100 பொருட்களின் வாயிலாக பெண்கள் வரலாறு



ஜனநாயகத்தின் பொருள் தெரியுமா?

பொருள் 40: அடிமைகளும் பெண்களும்
மேற்குலக நாடுகளின் தாயகம் என்று கிரீஸ் அழைக்கப்படுவது வழக்கம். கலை, இலக்கியம், கணிதம், தத்துவம் என்று மேன்மையானவை அனைத்தையும் கிரேக்கத்திடம் இருந்தே நாங்கள் கற்றுக்கொண்டோம் என்று மேற்கத்திய அறிஞர்கள் சொல்கிறார்கள். ஜனநாயகத்தை உலகுக்கு வழங்கிய தேசம் என்றும் கிரேக்கத்தைப் பலர் உயர்த்திப் பிடிக்கிறார்கள். மேற்குலகுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் கிரேக்கமே அறிவொளியை வழங்கியது என்றும்கூடச்சொல்லப்படுகிறது.

அதே சமயம், பெருமிதத்துடன் இப்படி அறிவிக்கமுடியாத இன்னொரு அம்சமும் கிரேக்கத்திடம் இருந்தது. மக்கள் என்பது டெமோஸ் என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள். டெமாக்ரஸி என்றால் மக்களால் ஆளப்படும் அரசு. ஆனால் இச்சொல்லையும் கருத்தையும் வழங்கிய கிரேக்கம், மக்களின் அரசை இறுதிவரை அமைக்கவேயில்லை. மக்களில் ஒரு பகுதியினரை அடிமைகளாக்கி அவர்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் ஒதுக்கிவைத்தது கிரேக்கம்.

அடிமைகளை வைத்திருக்கும் உரிமையை ஒரு சாராருக்கு வழங்கிவிட்டு மக்கள் ஆட்சியை எப்படி அமைக்க முடியும்? அது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்? பெண்கள் விஷயத்திலும் இதுதான் நடந்தது. ஜனநாயகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சோலோன். பொயுமு 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அரசாங்கம் எப்படிச் செயல்படவேண்டும், எத்தகைய சட்ட திட்டங்களை அது பின்பற்றவேண்டும், ஒரு மனிதன் எவ்வளவு நிலம் வைத்திருக்கவேண்டும், யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கவேண்டும், அரசு சபை எப்படி இயங்கவேண்டும் என்று தொடங்கி சோலோன் பல விஷயங்களைத் தெளிவாக வரையறை செய்திருந்தார்.

ஏதென்ஸில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, பிற நகரங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்திருந்தவர்களுக்கும் சோலோன் குடியுரிமை வழங்கினார். அப்போதைய காலகட்டத்தைப் பொருத்தவரை இது ஒரு முற்போக்கு நடவடிக்கை. மற்ற அண்டை நகரங்களோடு ஒப்பிடும்போது, சோலோனின் ஏதென்ஸ் பல வகைகளிலும் முன்னேறியிருந்ததோடு பெரிதும் மாறுபட்டும் இருந்தது. இருந்தும் ஏதென்ஸில் அப்போது குடியுரிமை பெற்றிருந்தவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் ஆறு சதவிகிதம் மட்டுமே. காரணம்,
அடிமைகளுக்கும் பெண்களுக்கும் குடியுரிமை வழங்கப்படவில்லை.

பல விஷயங்களில் முற்போக்கு எண்ணத்துடன் இருந்தாலும் அடிமைகளையும் பெண்களையும் சோலோன் மற்ற ஆண்களைப் போலவேதான் கண்டார். உண்மையில் இந்த இருவரையும் அவர் சமமாகத்தான் மதிப்பிட்டிருந்தார். அவர் வாழ்ந்த சமூகத்தின் மதிப்பீடும் அதுதான். திருமணமான ஒரு பெண்ணை கிரேக்கர்கள் ‘தமார்’ என்று அழைத்தனர். இதன் பொருள் ‘அடங்கிபோதல்’ அல்லது ‘தாழ்ந்து போதல்’. ஓர் அடிமையிடம் எதிர்பார்க்கும் அதே பண்புகளை ஒரு பெண்ணிடமும் எதிர்பார்த்தது கிரேக்கம்.

எனவே அவர்களை அடிமைகள் போலவே சம தட்டில் வைத்து அணுகியது. இருவருமே தங்களுடைய எஜமானர்களை கடவுளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கட்டளைகளை பவ்யத்துடன் நிறைவேற்றுவதொன்றே கடமை என்று செயல்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டனர். மணமான பெண்ணைக் கணவன் வீட்டினர் வரவேற்று உள்ளே அழைத்துச்செல்ல சடங்கு செய்வார்கள். புதிய வீட்டுக்குள் நுழையும் அந்தப் பெண்ணுக்கு நல்ல அதிர்ஷ்டம் வாய்க்கவேண்டும் என்பதே இந்தச் சடங்கின் நோக்கம்.

வீட்டிலிருப்பவர்களின் குணநலன்களைப் புரிந்துகொண்டு ஒழுக்கத்தையும் உயர் பண்புகளையும் அவள் பேணவேண்டும் என்றும் குடும்பத்தின் வளத்தை அவள் பெருக்கவேண்டும் என்றும் இந்தச் சடங்கை நடத்துபவர்கள் விரும்பினார்கள். தங்களுடைய விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கும்வண்ணம் இந்தச் சடங்கு விமரிசையாக ஒவ்வொரு வீட்டிலும் நடத்தப்பட்டது. நான் இந்த வீட்டுக்காகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொடுப்பேன், அதற்குத் தகுதியானவளாக என்னை வளர்த்துக்கொள்வேன் என்று அந்தப் பெண் இந்தச் சடங்கின்போது உறுதியளிப்பார். 

சில சமயம், வண்டியின் சக்கரத்தை அந்தப் பெண் எரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார். என்னை அழைத்து வந்த வண்டியில் இனி நான் ஏற மாட்டேன், வேறு எங்கும் சென்றுவிட மாட்டேன், இந்த வீட்டுக்கே என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என்பதை உணர்த்தவே இந்தக் குறியீட்டுச் சடங்கு. ஒரு புதிய அடிமையை எஜமானர் தன் வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது இதேபோன்ற சடங்குகள்தான் மேற்கொள்ளப்பட்டன.

இதே போல் விமரிசையான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன. வீட்டுக்கு வளம் சேர்க்கும் வகையில் அடிமை செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அடிமைக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவேண்டும் என்றும் அந்த அதிர்ஷ்டம் வீட்டிலும் பரவவேண்டும் என்றும் எஜமானர்கள் விரும்பினார்கள். அடிமை தன்னுடைய பழைய வீட்டை, நினைவுகளைத் துறந்துவிடவேண்டும் என்றும் புதிய வீட்டையே தன்னுடைய நிரந்தர அடையாளமாக ஏற்கவேண்டும் என்றும் எஜமானர்கள் எதிர்பார்த்தனர். ஒரு கூடை முழுக்க உலர்ந்த பழங்களை எடுத்துவந்து அடிமையின் தலைமீது அதைக் கவிழ்த்து வீட்டுக்குள் அழைத்துச் செல்வார்கள்.

இதுவே சடங்கின் முக்கியமான பகுதி. மேலுலகின் ஆசீர்வாதம் என்று இதைக் கருதலாம். கணவன் வீட்டுக்குள் முதலில் நுழையும் பெண்ணின் தலையிலும் இதேபோல் ஒரு கூடை பழம் கவிழ்க்கப்படும். வரவேற்புச் சடங்கில் தொடங்கும் இந்த ஒற்றுமை அத்துடன் முடிந்துவிடவில்லை. புது வீடு புகுந்த இருவரும் பல விதங்களில் ஒன்றுபோலவே நடத்தப்பட்டனர். இருவருக்கும் சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்காது. அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் அரசு தலையிடாது. மற்றவர்களும் தலையிடமுடியாது.

ஒரு பெண் அவள் கணவனின் உடைமை. ஓர் அடிமை அவனுடைய எஜமானரின் உடைமை. உடைமையை வைத்திருக்கவேண்டுமா அழிக்கவேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்தான் முடிவு செய்யவேண்டும். அடிமை, பெண் இருவருமே தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டனர். அவர்களுடைய செயல்பாடுகள் மட்டுமல்ல சிந்தனைகள்கூட தணிக்கை செய்யப்பட்டன. அவர்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதற்குத் தெளிவான சட்டத்திட்டங்கள் இருந்தன.

பெண்களைக் கவனித்துக்கொள்வது அரசின் கடமையல்ல என்றபோதும் அவர்களைக் கண்காணிப்பது அரசின் கடமையாக இருந்தது.  சோலோன் பெண்களை இரண்டாகப் பிரித்து வைத்திருந்தார். முதல் பிரிவினர், நல்ல பெண்கள் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாவது பிரிவினர், மோசமான நடத்தை கொண்டவர்கள். இவர்கள் தீவிர உடல் இச்சை கொண்டவர்கள் என்று கருதப்பட்டதால் அவர்களைத் தொகுத்து பாலியல் விடுதிகளில் அடைத்து வைத்தனர். அரசே இந்தப் பாலியல் விடுதிகளை நிர்வாகம் செய்துவந்தது. ஏதென்ஸ் குடிமக்கள் இந்தப் பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதல் பிரிவினரான நல்ல பெண்களை முழுவதுமாக அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டுவிடமுடியாது என்று சோலோன் கருதினார். மோசமான பெண்கள் போலின்றி அவர்களுடைய நல்ல குணநலன்கள் காக்கப்படவேண்டுமானால் அவர்கள் சரியான முறையில் வழிநடத்தப்படவேண்டும் என்பது சோலோனின் நம்பிக்கை. எனவே நல்ல பெண்களை அவருடைய அரசு தானே முன்வந்து கண்காணித்தது. ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கவேண்டும்? வெளியில் செல்வதென்றால் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு தூரம் வரை ஒரு பெண் செல்ல அனுமதிக்கலாம்? யாருடன் அவள் செல்லவேண்டும்?

எந்த மாதிரியான ஆடை உடுத்திக்கொள்ளவேண்டும்? விலக்கப்பட்டவை என்னென்ன? என்னவெல்லாம் உண்ண அனுமதிக்கலாம்? அருந்துவதற்கான பானங்கள் எவை? வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அவள் எப்படி வரவேற்கவேண்டும்? எப்படி வரவேற்கக்கூடாது? இந்தக் கேள்விகளுக்கு அரசு விடைகள் வைத்திருக்கவேண்டும் என்று சோலோன் எதிர்பார்த்தார். விடைகளைக் கண்டுபிடிக்கவும் செய்தார். இந்த விதிகளை சமூகம் தெரிந்துகொண்டது.

பெண்கள், அடிமைகள், எஜமானர்கள், கணவர்கள் அனைவரும் இந்த விதிகளைத் தெரிந்துவைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடிமைகளையும் பெண்களையும் கட்டுக்குள் வைத்திருப்பதன்மூலம் சமூகத்தின் அமைதியை நிலைநாட்டமுடியும் என்று சோலோன் நம்பியதாகத் தெரிகிறது. அதிலும் அடிமைகளைக் காட்டிலும் பெண்களுக்கு மேலதிகக் கவனம் தேவைப்பட்டது என்று அவர் நினைத்தார். எனவே அரசு உளவாளிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சமூகத்தின் நல்ல பெண்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுடைய நடத்தையை ஆராய்ந்து அவ்வப்போது அரசுக்குத் தகவல் அளித்தனர். ஜனநாயகத்தை நிலைநாட்டும் பணியை அதன் தந்தை இப்படித்தான் தொடங்கிவைத்தார்.
 
பொருள் 41: போரும் பெண்களும்
சோலோமின் பணியை மேலும் பலர் செம்மைப்படுத்தினார்கள். பெண்களை என்ன செய்யவேண்டும் என்பதைக் குடும்பங்கள் தீர்மானித்தன. தேவைப்படாத பெண் குழந்தைகளை அவர்கள் கொன்றொழித்தனர். கொல்லமுடியாதவர்களை அடிமைகளாக வளர்த்தனர். சொந்த வீட்டிலேயே பெண் குழந்தைகள் அடிமை ஊழியம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டனர். அரசு இதில் தலையிடவில்லை. கிரேக்கத்தின் சில பகுதிகளில் பெண் குழந்தைகளைக் கொல்வது தடை செய்யப்பட்டிருந்தது.

அங்கெல்லாம் பெண் குழந்தைகள் கானகப் பகுதிகளில் கைவிடப்பட்டனர். கைவிடுவது கொல்வதாகாது என்று சொல்லப்பட்டது. வளர்ந்த பெண் குழந்தைகளை வீட்டிலிருப்போரே அழைத்துச் சென்று பாலியல் விடுதி களில் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். கிரேக்கப் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவில் போதுமான சத்து இருக்கவேண்டியதில்லை. அதன் காரணமாக அவர்கள் இறந்தாலும் சிக்கலில்லை. பெண் குழந்தைகள் மீது பாசம் காட்டத் தேவையில்லை.

பெண்கள்மீது கருணை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. உடல் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள பாலியல் விடுதிகள் இருக்கின்றன; எண்ணிக்கையில் குறைவில்லாத பெண்கள் அங்கே தடையின்றி கிடைக்கவும் செய்கிறார்கள். மேலும், ஓர் ஆண் பெண்மீது மட்டும்தான் காதல் வயப்படவேண்டும் என்னும் அவசியமும் இல்லாத அளவுக்கு ஒருபால் ஈர்ப்பாளர்களின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. அது இயல்பானதொன்றாகவும் கருதப்பட்டதால் பெண்களை எதற்கும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்னும் கருத்து பரவலாக ஆண்கள் மத்தியில் படர்ந்திருந்தது.

திருமணம் செய்துகொண்டுதான் வாழவேண்டும் என்று விருப்பப்பட்டவர்களுக்குப் பெண்கள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்கவில்லை. 12 அல்லது 13 வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆண்கள் நாற்பது வயதில்தான் பொதுவாக மணம் செய்துகொண்டனர். அவர்களும்கூட அவ்வப்போது மூளும் போர்களில் கலந்துகொண்டு மரணமடைந்ததால் ஏராளமான பெண்கள் விதவைகளாகத் தனித்துவிடப்பட்டிருந்தனர். அவர்களை மீண்டும் ஏதென்ஸ் ஆண்கள் மணந்துகொண்டனர்.

அடுத்தடுத்து போர்கள் நடந்துகொண்டே இருந்ததால் தொடர்ச்சியாகப் போர் வீரர்கள் இறந்துகொண்டிருந்தனர். தொடர்ச்சியாக விதவைகள் உருவாகிக்கொண்டே இருந்தனர். அவர்கள் மீண்டும் மீண்டும் ஆண்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மணம் செய்துகொள்ளப்பட்டனர். எனவே ஆண் பெண் விகிதாசாரம் மோசமான நிலையைத் தொடவில்லை.

பெண்களின் பணி குழந்தை பெற்றெடுப்பது மட்டும்தான். அதாவது போர் இயந்திரத்தின் கரங்களை வலுப்படுத்தும் முறையில் ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி, ஒவ்வோர் ஆணுக்கும் பல குழந்தைகளைப் பெற்றுக்கொடுக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். பிறக்கும் குழந்தைகள் பெண்களாக இருந்துவிட்டால் அவை கணக்கில் வராது. அடிக்கடி யுத்தங்கள் நேர்ந்தபோதும், போரில் இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதும் பெண்களைவிட ஆண்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக இருந்தது.

பெண்களின் சராசரி வாழ்நாள் 36 என்றால் ஆண்களுக்கு 45. அதற்கான காரணம் வெளிப்படையானவை. பிறந்தது முதல் ஊட்டச்சத்து குறைவான உணவே பெண்களுக்கு வழங்கப்பட்டதால் பெண்கள் பொதுவாகவே உடல் வலுவற்ற நிலையில் இருந்தனர். இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, பிரசவத்தையும் சந்திக்கவேண்டியிருந்ததால் உடல் மேலும் பலவீனமடைந்தது. கணக்கு வழக்கில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டியிருந்ததால் பல பெண்கள் பதின்ம வயதைக் கடப்பதற்கு முன்பே இறந்துபோயினர்.

அதையும்மீறி தாக்குப்பிடிப்பவர்கள் முப்பது  வயதைத்தொடும்போது உடல் வற்றிப்போய், வலுவிழந்து, நோய்கள் பலவற்றால் தாக்குண்டு நடைபிணங்களாக மாறினர். முப்பத்தைந்துக்குமேல் அவர்களால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. இதன் பொருள், போர்க்களங்களைவிட ஆபத்தானவையாக குடும்ப அமைப்பு இருந்தது என்பதுதான். போர்க்களம் கொன்ற ஆண்களைவிட குடும்ப வாழ்க்கை கொன்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

போர்க்களத்தில் வெற்றி பெற்ற ஆண்கள் பலர் இருந்தனர். ஆனால் குடும்ப அமைப்பை வென்ற பெண்கள் அநேகமாக ஒருவரும் இல்லை. போரைக் காட்டிலும் குடும்பம் அதிக வன்முறை கொண்ட ஓர் அமைப்பாக இருந்தது. அதிலிருந்து தப்பிக்க பெண்களுக்கு வழியிருக்கவில்லை. உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி ஆண்களைக் காட்டிலும் அதிக வன்முறையை எதிர்கொண்டபோதும் பெண்களின் தியாகம் கிரேக்கச் சமூகத்தால் பொருட்படுத்தப்படவில்லை. போர்க்கள வீரர்களின் சாகசங்கள் மட்டுமே புகழப்பட்டன. ஆண்களின் வீரம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டன. ஆண்களே சமூகத்தின் தூண்களாகக் கருதப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே மனிதர்களாகக் கருதப்பட்டனர். இதுவே ஜனநாயகம் என்றும் அழைக்கப்பட்டது.

(வரலாறு புதிதாகும்!)