சதுரங்க வேட்டை



‘செஸ் சாம்பியன் ஆனந்த்’... இந்த பெயரை மறக்க முடியாது. அந்த அளவு மக்கள் மனதில் நிறைந்தவர் அவர். இப்போது செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டில் பேர் சொல்லும்படி தமிழகத்தில் பெண் வீராங்கனை ஒருவர் உருவாகி வருகிறார். ரஷ்யாவில் உலக அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடந்த சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி. முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவர் நமக்களித்தப் பேட்டி…

“திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிதான் எனது சொந்த ஊர், அங்கேதான் பிறந்து வளர்ந்தேன். சின்ன வயதில் என் பாட்டி கூட வீட்டில் செஸ் விளையாடுவேன். அதுக்குப்பிறகு 2வது வகுப்புப் படிக்கும் போது முறையாக செஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்பாதான் கொண்டு போய் செஸ் வகுப்பில் சேர்த்தாங்க. கத்துக்க ஆரம்பிச்ச புதிதில் ஓரளவுக்குத்தான் விருப்பம் இருந்தது.

ஆனால் ஒரு நாள் அப்பா ஒரு டோர்னமென்ட் கூட்டிட்டு போனாங்க. அங்கே நான் தோத்துப் போயிட்டேன். அப்போ அங்கே திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த பாலகுணசேகரன் சார் என்னை சமாதானப்படுத்த எனக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்தாங்க. அதில் இருந்து செஸ் விளையாடுவதில் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டது. கோச்சிங் தொடர்ந்து போக ஆரம்பிச்சேன். அங்க எனக்கு நல்லா சொல்லித்தந்தாங்க.

நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். வீட்டில் அப்பாவோடவும் விளையாடுவேன். 2010ம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த பள்ளிகளுக்கான சதுரங்கப்போட்டி இலங்கையில் நடந்தது. அதில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வாங்கினேன். 2012 வரைக்கும் திருத்துறைப்பூண்டியில்தான் இருந்தேன். ஆரம்பக்கட்டம் தாண்டின பிறகு எனக்கு கோச்சிங் தேவைப்பட்டது. எனவே திருத்துறைப்பூண்டி கோச்சிங் பத்தாது என முடிவெடுத்தோம்.

அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் எல்லா போட்டிகளுக்கும் நாங்க சென்னைக்கு வந்து வந்து போக வேண்டி இருந்தது. அதனாலும் சென்னைக்கு வருவதுதான் நல்லது என தீர்மானித்து நான் அம்மா, தங்கை மட்டும் 2013ம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். அப்பா இப்பவும் திருத்துறைப்பூண்டியில் பிஸினஸ் பண்ணிட்டு இருக்கார்.
 
சென்னையில் செஸ் குருக்கள் அகாடமி யில் கத்துக்கிறேன். ஆர்.பி. ரமேஷ் தான் எனது குரு. என்னுடைய கோச் எனக்கு ரொம்ப நல்லா சொல்லித்தருவாங்க. சென்னை வந்த பிறகு நிறைய போட்டிகளில் ஆடி இருக்கேன். நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருப்பேன். பல போட்டிகள்ல ஜெயிச்சி இருக்கேன்.
 
2014ம் ஆண்டு அது. அப்போது எனக்கு 13 வயதிற்கும் குறைவு. மாநில அளவில் 13 வயதிற்குக் குறைவானவர்களுக்கு இடையே நடந்த போட்டி மற்றும் மாநில அளவில் 15 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இடையே நடந்த இரு போட்டிகளிலும் கலந்து கொண்டு நான் முதலாவதாக வந்தேன். பிறகு 2016ம் ஆண்டு மாநில அளவில் மகளிருக்கான போட்டி நடைபெற்றது. இதில் எல்லா வயது பெண்களும் கலந்து கொள்ளலாம். அதிலும் நான் முதலாவதாக வந்தேன்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய அளவில் பள்ளிகளுக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய அளவில் முதலாவதாக வந்தேன். அதனால் உலகளவில் நடைபெற இருந்த போட்டிக்குத் தேர்வானேன். அதற்காக இந்த வருடம் முழுவதும் தயார் செய்ய வேண்டி இருந்தது. பள்ளிக்கு டெஸ்ட், எக்ஸாம் போன்ற முக்கியமான நாட்களில் மட்டும் சென்றேன். பல நாட்கள் பயிற்சியில் ஈடுபடுவதால் பள்ளிக்கு அவ்வளவாக செல்ல முடியவில்லை. நான் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் என்பதால் எப்போதும் எல்லா பள்ளிகளிலுமே பத்தாம் வகுப்பு பாடங்களில் தீவிரப் பயிற்சி இருக்கும். ஆனால் நான் இந்த உலகளாவியப் போட்டியில் ஜெயிப்பதற்காக எனக்குப் பயிற்சிக்குத் தேவையான விடுமுறையை எனது பள்ளி நிர்வாகம் அளித்து உதவியது. பாடத்தை நான் புரிந்து கொள்ள, எழுத என எல்லா விஷயத்திலும் எனது ஆசிரியர்களும், எனது வகுப்பு மாணவிகளும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதற்காக எனது பள்ளி நிர்வாகத்திற்கும், எனது ஆசிரியர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
 
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யாவில் பள்ளிகளுக்கு இடையே ஆன உலகளாவிய  சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அதில் துருக்கி, உஸ்பெகிஸ்தான் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுடன் விளையாடி வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனையைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றேன். எனக்கு தங்கப்பதக்கத்துடன் WFM அவார்டும் கொடுத்தார்கள். ரொம்ப சந்தோஷமாக பெருமையாக இருந்தது” என்கிறார் ஹர்ஷினி உற்சாகத்துடன்.

ஹர்ஷினிக்குச் சொந்த ஊரில் டவுன் லயன்ஸ்  கிளப் சார்பில் பாராட்டு விழா நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டிற்கு  பெருமை சேர்க்கும் இந்த தங்க மங்கையைபாராட்டி போற்ற வேண்டியது நமது கடமையும் கூட இல்லையா?

- ஸ்ரீதேவிமோகன்

சின்ன வயதிலே நல்லா செஸ் ஆடுவா
- ஹர்ஷினியின் தாய் கவிதா


ஹர்ஷினியின் தாய் கவிதா தன் மகள் குறித்துப் பேசுகையில், “நான் ஹவுஸ்வைஃப். அவர் பிஸினஸ் பண்றார். ஆனால் இவ என் மாமியாரோடு ஆர்வமாக செஸ் விளையாடறது பார்த்துட்டு நாங்க அவளை செஸ் விளையாட்டில் சேர்த்துவிட்டோம். சின்ன வயதிலே நல்லா ஆட ஆரம்பிச்சா. போட்டிகளிலும் கலந்துக்க ஆரம்பிச்சா. 2008ல் மாவட்ட அளவில் யங் அச்சீவ்மென்ட் (YOUNG ACHIEVEMENT AWARD) அவார்டு வாங்கினாள்.

நானும் அவரும் அவளைப் போட்டிகளுக்காக அடிக்கடி சென்னைக்கும் வேறு மாநிலங்களுக்கும் மாத்தி மாத்தி கூட்டிட்டுப் போவோம். வீட்ல அவளோடு விளையாடுவோம். ஒரு கட்டத்துல அவ ரேஞ்ச் அதிகரித்தது. எங்களால அவ கூட விளையாட முடியலை. நிறைய போட்டிகள்ல ஜெயிக்க ஆரம்பிச்சா. எங்களால அடிக்கடி சென்னைக்கு அலைய முடியலை. ஆசிய அளவிலும் ஜெயிக்க ஆரம்பித்த பிறகு இனி இந்த அளவு கோச்சிங் போதாது என சென்னைக்கே ஷிப்ட் ஆகி வந்தோம்.

முன்ன இருந்தவங்களும் சரி, இப்ப இருக்கிற மாஸ்டரும் சரி அவளுக்கு நல்ல முறையில் சொல்லிக்கொடுத்தாங்க. ரமேஷ் மாஸ்டர் நிறைய டிப்ஸ் கொடுப்பார். எந்நேரமானாலும் என்ன டவுட் கேட்டாலும் சொல்லித் தருவார். மேசேஜ் அனுப்பி கேட்டாலும் உடனே பதில் சொல்வார்.

அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்க மாட்டார். அவளது திறமையை மேலும் நல்லா ஊக்குவித்து இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். முன்னர் போட்டி சம்பந்தமாக ஊர்களுக்கு அலையும்போது கஷ்டமாக இருந்தாலும் இப்ப நம்ம மக இந்த அளவுக்கு ஜெயித்திருக்கிறாள்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றார் மகிழ்ச்சியுடன்.