ஷட் அப்! நடிக்க வந்தால் எதுவும் பேசலாமா?



‘‘வணிகத் திரைப்படங்களின் நாயகிகள் குறைவான ஆடை உடுத்தி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்தானே?’’ ‘கத்திச்சண்டை’ திரைப்படம் தொடர்பான இணையதளப் பேட்டியில் இவ்வாறாகக் கூறினார் அப்பட இயக்குனர் சுராஜ். ‘‘நடிகைகள் என்றால் பணத்துக்காக ஆடை அவிழ்ப்பவர்களா? நடிகைகள் என்றால் இப்படித்தான் என முடிவு செய்ய சுராஜ் யார்?

அவர் குடும்பத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்களை இப்படிப் பேசுவாரா? இப்படியொரு மோசமான கருத்துக்காக சுராஜ் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’’ என நடிகை நயன்தாரா காத்திரமான எதிர்வினையை ஆற்றியதைத் தொடர்ந்து பலரும் சுராஜின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து தனது தவறான பேச்சுக்காக சுராஜ் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

திரைப்படங்களில் பெண்களின் சித்தரிப்பு மற்றும் கதாநாயகிகளின் பாத்திரப் படைப்பு குறித்து நீண்ட காலமாகவே பெரும் விவாதங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. பெண்களை மோகப்பொருளாக திரைப்படங்கள் காண்பிக்கின்றன என்கிற விமர்சனம் இன்றும் தொடர்கிறது. சுராஜ் தனது பேட்டியில் ‘‘பணம் கொடுத்து படம் பார்க்க வருகிறவன் நடிகையைக் கவர்ச்சியாகப் பார்க்கவே விரும்புவான்’’ என்று குறிப்பிடுகிறார்.

நடிகையின் கவர்ச்சியைக் காட்டி சம்பாதிக்கும் துறையாக திரைத்துறையை அவர் சுட்டுகிறார். நாயகிகள் வெறும் கவர்ச்சிக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறார்களா? என்றால் அது முற்றிலும் உண்மையில்லை. இந்தியில் ‘டியர் ஜிந்தகி’, ‘பிங்க்’, ‘நீர்ஜா’, தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘இறுதிச்சுற்று’ என ஒவ்வொரு மொழி திரைத்துறையிலும் கதாநாயகியை மையப்படுத்திய, பெண்களின் உலகைப் பேசுகிற படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

‘‘சண்டைக்காட்சிகளும், கவர்ச்சியும் இருந்தால்தான் பார்வையாளர்கள் வருவார்கள்’’ என்று அவர் சொல்லியிருப்பதுமே கூட முரணானதுதான். சண்டை, கவர்ச்சி இல்லாத ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘இறுதிச்சுற்று’ போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி அடைந்திருக்கின்றன. பெண்களின் வாழ்வையும், துயரையும் கருப்பொருளாய்க் கொண்டு வெளியான ‘இறைவி’ திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் இது குறித்துக் கேட்டேன்.

‘‘தான் சொன்னது தவறானது என்பதை அவரே ஒப்புக்கொண்டாரே. சண்டை இருக்க வேண்டும், கவர்ச்சியான ஆடையில் நாயகி நடனம் ஆடும் பாடல் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடெல்லாம் இப்போது எந்தப் பார்வையாளரும் படம் பார்க்க வருவதில்லை. ஸ்டார் வேல்யூவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் யார் நடித்தாலும் நல்ல படமாக இருந்தால் கொண்டாடும் மன நிலைக்கு வந்து வெகு காலமாகி விட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குப் பின்பும் அவர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு ஷார்ப்பாகி விட்டார்கள்.

அதனால் கவர்ச்சிக்காக மட்டுமே நடிகைகளை பயன்படுத்தி படத்தை ஓட வைக்க முடியாது. பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய திரைப்படங்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படியாக வரும்போது அவர்கள் கதையின் நாயகியாகத்தான் இருப்பார்கள். சினிமா இப்போது மாறி விட்டது. அந்த மாற்றத்தை உணராதவர்கள்தான் இன்னமும் கவர்ச்சியும், சண்டையும் தேவை என நம்புகிறார்கள். எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.’’

சுராஜின் பேச்சுதான் கள யதார்த்தமா? அதை எப்படியாக பார்க்க முடியும்? எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான சந்திராவிடம் கேட்டேன். ‘‘சுராஜ் சொன்னது நடிகைகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் குறிப்பது போல்தான் இருக்கிறது. சம்பளம் கொடுக்கிறோம் என்பதற்காக எத்தகைய செயலையும் செய்யச் சொல்லலாம் என்கிற மனநிலைதான் அது. சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணத்தை விதைக்கும்படியாக இருக்கிறது அவரது பேச்சு. திரைத்துறை ஆண் மையமாக இருக்கிறது.

நாயகனைத்தான் முன்னிலைப்படுத்துகிறார்களோ தவிர நாயகிகளுக்கான வலுவான பாத்திரப் படைப்பு இருப்பதில்லை. யதார்த்தமான படங்களை எடுக்கும்போது கவர்ச்சிக்கான தேவை இருப்பதில்லை. ஏனென்றால் நிஜ வாழ்க்கையில் யாரும் கவர்ச்சியான ஆடைகளை அணிவதில்லை. நிர்வாணமான காட்சிகளில் கூட நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ‘parched’ இந்திப்படத்தில் நடிகை ராதிகா ஆஃப்தே நிர்வாணக் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் அது ஆபாசம் அல்ல. பின்தங்கிய மாநிலமான ராஜஸ்தானில் பெண்கள் எப்படியெல்லாம் கசக்கப்படுகிறார்கள் என்பதை பதிவில் வைக்கும் அத்திரைப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் அவர் அப்படியாக நடித்தார்.

கலைக்கு நியாயமாக இருக்கும்போது அது தவறு கிடையாது. சுராஜின் பேச்சுக்கு எதிராக நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றனர். சொல்லப்போனால் அவர்களுக்கும்தான் இதில் பங்கு இருக்கிறது. கதைக்குத் தேவையில்லாதபோது கவர்ச்சியாக நடிக்க அவர்கள் உடன்பட்டிருக்கக் கூடாது. மீண்டும் அவர்கள் அப்படி நடித்தார்கள் என்றால் அவர்களின் எதிர்க்குரல் ஒலியற்றதாகி விடும். திரைப்படத்தில் தேவையில்லாத இடத்தில் எதையும் வலிந்து திணிக்கக் கூடாது. திரைப்படங்களில் காட்டப்படும் கவர்ச்சி என்பது அப்படிப்பட்டதுதான்.

சுராஜ் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் கள யதார்த்தம் இதை விடவும் மோசமாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க அனைத்து சினிமாக்களிலும் இந்த நிலை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் அதற்காகத்தான் சம்பளம் கொடுக்கிறோம் என்று சுராஜ் பேசிய தொனிதான் கண்டனத்துக்குரியது. வணிகத் திரைப்படங்கள் ஆண்களை மையப்படுத்துவதால் பெண்கள் மீதான இது போன்ற கண்ணோட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். யதார்த்தப் படங்களின் வருகை மட்டுமே இதனை மாற்றியமைக்கும்.

தற்போது அப்படிப்பட்ட சூழலை நோக்கி நமது சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது’’ என்கிறார் சந்திரா. கவர்ச்சியைத்தான் மக்கள் விரும்பு கிறார்கள் என்பது ஒரு கற்பிதம் என்கிறார் பெண்ணியவாதியும், கவிஞருமான குட்டி ரேவதி. ‘‘அவரது பேச்சு நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஆனால் அவரது பேச்சை வைத்து மட்டும் திரைத்துறையை முடிவு செய்து விட முடியாது. இளம் இயக்குனர்கள் இவரைப் போன்று இல்லை. நிறைய ஆண் இயக்குனர்கள் பெண்களை ஆளுமைகளாகச் சித்தரிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அது போன்ற இயக்குனர்களுடன் நான் பணி புரிந்திருக்கிறேன். இந்த காலமாற்றத்தில் திரைப்படத்தின் சிந்தனைப்போக்கு மாறி விட்டது. புதிய புதிய சிந்தனைகளோடு பல இளம் இயக்குனர்கள் வருகிறார்கள். பொது வெளிகளிலும் அவர்கள் அனைத்தைப் பற்றியும் நல்ல கருத்தையே முன் வைக்கிறார்கள். இது சுராஜின் தனிப்பட்ட மனநிலை சார்ந்த விஷயமாகத்தான் பார்க்க முடிகிறது. பெண்களை காதலிப்பதற்கான, கவர்ச்சிக்கான பொருளாகக் காட்டி எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை.

பெண் ஆளுமைகளாக முன் வைத்து எடுக்கப்பட்ட ‘பிங்க்’, ‘டியர் ஜிந்தகி’ போன்ற படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. ‘இறைவி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘மாவீரன் கிட்டு’ போன்ற படங்களில் பெண் பாத்திரப் படைப்புகள் மிகவும் வலுவானதாக இருக்கின்றன. சுராஜின் பார்வை இன்னும் பழமையானதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நயன்தாராவின் எதிர்வினை வரவேற்கத்தக்கது. நடிகையாகவும் கூட ‘மாயா’ என்கிற படத்தில் ஒட்டுமொத்த கதையையும் தாங்கி நின்றவர் தற்போது ‘அறம்’ போன்ற பெண் மையத் திரைப்படத்தில் நடிக்கிறார்.

இது முழுக்க முழுக்க கதாநாயகர்களின் மார்க்கெட்டை சார்ந்திருக்கும் துறை. இத்துறையில் பல நடிகைகள் அசாதாரண முயற்சிகள் செய்திருக்கிறார்கள். நடிகைகளுக்கு காதல் பாட்டுக்கும், குத்துப்பாட்டுக்கும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றால் அது நடிகைகளின் தவறு அல்ல. இயக்குனர்களை நோக்கி எழுப்ப வேண்டிய கேள்வி இது. நாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற இயக்குனர்கள் யாரும் சுராஜ் போன்று தவறாகப் பேசுவதில்லை.

ஆண்களை முன் வைக்கிற ஆண் மைய சினிமாவில் நடிகையாக இருப்பது எவ்வளவு பெரிய சவாலானது தெரியுமா? ‘மரியான்’ படத்தில் அசோசியேட்டாக பணிபுரிந்தபோது இதனை நான் நேரடியாகப் பார்த்து உணர்ந்திருக்கிறேன். நடிகர்களைப் போலவே நடிகைகளும் பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் திரைத்துறைக்குள் நுழைகிறார்கள்.

கவர்ச்சியைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதெல்லாம் கற்பிதம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கிறபடியான திரைப்படங்களைத்தான் பெரும்பான்மையானவர்களின் எதிர்பார்ப்பு. இன்றைய இளம் இயக்குனர்களிடம் பெண்கள் குறித்த சம உணர்வு இருக்கிறது. இது போன்ற கருத்தாக்கம் கொண்டவர்கள் திரைத்துறைக்கு வரும்போதுதான் நல்ல படங்கள் சாத்தியப்படும்” என்கிறார்.

- கி.ச.திலீபன்