திரைக்குப் பின்னணியில்



ஒரு திரைப்படத்திற்கு கதை, கதையின் களம் மற்றும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு அந்தப் படத்தின் ஒலி அமைப்பும் மிக மிக முக்கியம். 25 ஆண்டுகளுக்கு மேல் இந்தத் துறையில் இயங்கி வரும் சவுண்ட் இன்ஜினியர் சுதா. இவர் சவுத் இந்தியா ‘சினி ஆடியோ கிராஃபர்ஸ் அசோசியேஷனில்’ பொருளாளராக இருக்கிறார். ஒலிப்பதிவுத் துறையில் ஃப்ரீலான்ஸாகவும் இயங்குகிறார். இது தவிர்த்து ஸ்டுடியோ ஸ்டேஷன் டிசைன் செய்து தருவதுடன், எஸ்.ஆர்.எம். சிவாஜிகணேசன் திரைப்படக் கல்லூரியில் சவுண்ட் லெக்சரராகவும் பணியில் உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா மொழிகளில் ஐநூறு முதல் அறுநூறு படங்களுக்கு மேல் இதுவரை வேலை செய்துவிட்டேன். பள்ளிப்படிப்பு முடிந்து அடுத்து என்ன செய்யலாம் என நினைத்தபோது இசைத்துறை மீது இருந்த ஆர்வத்தால் வித்தியாசமான இத்துறையை தேர்ந்தெடுத்து, சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் இணைந்துவிட்டேன். மூன்றாண்டு பட்டயப் படிப்பாக ‘சவுண்ட்  இன்ஜினியர் அண்ட் ரெக்கார்டிங்’ படித்தேன்.

எனது காலத்தில் வேலை செய்வது மிகவும் ஈஸியாக இருந்தது. எனது முதல் ஒலிப்பதிவு கிருபானந்தவாரியாருடன், காம்ப்ரமைஸ் இல்லாமல் நான் அவரை இயக்கினேன். பேசும்போது ப்ளோ வந்து டேக் வாங்கினார். ‘வயசானவன் என்று கூட பார்க்காமல் என்னை பின்னி எடுத்துட்டே’ என பாராட்டினார். தென்னிந்தியாவில் ஆவிட் வாங்கிய முதல் நிறுவனம் நவோதயா. இதில் முதல் டிஜிட்டல் செட்டப்பை ஆவிட் நிறுவனம் ஏற்படுத்தினர். அதில் நான் லைவ் ரெக்கார்டிங் பண்ணினேன்.

அதைத் தொடர்ந்து ’மகாநதி’ படம் பண்ணினேன். அதன் பிறகு பிரசாத் ஸ்டுடியோவில் இணைந்து 17 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்திருக்கிறேன். இந்தத் துறையில் அர்ப்பணிப்பும், ஆர்வமும்தான் நம்மை நிலைநிறுத்தும். பெரும்பாலும் நான் ரெக்கார்டிங் போனால் உணவை லைட்டாக எடுத்துக்கொள்வேன். எனது மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்வேன். இயக்குநர் பாலுமகேந்திரா சாருடன் ‘அது ஒரு கனா காலம்’ துவங்கி ‘ஜுலி கணபதி’, ‘தலைமுறைகள்’ படம் வரை வேலை செய்துள்ளேன்.

இயக்குநர் மணிரத்தினம் சாருடன் ‘உயிரே’, ‘தில்ஸே’, ‘குரு’ எனத் தொடர்ந்து பல படங்களில் அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குநர் செல்வராகவன் சாருடன், ‘7ஜீ ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களிலும், மலையாள ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி சாருடன் இணைந்து ‘பழசி ராஜா’ தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வேலை செய்துள்ளேன். எல்லா பிரபல நடிகர், நடிகைகள் படத்திலும் வேலை செய்துவிட்டேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கமல் சாருடன் ‘மகாநதி’, ரஜினி சாருடன் ‘எந்திரன்’, சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படங்களில் வேலை செய்திருக்கிறேன்.

தெலுங்கு ‘சந்திரமுகி’யிலும் வேலை செய்தேன். ஒரு படத்தில் ஒலிப்பதிவு என்பது மூன்று விதங்கள் உண்டு. வசனங்களின் ஒலிப்பதிவு, எஃபெக்ட்ஸ் பதிவு, இசை மற்றும் பாடல் பதிவு. இவை மூன்றும் வேறு வேறு ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரிவில் வல்லுநர்களாக  விளங்குவார்கள். இவை தவிர்த்து டால்ஃபி மிக்ஸிங், டால்ஃபி 5.1 மிக்ஸிங் என தனித்தனியாக உள்ளது. ரெக்கார்டிங் தனி, மிக்ஸிங் தனி. ரெக்கார்ட் பண்ணித் தருவதை மிக்ஸிங் தியேட்டரில் இணைப்பார்கள். நான் குரல் ஒலிப்பதிவு, எஃபெக்ட்ஸ் மற்றும் மிக்சிங் துறைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

படத்தின் மொத்த ஒலிக்கும் எங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். படத்தை மேலே உயர்த்திப் பிடிக்கும் இடத்தில் எங்கள் துறை உள்ளது. நீங்கள்தான் இந்தப் படத்தில் ஒலிப்பொறியாளராக வேண்டும் என நம்மைத் தேடி வருவதுதான் எங்களுக்கான அங்கீகாரம். படம் வெளியாகும் தேதி நெருங்கும்போது இரவெல்லாம் வேலை செய்யும் நிலை இருக்கும். அதிகாலை ஏழு மணிக்கு முன்பே ஸ்டுடியோவில் ரெடியாக இருக்க வேண்டும். எனவேதான் பெண்களுக்கு இத்துறை சாத்தியப்படவில்லை.

எனது கணவரும் இதே துறையில் இயங்குவதால் எங்களுக்குள் புரிதல் உள்ளது. இந்தத் துறையில் பெண்கள் இயங்க குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புத் தேவை. வெளியில் இருந்து பார்த்தால் என்ன ரெக்கார்டிங்தானே எனத் தோன்றும். ஆனால் மிகவும் கடினமான வேலை. ஒவ்வொரு நடிகரின் வசனங்களையும் ஒவ்வொரு வார்த்தையாக பதிவு செய்து, சிங்க் பண்ணி, லெவல் பண்ணி மிக்ஸிங் செய்ய அனுப்ப வேண்டும். சில வசனங்களை 20ல் இருந்து 30 முறை கூட திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய நிலை இருக்கும்.

சில வசனங்களுக்கும், வார்த்தைகளுக்கும் பல முறை டேக் போக வேண்டியது இருக்கும். அதீத பொறுமை வேண்டும். நாம் செய்வது ஒரு படத்தில் சிறிய பங்களிப்பு போல தோன்றினாலும் அந்த படத்திற்கு அது வெற்றியைத் தரக்கூடியது. வசனம் என்பது இயக்குநரின் இதயம் போன்றது. ஒரு நடிகர் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும்போது அவரின் குரல் மாறும். ஓய்வு தேவைப்படும். நடிகர் தண்ணீர் குடித்துவிட்டு பேசினால்கூட வயிற்றிலிருந்து கேட்கும் ‘கொடகொட’ சத்தம் கூட மிகத் தெளிவாக பதிவாகும். அந்த மெல்லிய சத்தம் டிடிஎஸ் 5.1 டால்பியில் கேட்கும்போது சவுண்ட் வெளியே பெரிதாக டிஸ்டப் ஆகும்.

சில நேரங்களில் சுவாசிக்கும்போது செய்யும் லிப் நாய்ஸ் கூட துல்லியமாகப் பதிவாகும். நாய்ஸ் இல்லாமல் ப்ளோஸ் இல்லாமல் பதிவு செய்து அதை சிங்க் பண்ணி, எடிட் பண்ணி, லெவல் செய்து அதன் பிறகே மிக்சிங் செய்ய கச்சிதமாக அனுப்ப வேண்டும். பைலட் டிராக் என்பது ரஃப்பாக வரும். ரீ-புரொடக் ஷன் என்பது ‘சூட்டிங் வித்தவுட் கேமரா’. இன்ஜினியர் சீட் என்பது எங்களுக்கு சி.எம். சீட் மாதிரி. டாக் பேக் (talk back) ப்ரஸ் செய்து, ‘டேக் ஓகே’, ‘ஒன்ஸ் மோர்’ என பெரிய நடிகர்களுக்குச் சொல்வது எங்களைப் பொறுத்தவரை பெரிய விஷயம்.

சின்னச் சின்ன வேலைகளை செய்துதான் அந்த இடத்தைப் பிடிப்போம். ஒரு படத்தின் ஒலிப்பதிவு என்பது ஒரு கூட்டு முயற்சி. இசையமைப்பாளர், வசன ஒலிப் பதிவாளர், எஃபெக்ட்ஸ் பதிவு செய்பவர், மிக்ஸிங் இன்ஜினியர் என நாம் கேட்கும் ஒவ்வொரு சப்தத்திற்குப் பின்னும் பல ரெக்கார்டிஸ்ட்டுகளின் உழைப்பும் மேலும் பல கலைஞர்களின் இரவு பகலான உழைப்பும் உள்ளது. அந்த உழைப்புக்கு மரியாதை கொடுத்தாவது தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்” என முடித்தார்.

- மகேஸ்வரி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்