காற்றின் மொழி



படம் பார்க்கும்போது, சில பாத்திரங்களில் நடிகர், நடிகைகளின் புகழ்பெற்ற பல வசனங்கள், அந்தக் குரலின் வசீகரம், நடிப்புடன் நம்மை ஒன்றச் செய்து, இது அவரின் குரலே இல்லை என அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு நடிப்பவர்களின் உதட்டசைவிற்கு முழுவதும் பொருந்திப்போகும். தனது பின்னணிக் குரலை, நடிப்பிற்கு இணையாக, திரைக்குப் பின் நின்று கொடுப்பவர்கள் பின்னணிக் குரல் கலைஞர்கள். முகம் அறியாத இவர்களின் நடிப்பை, அவர்களின் உழைப்பை, திரையில் தோன்றுபவர்களின் நடிப்போடு இழையோடச் செய்யும் குரலை வெளிப்படுத்துபவர்களை பற்றிய  நாம் அறியாத சில பக்கங்கள்.

ஸ்ரீஜா ரவி
“தேங்க்யூ ஃபார் டப்பிங் மை வொய்ஃப்” என்றார் நடிகர் அஜீத்.

“காற்றத்தே கிளிக் கூடு” எனும் மலையாளப் படத்தில் ரேவதிக்குக் குரல் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் கதாநாயகிகளாக வலம் வந்த ரேவதி, ரோகிணி, சார்மிளா, சுனிதா, ஷாலினி, காவ்யா மாதவன், கோபிகா, பாவனா, நயன்தாரா, கடைசியாக ‘கசபா’ எனும் படத்தில் மம்முட்டி சாருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை வரலட்சுமி வரை மலையாளத்தில் குரல் கொடுத்துவிட்டேன்” என்னும் ஸ்ரீஜா ரவி தமிழிலும் பிஸியான டப்பிங் ஆர்ட்டிஸ்டாக 37 வருடங்களாக 1500 படங்களை கடந்து வலம் வருகிறார்.

தமிழில் ‘காதல் கோட்டை’, ‘தொட்டாச்சிணுங்கி’ படத்தில் நடிகை தேவயானிக்கும், ‘காதலுக்கு மரியாதை’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘அமர்க்களம்’ படங்களில் நடிகை ஷாலினிக்கும் குரல் கொடுத்திருக்கிறார். ஷாலினியும் ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதும் இவர்தான் குரல் கொடுத்தார் என்பது கூடுதல் தகவல். ரம்பா, ரோஜா, சுவலட்சுமி, லைலா, சிம்ரன் என இவரின் பட்டியல் நீள்கிறது. 

‘‘தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகள் வரை டப்பிங் குரல் கொடுத்திருக்கேன். கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல படங்களில் மலையாளத்தில் நடித்துள்ள கண்ணணூர் நாராயணி தான் எனது அம்மா. எனது அம்மா மூலம்தான் நான் திரைத்துறைக்குள் வந்தேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சின்னச் சின்ன கேரக்டர் ரோல் செய்த பிறகு, பின்னணி குரல் கொடுக்கத் துவங்கினேன்.

முதலில் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்து, எனது 13 வயதில் நடிகை ரேவதிக்கு “காற்றத்தே கிளி கூடு” மலையாளப் படத்தில் குரல் கொடுத்து, பின்னர் கதாநாயகிகளுக்கு குரல் கொடுப்பவளாக மாறினேன். அதன் பிறகு என் குரலுக்கு நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கத் துவங்கின. ‘சதிலீலாவதி’யில் ஹீராவுக்கு, ‘கோகுலத்தில் சீதை’ படத்தில் சுவலட்சுமிக்கு, ‘காமராசு’, ‘தில்’ படங்களில் லைலாவுக்கும் குரல் கொடுத்துள்ளேன்.

நடிகை தேவயானிக்கு 80% படங்களுக்கு எனது குரல்தான். “தில்” பட ப்ரொமோக்களில் வந்த லைலாவின் குரலாக வரும் “பஸ்ஸுன்னா கூட நான் லேடீஸ் பஸ்லதான் போவேன்… ஆட்டோன்னா லேடீஸ் ஆட்டோவில்தான் போவேன்…” எனும் புகழ்பெற்ற அந்த வசனத்திற்குச் சொந்தமான குரல் என்னுடையது. அமர்க்களம் படத்தில் நடிகை ஷாலினிக்கு நான் எனது குரலை கொடுத்துவிட்டு வெளியில் வந்தபோது, நடிகர் அஜீத் என்னருகில் வந்து “தேங்க்யூ ஃபார் டப்பிங் மை வொய்ஃப்” என்றார் மெதுவாக.

அப்போதுதான் இருவரும் ‘காதலில் இருப்பது’ எனக்குத் தெரியவந்தது. ‘‘ப்ரெண்ட்ஸ் படத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு பேசினேன். அதில் அவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடி. இதை ஒரு தருணத்தில் நடிகர் சிவக்குமாரிடம் “சூர்யா நடித்த அந்தப் படத்தில் அவரின் ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமிக்கு நான்தான் குரல் கொடுத்தேன்” எனத் தெரிவித்தேன். அதை கேட்டு அவர் “எப்படிம்மா அப்படிப் பேசினாய்” என்று பாராட்டினார்.

நடிகர் மம்முட்டிக்கும் என் குரல் மிகவும் பிடிக்கும். மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்த நடிகை கேத்ரினா கைஃப்க்கு குரல் கொடுத்தேன். பாசில் சார் இயக்கத்தில், ஜுகி சாவ்லாவிற்கு மலையாளத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். வேற்று மொழி நடிகைகள் நடிக்க வரும்போது, அவர்கள் நடிப்பிற்கு குரல் கொடுப்பது கொஞ்சம் கஷ்டமான விசயம்... அதை சரியான முறையில் உதட்டசைவிற்கு ஏற்ப கொடுப்பதுதான் கடினம். நிறைய மெனக்கெட வேண்டும்.

டப்பிங் ஸ்டூடியோவுக்குள் வருவதற்கு முன்பே கேரக்டருடைய இயல்பு என்ன என்று கேட்டுக்கொள்வேன். படத்திலிருந்து ஏதாவது ஒரு காட்சி பார்த்து அந்த கேரக்டரை உள்வாங்கிவிட்டு அவர்களின் நடிப்புக்கு ஏற்ப நடிகைகளின் பாடி லாங்வேஜை அப்சர்வ் பண்ணிவிட்டே குரல் தருவேன்” எனும் ஸ்ரீஜா, கேரள மாநில விருதை 4 முறையும் தமிழக அரசு விருதை ஒரு முறையும் பெற்றிருக்கிறார்.

‘‘டப்பிங் என்பது ஒரு கலை. நல்ல நடிகர்களாலே நல்ல குரலைத் தர முடியும். நடிகர்கள் நடிப்பில் விடும் சின்னச் சின்ன குறைகள் சின்னச் சின்ன தொய்வுகளை மேம்படுத்துவது டப்பிங் கலையே. நமது ஜீன்ல நடிப்புத் தொடர்பான ஆர்வம் இருந்தால்தான், முழு ஆர்வத்துடன், கேரக்டருக்கு ஏற்ப குரல் தர முடியும். எங்களின் குரல்வளம் மூலம் அவர்களின் குறைகளை சரிசெய்து விட முடியும். படத்தின் கேரக்டருக்கு ஏற்ப குரலில் ஏற்ற இறக்கங்களை மாற்றிக்கொள்வோம். பைலட் டிராக் கரெக்டாக இருந்தால் அதை ஃபாலோ பண்ணுவோம்.

இல்லையென்றால் ஸ்கிரிப்ட்டில் உள்ள வரிகளை, வாயசைப்புக்கு ஏற்ப பேசுவோம். நாங்கள் தருவதும் நடிப்புத்தான், ஆனால் அதை, கேமராவுக்கு பின்னால் இருந்து தருகிறோம்” என்கிறார் அழுத்தமாக. ‘‘நடிப்பின் உடல் மொழியை நம்மால் உள்வாங்கி, கேரக்டரின் இயல்பை, உள்ளிருந்தே வெளியில் கொண்டுவர முடியும். ஆனால், திரைத்துறையில் அதற்கான மதிப்பு, குரல் பதிவு நடைபெறும்போது கிடைப்பதுபோல், அதன் பிறகு அதற்கான அங்கீகாரம் சரியான முறையில் கிடைப்பதில்லை.

ஒரு பாடகர் ஒரு படத்தில் ஹிட் கொடுத்தால் கிடைக்கும் வெளிச்சம், டப்பிங் குரல் பேசுபவர்களுக்கு கிடைப்பதே இல்லை. ஒரு படம் முழுவதும் குரல் கொடுத்து, அந்தக் குரல் சிறப்படைந்தால், அந்த டப்பிங் குரல் கலைஞர் கொண்டாடப்படுவதில்லை. காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை படத்தில் நான்தான் பேசியிருக்கிறேன் என்பது நிறைய பேருக்கு இப்போதும் தெரியாது. எங்கள் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, எங்கள் திறமைக்கு கொடுப்பதில்லை.

நடிகைகள் ஷாலினி, தேவயானி, சுவலட்சுமி எல்லோரும் ‘நாங்கதான் பேசினோம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்’ என எனக்கு நன்றி சொன்னார்கள். சின்னத்திரை தொடர்களான ‘வேலன்’, ‘சூலம்’, ‘ராஜராஜேஸ்வரி’, ‘வள்ளி’ போன்ற சீரியல்களுக்கும் பேசி இருக்கிறேன். இப்போது தொடர்களை குறைத்துவிட்டு, மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கே அதிகம் குரல் தருகிறேன். மொழி மாற்றம் படங்களில் வேலை செய்யும்போது, நிறைய மெனக்கெட வேண்டும். மொழிமாற்றத் தொடர்களுக்கு, நிறைய குரல் தேவையிருக்கிறது.

மாதம் முழுவதும் செய்யும் ‘9 டூ 5 வேலை’ கிடையாது எங்கள் தொழில். நாம் கமிட் ஆகும் நேரத்தில் நம் வேலையை விரைவாக முடித்துக் கொடுத்துவிட்டால், இரண்டு மூன்று நாட்களில், ஒரு மாதம் முழுவதும் வேலைசெய்தால் கிடைக்கும் வருமானத்தை பெற்றுவிடலாம். அவரவர் குரலின் தேவையைப் பொருத்து, வருமானம் பெற இயலும்” என்கிறார் தன்னம்பிக்கை மிளிர. ‘‘முன்பெல்லாம் எல்லா ஆர்ட்டிஸ்டும் ஒரே இடத்தில் இருந்து குரல் தருவோம்.

யாராவது ஒருத்தர் தப்பு செய்தாலும் திரும்பத் திரும்ப ரெக்கார்டிங் போகும். எனவே எங்களைவிட சீனியர்கள், முன்னணி நடிகர், நடிகைகள் பேசுவதைப் பார்த்துப் பார்த்து கத்துக்கொண்டோம். தற்போது நிலை மாறிவிட்டது. டெக்னாலஜி வளர்ச்சியினால், அவரவர் டிராக்கை அவரவர் பேசிவிட்டுப் போகலாம்.  ஒரு சிறிய அறையிலே டப்பிங் முடிந்துவிடுகிறது. இப்போது வரும் இளம் தலைமுறையினர், சீரியலுக்காக சின்னச் சின்ன கேரக்டர் பேசி கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டுதான் வர்றாங்க.

ஒரே நாளில் பல கேரக்டர்களுக்கு குரல் தரும் தேவையும் சின்னத்திரை மூலமாக அவர்களுக்கு நிறைய வருகிறது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு என்று தனி யூனியன் இருப்பதால் எங்கள் பிரச்னைகள் எல்லாம் யூனியன் மூலம் சரி செய்யப்பட்டுவிடும். அதற்கு முதலில் யூனியனில் உறுப்பினராக இருக்க வேண்டும். பெப்சியின் கீழ் டப்பிங் யூனியன் வருகிறது. அதில் நான் வைஸ் பிரசிடென்ட் பதவியில் உள்ளேன். இதில் உறுப்பினராக உள்ளவர்கள் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் குரல் தரலாம். தொழிலை மதித்து ஈடுபாட்டுடன் செய்தால் இது ஒரு நல்ல தொழில். ஆனால் அர்ப்பணிப்பு முக்கியம்” என முடித்தார்.

ரவீனா ரவி
“நடிகைகளின் உடல் மொழியை கவனித்து அதற்கேற்ப குரல் கொடுக்க வேண்டும்.”

‘காக்கா முட்டை’ படத்தின் அசோசியேட் டைரக்டர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில், நடிகர் வித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார் ரவீனா ரவி. பிப்ரவரியில் படம் வெளியாகத் தயாராகி வருகிறது. தற்போது திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள இந்தப் படம் அனுப்பப்பட்டுள்ளது. ‘‘எனது அம்மா மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில். அனைத்து முன்னணி கதாநாயகிகளுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பதால், அவர் மூலம் எனக்கும் நடிப்பு ஆர்வம் மற்றும் டப்பிங் ஆர்வம் ஒட்டிக் கொண்டது” என பேசத் துவங்கிய ரவீனா, எத்திராஜ் கல்லூரியில் பி.பி.எம் முடித்துவிட்டு திரைத்துறைக்குள் இயங்கி வருகிறார்.

‘‘சின்ன வயதில் நிறைய விளம்பரங்களில் பேசி உள்ளேன். எனது நான்காவது வயதில் ‘தொட்டாச்சிணுங்கி’ படத்தின் ப்ரொமோவில், மழலைக் குரலாக எனது குரலை ‘தொட்ட்டடா… சிணுங்ங்கி…’ எனப் பதிவு செய்தேன். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது ‘சாட்டை’ படம் ஹீரோயின் மகிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. சங்கர் சார் இயக்கத்தில், தமிழில் எனக்கு கிடைத்த நான்காவது படம் ‘ஐ’.  ‘ஐ’ படத்தில் மிகவும் சாஃப்டா ஸ்வீட்டா இருப்பாங்க எமி ஜாக்சன். அவருக்கு படம் முழுவதும் குரல் தரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அவரின் நடிப்புக்கு எனது குரல் ஒத்துப்போயிருப்பதை அறிந்த எமி ஜாக்சன் என்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். எமி குடும்பத்துடன் எங்கள் குடும்பமும் இணைந்து முதல் நாள் முதல் ஷோ ‘ஐ’ படத்தை பார்க்க என்னை அழைத்தார். இருவர் குடும்பமும் இணைந்து ‘ஐ’ படத்தை பார்த்தோம். அன்போடும் மகிழ்வோடும் பேசினார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடிகை நயன்தாராவிற்கு, தொடர்ந்து நடிகை எமி ஜாக்சனுக்கு ‘2.0’, ‘காதலும் கடந்து போகும்’ படத்திற்காக தமிழிலும் ‘பிரேமம்’ தெலுங்கு பதிப்பிற்காகவும் நடிகை மடோனாவுக்கு, நடிகை திவ்யா என முன்னணி நாயகிகளுக்கு குரல் கொடுத்தேன்.

நடிகை மடோனாவுக்கு ஓப்பன் வாய்ஸ். முகத்தைப் பார்க்கும்போது தானாகவே வந்துவிடும் ‘அனேகன்’, ‘கத்தி’, ‘தெறி’ படங்களிலும் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறேன். மலையாளப் படங்களிலும் குரல் கொடுத்திருப்பதுடன், இதுவரை 30 முதல் 35 படங்கள்வரை பேசியுள்ளேன் என்கிறார். அம்மா எனக்கு நிறைய டிப்ஸ் தருவாங்க. ‘நிறைய முறை படத்தின் சீனை பாக்கணும்.

நடிப்பவர்களின் பாடி லாங்வேஜ் பார்க்கணும். நல்லா பண்ணியிருந்தாங்கன்னா நம்ம குரல் வழியா அவர்களின் நடிப்பை இன்னும் மெருகேத்தணும் என்பார்கள். இப்ப நடிப்பு மிகவும் கேஷுவல் ஆகிவிட்டது. அம்மா காலம் மாதிரி அடர்த்தியான நடிப்பு இல்லை. அம்மா குரல் கொடுக்கும்போது, சில வரிகளிலே அழுகை தானாக வரும். மொழி தெரியாதவர்களுக்கு பேசும் போதுதான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கேன். ’எச்சன்’ படத்தில் தீபாவுக்குப் பேசினேன். அவங்க கன்னடம். அதில் நிறைய கஷ்டப்பட்டு பேசினேன். சமீபத்திய மகிழ்ச்சியாக தனக்கு மிகவும் பிடித்த நடிகரான ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றதைச் சொல்கிறார்  ரவீனா ரவி.

மானஸி
“நடிகை தமன்னாவின் அபிமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நான்.”

‘அஞ்சான்’ படத்தில் ‘நீ நிதானமா இல்ல.. உன் கால் தரையில படல… முதல்ல நில்லு… அப்புறம் வந்து சொல்லு’ எனும் குரலுக்கு சொந்தக்காரரான மானஸி, தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பின்னணிப் பாடகி. தமிழில் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’யில் ஜி.வி.பிரகாஷின் இசையிலும், அதைத் தொடர்ந்து ‘ஆரம்பம்’ படத்தில், யுவன் ஷங்கர்ராஜா இசையில் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி….’ பாடலையும் பாடி அறிமுகமாகி தொடர்ந்து திரையுலகில் பின்னணிப் பாடகியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ‘தாரைதப்பட்டை’ படத்தில் ‘ஆட்டக்காரி மாமன் பொண்ணு…’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பை. அம்மா பாடகி. அதனால் எனக்குள்ளும் பாடகிக்கான ஃபயர் பற்றிக்கொண்டது” என சிரிக்கும் மானஸி சன் டி.வி.யின் ‘அதிரடி சிங்கர்’ மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்து, பின்னணிப் பாடகியாக தமிழ்த்திரை உலகில் வாய்ப்பை பெற்றிருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடிகை சுவாதி ரெட்டி நடிப்பிற்கு பின்னணி குரல் கொடுத்து தனது குரலுக்கான இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ‘ஜாக்சன் துரை’, ‘சவாலே சமாளி’, ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’, ‘அட்டகத்தி’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் தனது பின்னணி குரலைக் கொடுத்திருக்கிறார். பிரபல நடிகையான காஜல் அஹர்வால், பிந்துமாதவி போன்றோருக்கும் குரல் தந்திருக்கிறார். தன்னுடைய வித்தியாசமான குரலை தமன்னாவிற்கு ‘பாகுபலி’ படத்தில் வழங்கி, தொடர்ந்து ‘தோழா’, ‘தர்மதுரை’, ‘தேவி’, ‘கத்திச்சண்டை’ என தமன்னாவின் நடிப்புக்கு இவரின் குரல் அப்படியே பொருந்திப்போக, தமன்னா தன்னையே அவருடைய படங்களுக்கு தொடர்ந்து பேசச் சொல்லி கேட்பதாக மகிழ்ச்சியோடு சொல்கிறார். சமீபத்தில் ‘கொடி’ படத்தில் நடிகை த்ரீஷாவுக்கும், ‘இருமுகன்’ தெலுங்குவில் நயன்தாராவிற்கும், ‘தங்கமகன்’ தெலுங்குப் படத்தில் எமி ஜாக்சனுக்கும் இவரின் குரல் பின்னணியாக உள்ளது.

- மகேஸ்வரி