செல்லுலாய்ட் பெண்கள்



விண்ணிலிருந்து மண்ணில் வீழ்ந்த எரி நட்சத்திரம் - சாவித்திரி

மூன்று கண்ணாடிப் பட்டைகளை முக்கோணமாக்கி அதனுள் சில கண்ணாடி வளையல்களை சிறு துண்டுகளாக்கிப் போட்டு ஒளி புகாத தாளால் மூடி ஒற்றைக் கண்ணால் பார்க்கும்போது ஒன்றுபோல் மற்றொன்று இல்லாமல், கோடிக்கணக்கான வண்ண வடிவங்கள் தோன்றிக்கொண்டேயிருக்கும். சாவித்திரியின் நடிப்பும் அப்படி ஒரு கலைடாஸ்கோப் தான்!

பாசமிக்க தங்கை ராதா (பாசமலர்), வெகுளிப்பெண் கோகிலா (கைகொடுத்த தெய்வம்), வீரம் மிக்க போராளி (மகாதேவி), கள்ளர் கூட்டத்தலைவி ராணி மங்கம்மாள் (மகேஸ்வரி), கடோத்கஜன் குணங்களை உள்வாங்கிய வத்சலா (மாயாபஜார்), சுயமரியாதை மிக்க மேரி (மிஸ்ஸியம்மா), நவநாகரிகமான லலிதா, அடக்கமே உருக் கொண்ட செண்பகம் என இரட்டை வேடங்கள் (காத்திருந்த கண்கள்) வேறுபட்ட பாத்திரங்களில் வாழ்வது எளிதானதல்ல.

ஒன்றோடு ஒன்று பொருந்தாத பாத்திரங்கள் இவை. ஆனால் அத்தனையையும் வேறுபடுத்திக் காட்டியிருப்பார். அப்பாவி கிராமத்துப்பெண் செண்பகம் ஒரு துருவம் என்றால் கடோத்கஜன் என்ற அரக்கன் பெண் உருவெடுத்த பின் ஒரு ஆணைப் போல கம்பீரமான நடை, திமிர்ப்பேச்சு என ‘மாயாபஜார்’ வத்சலா மறு துருவம். இந்த இரு துருவங்களுக்கும் இடையே நூற்றுக்கணக்கான பெண் பாத்திரங்களை ஒன்றையொன்று மறைக்கும் கலைடாஸ்கோப் சித்திரங்கள்போல் தன்னைத் தீட்டிக் காட்டிய மகா கலைஞி.

‘வட இந்தியப் படங்களில் மீனாகுமாரி, வங்காளப் படங்களில் சுசித்ரா சென், தென்னிந்தியப் படங்களில் சாவித்திரி இவர்களின் குணச்சித்திர நடிப்புக்கு ஈடு இணையில்லை’ என்று முன்னோடி இயக்குநர் சாந்தாராம், ‘ஸ்க்ரீன்’ பத்திரிகையில் குறிப்பிடும் அளவுக்குத் திறமை வாய்ந்த நடிகை. 

நவரச நாயகி
சிவாஜிகணேசனின் ஆர்ப்பாட்டமான நடிப்புக்கு ஈடாக அதே பாணியைக் கைக்கொள்வார் என்றால், அடக்கி வாசிக்க வேண்டிய இடங்களில் இயல்பான நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படும். படம் படுமோசம் என்றாலும் சாவித்திரியின் நடிப்பும் பங்களிப்பும் எப்போதும் சோடை போனதில்லை. ‘நவராத்திரி’ திரைப்படத்தில் ஒன்பது வேடங்கள் ஏற்று சிவாஜிகணேசன் நவரசங்களையும் வெளிப்படுத்தினார் என்றால், அந்த ஒன்பது வேடங்களுக்கும் ஈடு கொடுத்து ஒற்றை நபராக ஒரே பாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓவர்டேக் செய்து விடும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாரோ என மலைக்கவும் வியக்கவும் வைத்தார்.

‘சத்தியவான் சாவித்திரி’ தெருக்கூத்தில் வேடம் கட்டும்போது அதில் சாவித்திரியாக ‘ஹயோ’ என்றும், ஒரு அசல் நாடக நடிகை எப்படி நடிப்பாரோ அப்படியே நகல் செய்து அலட்சியமாக ஊதித் தள்ளி விடுவாரே. மனநல விடுதியில் ஓர் இரவு தங்க வைக்கப்படும் நேரத்தில் வயது முதிர்ந்த மருத்துவர் சிவாஜியிடம் ‘அப்பர் வாக்கு, லோயர் வாக்கல்ல’ என்று பகடி செய்வதில் தொடங்கி, வார்டுக்குள் கலவையாக ஒரு பாடலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து, அவர்களில் ஒருவராக மாறி தசாவதாரமே எடுத்து, வானுக்கும் பூமிக்குமாய் ஓங்கி உயர்ந்து விஸ்வரூபமெடுத்து நிற்கும் சாவித்திரியின் நடிப்புக்கு வேறு ஒருவரை ஈடு சொல்ல முடியுமா? உடன் நடித்த அனுபவப்பட்ட நடிகையரும் தாங்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல என்பதை அக்காட்சியில் நிரூபித்தார்கள். அதிலும் இறுதியாக அந்த மேற்கத்திய இசைக்கு அவர்கள் போடும் கெட்ட ஆட்டம் அடடா….! மறக்கக் கூடியதல்லவே!
 
வெற்றிக் கூட்டணி
1956ல் வெளியான ‘பெண்ணின் பெருமை’ படத்தில் குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து, பணிப்பெண்ணால் அபின் கொடுத்து வளர்க்கப்பட்டு, மனநலம் குன்றிய இளைஞனை மணக்கும் கிராமத்துப் பெண்ணாக நடித்திருப்பார். இப்படி ஒருவரை மணக்க நேர்ந்த அவலம் அவர் முகத்தில் அப்பட்டமாக வெளிப்படும். கிடைத்த வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளும் நோக்கில், படிப்படியாக கணவனை இயல்பான மனநிலைக்குக் கொண்டு வர அவர் நடத்தும் போராட்டம் அற்புதமான நடிப்பாக வெளிப்படும்.

தன் கணவனை இழிவுபடுத்தும் கொழுந்தனைக் கண்டிக்கும் போதும், ‘அண்ணனை அடிப்பியா?’ எனக் கேட்டு கோலெடுத்து அவனை வெளுக்கும்போதும் ஆவேசமும் ரௌத்ரமும் வெளிப்படும். கணவனாக ஜெமினியும், கொழுந்தனாக சிவாஜியும் என இரு மூத்த நடிகர்களுக்கு இணையாக நடித்தது மட்டுமில்லாமல், அவர்களை மிஞ்சியும் இருப்பார். தலைப்புக்கேற்ற பெருமைக்குரிய பெண் தான் என்பதையும் நிரூபித்திருப்பார்.

சிவாஜியுடன் நடித்த முதல் படம் இது. சிவாஜியின் நூறாவது படம் ‘நவராத்திரி’ யிலும் அவரே நாயகி. பின் பத்தாண்டு காலம் இந்த மூவரும் வெற்றிக் கூட்டணி அமைத்தனர் என்றே சொல்லலாம். அதிலும் பீம்சிங் இயக்கிய ‘பா’ வரிசை வெற்றிப்படங்கள் பெரும் வரம். பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரியும் கல்லூரிக் கால வாழ்க்கை நிறைவுபெறும் வேளையில் ஏற்படும் துயரம் கல்லூரியில் படித்த அனைவரும் உணர்ந்ததுதான்.

அதை வெளிப்படுத்தும் ஃபேர்வெல் பாடல் காலம் கடந்தும் நிலைத்து நீடித்து நிற்கிறது என்றால், அது இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ரத்தத்திலகம்’ படத்தின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே…’, கண்ணதாசனின் எழுத்தில் காலம் கரைத்திடாத கானாமிர்தம். ஆனால், சாவித்திரியின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ‘பிராப்தம்’ பட நாயகனும் சிவாஜி என்பதுதான் எவ்வளவு முரண்?

நூறாவது படம் தமிழில்
1950ல் தொடங்கி 81 வரையிலான 31 ஆண்டுகளில் தெலுங்கில் 147, தமிழில் 101, கன்னடத்தில் 6, ஹிந்தியில் 6, மலையாளத்தில் 3 என 263 படங்கள். 1957ம் ஆண்டில் வெளியான 30 படங்களில் மூன்றில் ஒரு பங்கு படங்களில் சாவித்திரிதான் வியாபித்திருந்தார். நூறாவது படமாக அமைந்தது ‘கொஞ்சும் சலங்கை’ தமிழ்ப்படம், இது அவரது முதல் வண்ணப்படமும் கூட.

ஜெமினிகணேசன் இப்படத்தின் நாயகன் என்றாலும், சாவித்திரி அவரின் ஜோடியல்ல. காரக்குறிச்சியின் நாயனத்தோடு இணைந்து கசியும் எஸ்.ஜானகியின் தேனினும் இனிய குரலில் வெளிப்படும் ‘சிங்கார வேலனே தேவா’ பாடல் காட்சியைக் கண்கொட்டாமல் இப்போது பார்த்தாலும் ஏற்படும் பிரமிப்பு அகலுவதேயில்லை. அசலாக சாவித்திரியே பாடுவது போன்ற பாவனை. ஸ்வரங்களும் அந்த உதட்டசைவும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாமல் ஒத்திசைவாகப் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். 50களில் உச்சத்தில் இருந்தவர் 60களில் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டதற்கு அவரது உடல்வாகும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.

இயக்கமும் தயாரிப்பும்
தெலுங்கில் ‘நவராத்திரி’ படத்தை அவரே சொந்தமாகத் தயாரித்து நாகேஸ்வர ராவுடன் இணைந்து நடித்தார். தமிழைப் போலவே தெலுங்கிலும் படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் ‘சத்தியவான் சாவித்திரி’ தெருக்கூத்தினைத் தன் சொந்தக் குரலில் பாடினார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களாக அப்போதைய முன்னணி கதாநாய கிகள் ஜமுனா, காஞ்சனா, ஜெயலலிதா, கீதாஞ்சலி, குணச்சித்திர நடிகை சூர்யகாந்தம் போன்றவர்களையே நடிக்க வைத்தார். ‘சின்னாரி பாப்பலு’ சாவித்திரி இயக்கிய முதல் படம். இது ஆந்திரப்பிரதேச அரசின் வெள்ளி நந்தி விருதையும் வென்றது. இதையே தமிழில் ‘குழந்தை உள்ளம்’ என தயாரித்து இயக்கினார். ஜெமினி கணேசன், வாணியுடன் கௌரவ வேடம் ஏற்று நடித்தார் சாவித்திரி. தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தமிழ்ப்படம் ஏனோ பெறவில்லை.

ஜெமினியும் சாவித்திரியும் இணைந்து நடித்த இறுதிப் படமும் இதுதான். இந்தியில் வெற்றி பெற்ற ‘அஞ்சால்’ படத்தின் உரிமையை வாங்கி ‘மாத்ரு தேவதா’ என தெலுங்கில் எடுத்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. 16 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. இப்படம் பற்றியும், சாவித்திரியின் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி பற்றியும் அப்போதைய தெலுங்கு பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எதிர்மறையாகப் பெயரிட்டு வெற்றி கண்ட ‘நீர்க்குமிழி’யை தெலுங்கில் ‘சிரஞ்சீவி’ என பெயரிட்டு இயக்கினார்.

படத்தின் முடிவு அற்பாயுசானதுடன் பெயர் ராசி கூட இப்படத்தைக் காப்பாற்றவில்லை. அதேபோல, ‘வியட்நாம் வீடு’ ‘விந்த சம்சாரம்’ என தெலுங்கு பேசி நொந்த சம்சாரமாகிப் போனது. 1963ன் பிரம்மாண்ட வெற்றிப்படமான, ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற ‘மூக மனசுலு’வை ‘பிராப்தம்’ என தமிழில் தயாரித்து இயக்கினார். ஆனால், வெற்றி பெறும் பிராப்தம் சாவித்திரிக்கு இல்லாமல் போனதுதான் துயரம். அதன் பிறகும் வெற்றியை எட்டிப் பிடித்துவிடும் நோக்கில் எட்டாவது படமாக ‘லாயர் பார்வதி’ என தமிழிலும் தெலுங்கிலும் இயக்கும் எண்ணத்துடன் தொடங்கப்பட்டது, நல்ல வேளையாக அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தொடர் தோல்விகளின் காரணமாக பல ஆண்டு கால உழைப்பில் விளைந்த பல சொத்துகள் கைநழுவிப் போயின. தெலுங்கிலாவது அவரால் இரண்டு வெற்றிப்படங்கள் கொடுக்க முடிந்தது. ஆனால், தமிழில் தயாரித்து இயக்கிய இரு படங்களும் பெருத்த நஷ்டத்தையே அவருக்குப் பரிசாக அளித்தன. பெரும்பாலும் ஏற்கனவே பிற மொழிகளில் வெற்றி கண்ட படங்களையே தெலுங்கில் இயக்கினார். Proved Subject என்று சொல்லப்படும் இப்படங்கள் எப்போதும் ஒரே மாதிரியான வெற்றியை அளித்ததில்லை.

திரையுலகில் பல ஜாம்பவான்கள் இதற்கு பலியாகியிருக்கிறார்கள். சாவித்திரி சறுக்கியதும் இந்த விஷயத்தில்தான். இதற்குப் பின்னால் பல விஷயங்கள் மறை பொருளாக இருந்தன.

கலைநாயகிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம்
நந்தி விருது, குடியரசுத்தலைவர் விருது, ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருது (அப்போது இவ்விருதினை அதிக முறை பெற்றவரும் அவர்தான்), ஆந்திர மகிள சபா அளித்த மகா நடிகை விருது. தெலுங்கு மொழிக்கான சிறந்த மாநிலப்படமாக ‘சிவரக்கு மிகிலேட்டி’ தேர்வு பெற்றது. நடிகையர் திலகம் என்ற பட்டம் தமிழக அரசு வழங்கியதே.

சாவித்திரியின் வாழ்க்கையைக் கருவாக்கி, திரைப்பட ஆய்வாளர் அறந்தை நாராயணன் எழுதிய நாவல் ‘வாரந்தோறும் வயதாகிறது’. அந்த நாவலை பத்திரிகையாளர் ஞாநி, நவீன நாடகக் கலைஞர்களுடன் இணைந்து ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’ என்ற தொலைக்காட்சித் தொடராக அளித்தார். அதில் சாவித்திரியாக நடித்தவர் நடிகை வைஷ்ணவி (நடிகை சௌகார் ஜானகியின் பேத்தி இவர்). சாவித்திரியின் வாழ்க்கை பற்றி ஆங்கிலத்தில் மூன்று நூல்கள் வெளியாகியுள்ளன.

1. ‘Vendithera Vishaada Raagaalu’ by Pasupuleti Rama Rao
2. ‘Mahanati Savitri Vendithera Samaragni’ by Pallavi
3. ‘A Legendary Actress Mahanati Savitri’ by VR Murthy and V Soma media.
விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி கலாஷேத்திரம் முன்பாக மகா நடிகை சாவித்திரிக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இடதுகை தனித்திறமை
‘பாசமலர்’ படத்தை அடுத்து 1961ல் வெளியான ‘எதிர்பாராதது’ படத்தில் சிவாஜி, சாவித்திரி ஜோடியாக நடித்தனர். இதற்கு முந்தைய படத்தில் அண்ணன் தங்கையாக அமரத்துவம் பெற்ற இவர்களின் இணை நடிப்பை மக்கள் உடனடியாக ஏற்க முடியாமல், இப்படம் தோல்வியடைந்தது. இப்படத்தில் இடது கையால் ஸ்டியரிங் பிடித்தபடி அதிவேகமாகக் கார் ஓட்டிச் செல்லும் கதாநாயகி சரளா, கார் பந்தயத்தில் பங்கேற்பதாக நடித்திருப்பார்.

பின் கால்கள் இயங்க முடியாத நோயாளியாக முடங்கிப் போவார். அசல் வாழ்க்கையிலும் இடதுகைப் பழக்கம் உள்ளவர் சாவித்திரி. படப்பிடிப்புகளுக்கும் ஸ்டுடியோவுக்குச் செல்லும்போதும் அதேபோல் வேகமாகத் தனித்து தானே காரோட்டிச் செல்லும் வழக்கமுடையவர். கார்ப்பந்தயங்களிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். 1963ல் சோழவரம் கார் ரேஸில் பங்கு கொண்ட பல நடிகர்களில் முதல் பரிசை வென்றவர் சாவித்திரியே.

குடியால் நொடித்தது வாழ்க்கை
50, 60 களில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் அனைவரைக் காட்டிலும் மிகக் குறுகிய காலத்தில் பெரும் புகழையும் பொருளையும் சம்பாதித்தார். சம்பாதித்த பணத்தைத் தாராளமாக அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் அவர் இருந்தார். சுற்றியிருந்த சில கழுகுகளும் கொத்தித் தின்றன. துன்பப்படுபவர்களின் துயரம் கண்டு மனமிரங்கினார். அனைத்து நட்சத்திரங்களுடனும் இணக்கமாகப் பங்காற்றினார். எல்லோருடனும் நட்பையும், உறவையும் பேணினார். சிரிப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் பழகியவர், ஒரு கட்டத்தில் சிரிப்பையே மறந்து போகும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டார்.

பானுமதியைப் போலவோ, அஞ்சலி தேவியைப் போலவோ தாங்கிப் பிடித்துக் கொள்ளும் உறவுகள் வாய்க்காமல் போனது சாவித்திரியின் பெரும் துரதிர்ஷ்டம்தான். இருக்கும் கொஞ்சநஞ்ச சொத்தும் கரையும் முன்னர், மகளுக்கு 16 வயதில் உறவுக்காரருடன் திருமணத்தை முடித்து வைத்தார். தொடர் தோல்விகளும் பொருளிழப்பும் விரக்தியின் விளிம்பில் அவரைக் கொண்டு சேர்த்தது. குடியின் பக்கமும் நகர்த்திச் சென்றது. குடியினால் சீரழிந்து போன பெண்களைப் பற்றிய படம். நடிகை சூஸன் ஹோவர்ட் நடித்த ‘ஐ வான்ட் டு லீவ்’ ஆங்கிலப்படம்.

‘இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால் நீ பிரமாதப்படுத்தி விடுவாய்’ என்று சாவித்திரியைப் பார்த்துக் கூறுவாராம் ஜெமினிகணேசன். காலம் கடந்து ‘சுழி’ மலையாளப் படத்தில் அப்படியே நடித்தார். அவரது அசல் வாழ்க்கையே ‘ஐ வான்ட் டு லீவ்’ என துன்ப சாகரமானது. நோய்க்கூறுகளும் இணைந்து கொள்ள, பருத்த உடல், வெகு சீக்கிரத்தில் கரைந்து துரும்பானது. 1970 களின் பிற்பகுதிகளில் சாவித்திரி தலைகாட்டிய படங்களில் அவரைப் பார்க்கும்போது மனம் பதறும். ‘ஜெகன்மோகினி’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘நட்சத்திரம்’, ‘வட்டத்துக்குள் சதுரம்’ போன்ற படங்கள் அவரின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டின. ‘நட்சத்திரம்’ படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாகவே சில காட்சிகளில் தோன்றினார்.

அசல் ஜோடியின் சாதனை
சாவித்திரியுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தவர் அசல் நாயகன் ஜெமினிதான். 1953ல் ‘மனம் போல மாங்கல்யம்’ படத்தில் இணைந்து நடிக்க ஆரம்பித்தவர்கள்  1967ல்  ‘கந்தன் கருணை’, ‘சீதா’ படங்கள் வரை பதினான்கு ஆண்டு கால திரை வாழ்க்கையில் 40 படங்களை அநாயாசமாக நடித்து முடித்தவர்கள். இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், சாவித்திரியின் 150வது படம் ‘சீதா’. ஜெமினி கணேசனுக்கு 100வது படம். சீனியர் ஜெமினியைக் காட்டிலும் வேகமெடுத்து, பட எண்ணிக்கையிலும் முந்திச் சென்றவரும் சாவித்திரியே.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் இருவரும் நடித்திருந்தாலும், ஜோடியாக நடிக்கவில்லை. இருவரும் சேர்ந்தாற்போல எந்தக் காட்சியிலும் தோன்றவுமில்லை. ‘பாதகாணிக்கை’  படத்தில் ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன், விட்டு விட்டுச் சென்றானடி’ என்று சுசீலாவின் குரலில் துயரம் தொனிக்கப் பாடும் பாடல், அவரின் அசல் வாழ்க்கைக்கும் பொருந்திப் போனது பெரும் துயரம்.

புயலாய் மாறிய வாழ்க்கை
தி.நகரிலிருந்த சொந்த வீடு ஏலத்தில் போக, அண்ணா நகரில் வாடகை வீட்டுக்கு மாறினார். விழிப்புடன் செயல்படாததால் விழித்தெழவே முடியாமல் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு, ஓராண்டுக்கும் மேல் அதே நிலையிலிருந்து மீள முடியாமல் 46 வயதில் 1981ல் வெறும் சருகாகி உதிர்ந்து போனது அந்தப் பாசமலர். இவ்வளவு விரைவில் விடை பெற்றுக்கொள்வோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தானோ என்னவோ மிக விரைவாக, துரிதமாகப் பெரும் சாதனைகளை தன் நடிப்பின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். தென்னிந்தியாவிலேயே அவருக்கு இணையான ஒரு நட்சத்திரத்தைக் காண்பது அரிதினும் அரிது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு சகாப்தத்தின் சரிவாகவும் வீழ்ச்சியுமாகவே சாவித்திரியின் வாழ்க்கையை பார்க்க முடிகிறது.
 

(ரசிப்போம்!)