடித்திருக்கிறார் வைஷ்ணவி.‘‘என்னுடைய ரெண்டாவது படம் பசங்க2 பண்னும்போது எனக்கு பயம், கூச்சம் இல்ல. ஷாட்டுக்கு முன்னாடியே டைமுக்கு தயாரா இருப்பேன்.

ஃப்ரீ டைம்ல டயலாக் பேசி பிராக்டிஸ் பண்ணுவேன். பாண்டிராஜ் சார் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. சூர்யா சார் முதல் தடவையா பார்க்கும்போது பெரிய ஆக்டர் கூட நடிக்க போறோம், எப்படி பழகுவாங்கனு பயம் இருந்தது. ஆனா, ரொம்ப கேஷ்வலா ஜாலியா இருந்தாங்க. அமலாபால் மேடம் எங்கக் கூட ரொம்ப நல்லா பேசுவாங்க. அலிகான் சார். செந்தாமரை சார், எல்லோரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தோட கிளைமாக்ஸ்ல கிளசரின் போடாமலே நடிச்சேன். சினிமா பார்த்தவங்க அழுதாங்களோ இல்லையோ, பாண்டிராஜ் சார் அழுதாங்க. அவ்வளவு பிடிச்சது அவங்களுக்கு அந்த சீன்’’ என்கிறார் வைஷ்ணவி.

ஒவ்வொரு முறையும் டேக் எடுத்துவிட்டு மானிட்டரை பார்த்து. ‘‘அங்கிள் நான் இன்னும் கொஞ்சம் கூட நல்லா நடிச்சிருக்கலாம்... நான் மறுபடியும் நடிக்கட்டுமா’’ என்று கேட்டு நடிப்பாராம் வைஷ்ணவி. ‘‘என் கூட பசங்க படத்துல நிஷேஷ்னு ஒரு பையன் நடிச்சிருப்பான். நாங்க ரெண்டு பேருமே ரொம்ப வாலு பசங்களா இருப்போம். நான் நடிச்சேன். ஆனால் நிஷேஷ் நார்மலாவே அப்படித்தான் இருந்தான். ஒரு இடத்துல இருக்கவே மாட்டான்.

அவ்வளவு சுட்டியா இருப்பான். அவன் கூட ஒர்க் பண்ணது எனக்கு ரொம்ப பிடிச்சுது. அந்த செட்லையும் எங்க எல்லாரையும் ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டாங்க. ஒரு சீன் நான் தூங்கிட்டிருக்கிற மாதிரி எடுக்கணும். நான் கண்ணை மூடிட்டேன். ஆனால் கண்ணை அசைச்சிக்கிட்டே இருந்தேன். அதனால சீன் எடுக்கவே இல்ல, அப்புறம் நான் தூங்கின பிறகு அந்த ஷாட் எடுத்தாங்க. எனக்கே தெரியாது. அப்படி எங்களைப் பார்த்துக் கிட்டாங்க. சூர்யா சார், செந்தாமரை கண்ணன் சார், எனக்கு புக்ஸ் கிஃப்ட் பண்ணாங்க.

அந்தப் படத்துல ரெண்டு மூணு இடத்துல நான் அழற மாதிரி சீன் இருக்கும். எனக்கு அது மட்டும் வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு’’ என்கிறார் வைஷ்ணவி. தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகியோருடனும் நடிக்க வேண்டும் என்பது இவரது ஆசையாம். எதிர்கால லட்சியம் ஐ.ஏ.எஸ் அல்லது பைலட் என்கிறார் குட்டி வைஷ்ணவி.
 
‘அப்பா’ திரைப்படம் மூலம் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் யுவலஷ்மி. இவர் ‘அம்மா கணக்கு’ படத்திலும் நடித்திருக்கிறார். ‘‘போன வருஷம் அக்டோபர் மாசம்னு நெனைக்கிறேன். சமுத்திரக்கனி அங்கிள் ஆபீஸ்ல இருந்து ேபான் வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னைக் கூப்பிட்டுப் பேசுனாங்க. ‘அப்பா’ படத்துல நீங்க நடிக்கணும்னு சொன்னாங்க. நடிக்கிறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் சமுத்திரக்கனி அங்கிள் படம் எல்லாமே சமுதாயத்துக்கு ஒரு நல்ல விஷயம் சொல்றதா இருக்கும்.

அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்தப் படத்துல எனக்கு நடிச்ச மாதிரியே தெரியல. ஒரு குடும்பத்தோட டிராவல் பண்ணினது போல இருந்தது. டயலாக் எல்லாம் குடுத்து படிக்க வைக்க மாட்டாங்க. கூப்பிட்டு உட்கார வச்சுப் பேசுவாங்க. அவ்வளவுதான் இப்படியே பண்ணுங்கனு சொல்லிடுவார். நானும் இது வரைக்கும் ஒரு டேக் மேல வாங்கினது இல்லை. என்னை ஒன்டேக் ஹீரோயின்னு சொல்லுவாங்க’’ எனும் யுவலஷ்மி பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர். இது மட்டுமல்லாமல்  யோகா, கர்நாடக இசை கற்றுக்கொள்கிறார்.

‘அம்மா கணக்கு’ படத்திலும் அசத்தியிருக்கிறார். ‘‘எனக்கு படம் ரொம்பப் பிடித்திருந்தது. அந்தப் படத்தில் நிஜத்தில் என் கேரக்டருக்கு அப்படியே எதிரா நடிச்சிருந்தேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் என்னோடு ஒர்க் பண்ண எல்லோருமே ரொம்ப ஜாலியா, ஒரு குடும்பமாக இருந்தோம். கடைசியில அமலா பால் மேடம் என்ன அடிக்கிற மாதிரி சீன் எடுக்கணும். அப்போ மேடம் என்ன உண்மையாகவே அடிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் என்கிட்ட மேடம் ஸாரி கேட்டு என்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டாங்க.

அந்தக் காட்சி நல்லா வந்துருச்சு’’ என்கிறார் யுவலஷ்மி. தன்னுடைய எல்லா வெற்றிக்கும் அப்பாவும், அம்மாவும்தான் காரணம் என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்பதுதான் தன் ஆசை என்கிறார். அதற்காக படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் யுவலஷ்மி. தற்போது 11ம் வகுப்பு படித்து வருபவர் கடந்த வருடம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.

- ஜெ.சதீஷ்
படங்கள்: ஆர்.கோபால்