ஜனனி...ஜனனி...புதிய இசையமைப்பாளர்



நடிகை, பாடகி, டப்பிங் என்ற எல்லைகளைத் தாண்டி பெண்கள் திரைத்துறையில் சாதிப்பது என்பது மிக அரிது. திரைத்துறையில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது போன்ற சில காரணங்களால் பெரிய திரைக்கு வரும் பெண்கள் குறைவுதான். எப்போதாவது ஆங்காங்கே இயக்குநர், பாடலாசிரியர், மேக்கப் என பெண்கள் வருவதுண்டு. ஆனால் அதிலும் பல காலம் காலூன்றியவர்கள் இங்கே குறைவு.

ஆனால் தற்போது பெரும்பாலும் பெண்களைக் கொண்டு பெண்களுக்காக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படம் ‘பிரபா’. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் அந்த படத்தின் இசையமைப்பாளரும் ஒரு பெண்தான். இயக்குனர் நந்தன் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்தில் இசையமைத்துப் பாடி இருக்கும் எஸ்.ஜெ.ஜனனி தம் இசை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

“நான் சின்னக் குழந்தையாக இருந்தப்பவே எனக்குப் பாடுவதில் அதிகம் விருப்பம் இருப்பதை முதலில் தெரிந்துகொண்டவர் என் தாய் மாமா சங்கர் (கணேஷ்) அவர்கள் தான். மூன்று வயதில் இருந்து பாட்டுக் கிளாஸ் போக ஆரம்பித்தேன். தொடர்ந்த எனது பயிற்சியால் ஐந்து வயதில் இருந்தே மேடைகளில் கச்சேரி பாட ஆரம்பிச்சேன். கச்சேரிகளில் பாடுவதோடு முதன்முதலாக ஏழு வயதிலேயே ‘நாத ஒளி’ என்னும் ஒரு ஆல்பம் ஒன்றில் பாடினேன். குமார் தேவா சார் மியூசிக் பண்ணி இருந்தாங்க.

அந்த ஆல்பத்திற்காக எனக்கு விருது (National Award For Exceptional Achievement in Classical Music) கிடைத்தது. பிறகு ஒன்பது வயதில் ‘பூங்காற்று’ என்னும் மற்றொரு ஆல்பம். இசை எல்.வைத்தியநாதன். அதில் எல்லா பாடல்களும் வைரமுத்து சார் எழுதி இருந்தார். நான் பாடியதைக் கேட்ட வைரமுத்து சார் ‘இனி நீ என் பொண்ணு மாதிரிம்மா’ன்னு சொன்னாங்க. எஸ்.பி.பி சாருடன் பாடும் வாய்ப்பு இதில் கிடைத்தது. அவரும் என்னை ரொம்ப பாராட்டி நான் இசைத்துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசீர்வாதம்
செய்தார்.

அதன் பிறகு இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறேன். கிட்டதட்ட 1000 நிகழ்ச்சிகள் பாடி இருப்பேன். பண்டிட் ஹரிபிரசாத் சவுராஜ்யாவுடன் இணைந்து நிகழ்த்திய ஜுகல் பந்தி மறக்க முடியாதது. அவர் இந்துஸ்தானி கிளாஸிக்கல் ஃப்ளூட் வாசித்தார். நான் கர்னாடிக் கிளாஸிக்கல் வோகல். பிரான்சில் உள்ள அலாம்பரா என்றொரு கலையரங்கத்தில் இந்நிகழ்வு நடந்தது. அந்த மாதிரி பெரிய மாஸ்டரோடு ஒரே மேடையை பகிர்ந்து கொண்டது மிகப்பெரிய வாய்ப்பு” என்றபடி இனிமையான குரலில் பேசுகிறார் ஜனனி.
 
‘கலை இளமணி விருது’, ‘யுவகலா புரஸ்கார்’ போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கும் ஜனனி, மியூசிக்கில் எம்.ஃபில் வரை படித்திருக்கிறார். இப்போது மியூசிக்கில் பிஎச்.டி செய்து கொண்டிருக்கிறார். இசையில் தன் வளர்ச்சி குறித்து மேலும் அவர் பேசுகையில்... “என் மாமாவின் ஜெஎஸ்ஜெ ஆடியோ கம்பெனியின் சார்பாக முதன் முதலாக 2012ல் ‘வந்தே மாதரம்’ என்று ஒரு ஆல்பம் தயாரித்தோம். அதில் மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு நான் இசையமைத்திருந்தேன். அது ஒரு பெரிய ப்ராஜெக்ட்.

ஹரிஹரன் சார், உன்னிகிருஷ்ணன் சார், எஸ்.பி.பி சார் ஆகியோர் இந்த ஆல்பத்தில் பாடி இருந்தார்கள். அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதற்குப் பிறகும் தனிப்பாடல் பலவற்றிற்கு இசையமைத்திருக்கிறேன். நிறைய தீமேட்டிக் ஆல்பங்கள் பண்ணி இருக்கேன். கிட்டத்தட்ட 23 ஆல்பம் வரை பண்ணி இருக்கேன். இதில் பலவித பாணிகளில் இசை அமைத்திருக்கிறேன்.
 
அந்த சமயத்தில் இந்த ‘வந்தே மாதரம்’ ஆல்பத்தைக் கேட்ட டைரக்டர் நந்தன் சார் ‘என் முதல் படத்துக்கு நீதான் இசையமைக்கப் போகிறாய்’ என்று சொல்லி இருந்தார். சொன்னபடி, தான் இயக்கிய ‘பிரபா’ படத்தில் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தார். எதிர்பார்க்காத சமயத்தில் இந்த வாய்ப்பு கிடைச்சப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ‘பிரபா’ படம் ஹீரோயின் சப்ஜெக்ட். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்த படத்தில் எனக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கணும் என்று கடுமையா உழைச்சேன்.

இந்த படத்தில் புதிய இசைக் கருவிகளை என் இசையில் அறிமுகப்படுத்தி இருக்கேன். ரீரெக்கார்டிங் மற்றும் பாடல்கள் எல்லாமே நானே பண்ணி இருக்கேன். வித்தியாசமான இசையைக் கொடுத்திருக்கேன்னு நம்புறேன். இதில் மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கின்றன. குத்துப்பாட்டு, மெலடின்னு பலவித ரகமான பாடல்கள் இருக்கு. அதில் பெண்ணுரிமை பேசும் இந்த படத்தின் முக்கியமான பாடல் ‘பூவே பேசும் பூவே…’ இந்த பாடலை எழுதியவர் தேவி. மறைந்த என்னுடைய குருஜி டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா சார்தான் அந்த பாடலைப் பாடி கொடுத்தாங்க.

இது அவரோட கடைசி சினிமா பாடல். இது மறக்க முடியாத விஷயம். அவர் இந்த பாட்டை என்னோட சேர்ந்து பாடி இருக்காங்க. அது எனக்கு கிடைச்ச பாக்கியம். நான் அவரிடம் 10 வருஷமா பாட்டு கத்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயம் ‘எனக்கு ஒரு படம் மியூசிக் பண்ற வாய்ப்பு வந்திருக்கு. நீங்கள் அதில் கண்டிப்பா எனக்கொரு பாட்டு பாடிக்கொடுக்கணும்’ என்று கேட்டபோது ‘அதுக்கென்னமா பாடிட்டா போச்சு’ என்று அவர் உற்சாகமா சொன்னப்பவே எனக்குள் ஒரு பெரிய சந்தோஷம் பிறந்தது. எனர்ஜிட்டிக்காக இருந்தது.

‘பூவே பேசும் பூவே’ வின் ட்யூட் வெர்சன் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து பாடி இருக்கோம். சோலோ நான் மட்டும் பாடி இருக்கேன். அவர் இந்தப் பாடலை பாடும் போது ‘இது ஓ.கே வாம்மா’ ‘உனக்கு திருப்தியாம்மா’ன்னு கேட்டு கேட்டுப் பண்ணப்ப பிரமிப்பாக இருந்தது. ‘இந்த ட்யூன் என் மனசில நிக்குதும்மா... ட்யூன் நல்லா இருக்குமா’ன்னு சொன்னது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஹரிஹரன் சார், பாலக்காடு ராம் சார், விஜய் பிரகாஷ் சார், ஸ்வேதா மோகன் ஆகியோரும் இந்த படத்தில் பாடி இருக்கிறார்கள். என் கல்லூரித் தோழி சௌமியா பாடி இருக்கிறார். எப்போதுமே இசையோடு பயணித்திருந்தாலும் இந்த படத்திற்கு இசையமைத்த அனுபவம் புதுமையானது.

கீபோர்டிலும் 8 கிரேடு & தியரி கத்துருக்கேன். கர்னாடிக் இசை மற்றும் இந்துஸ்தானி கிளாஸிக்கல், வெஸ்டர்ன் இசை, பஜன், கஜல் என எல்லாமே கத்துக்கிட்டு இருக்கேன். சின்ன வயதில் இருந்தே எனது மாமா நிறைய விதமான இசைகளை கேட்கச் சொல்வார். அதனால் நிறைய இசையைக் கேட்டிருக்கேன். பயணங்கள் போகும் போது சினிமா பாடல்களும் கேட்பேன். ராக், ஜாக், நாட்டுப்புறப் பாடல்கள்னு எல்லா வகையான பாடல்களும் கேட்பேன். கேட்கிறது, பாடறதுன்னு இசையோடு ஊறி இருந்ததால் இசை அமைப்பதில் கஷ்டம் எதுவும் இருக்கவில்லை.

எனக்கு இது சுலபமா கை வந்தது. வாய்ப்பு வந்த மறுநாளில் இருந்து இசை கம்போஸ் பண்ற வேலையை ஆரம்பிச்சோம். டைரக்டர் பாடல் வரிகளை முதலிலே என்னிடம் கொடுத்துவிட்டார். ஒரு குத்துப்பாட்டிற்கு 5 நிமிடத்தில் மியூசிக் கம்போஸ் பண்ணினேன். பாடல்கள் கம்போஸ் பண்ணி ரெக்கார்டு பண்ண ஒரு வாரம் ஆச்சு. ரீரெக்கார்டிங், முழு பின்னணி இசை ஸ்கோர் பண்ண கிட்டதட்ட ஒரு  மாதம் ஆச்சு. பாடல்கள் அவசரமாக தேவைப்பட்டதால் இரவும் பகலுமாக வேலை செஞ்சோம்.
 
இந்தப் படத்தில் இசையமைக்கும்போது எனக்கு  முழு சுதந்திரம் கிடைத்தது. ஒர்க் பண்ணவும் நல்ல ஸ்பேஸ் கிடைத்தது. பட டீம் எனக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தாங்க. பாடல் வெளியானவுடன் பலரும் பாராட்டினார்கள். ‘ஒவ்வொரு படத்திலும் ஒரு சில பாடல்கள்தான் நல்லா இருக்கும். ஆனால் இந்த படத்தில் எல்லாப் பாடல்களும் பிடித்தது. ஆன்மாவை தொடும்படி இருக்கிறது’ என்று கேட்டவர்கள் சொன்னார்கள்.
 
இந்த வளர்ச்சியை நான் அடைய என் மாமா, என் குடும்பத்தார், எனக்கு இசை கற்றுத்தந்த ஆசிரியர்களும்தான் காரணம். இனிமேலும் இது மாதிரியான நல்ல தயாரிப்பில் நான் படங்கள் பண்ணணும். இனி வரும் படங்களிலும் மேலும் மேலும் நல்ல இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு திரை இசையில் புதிய பரிமாணங்களை கொடுக்கணும் என்பது தான் என் விருப்பம்” என்கிறார் புன்னகை இழையோட. தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் பெண் இசையமைப்பாளர்கள் மிகக் குறைவு. இத்தகைய திறமையான புதுவரவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்போம்.

 - ஸ்ரீதேவிமோகன்